உள்நாட்டு யுத்தம் இடம் பெற்ற கிராமங்களின் மீளெழுச்சி என்பது இலங்கையின் ஜனநாயகத்தில் புரட்டப்படாத அத்தியாயம் என்று கூறலாம். தீவகத்தைப் பொறுத்தவரை யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்து சொல்லொணா இடர்களுக்குள்ளான கிராமங்கள் அதிகம்.
அக்கிராமங்களுள் இன்றுவரை மீள்குடியேற்றப்படாத பூர்வீக நிலங்களும் உண்டு. காலங்காலமாக சந்ததி சந்ததியாக வாழ்ந்த நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு எட்டாத கனியாக இருந்த காலம் போய் இன்று முப்படைகளின் முகாம்கள் அமைக்கும் பணிக்காக அளந்து கொடுக்கின்ற காலம் உருவாகியுள்ளதுதான் காலக்கொடுமை.
பூர்வீக நிலங்களை குடியிருப்புக்காணிகளாகவும் விளை நிலங்களாகவும் பாவித்த மக்கள் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்துப் பார்த்து இருதயம் பொருமுகின்ற நிலை என்பது இலங்கைத் திருநாட்டில் மட்டுமே நிகழ்ந்தேறவல்லது. அந்தளவிற்கு அரசியல்வாதிகளோ அல்லது அரச அதிகார வர்க்கத்தினரோ சுதேச மக்களது நலனைப் புறந்தள்ளி மேற்போந்த நடவடிக்கைகளுக்காக தலைசாய்க்கின்ற ஜனநாயகம் தான் எமது நாட்டின் ஜனநாயகம்.
முடிக்குரிய காணிகளை செல்வந்தர்களுக்கு குத்தகைக்கும், உல்லாச விடுதிகளுக்கு விலைபேசியும் அந்நியர்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்தும் அரசும் அரச அதிகாரிகளும் அப்பாவி மக்களின் பூர்வீகக் காணிகளை வலிந்து கைப்பற்றி பெரும்பான்மைப் பிரதிநிதிகளை குளிர்விப்பதாக எண்ணி படையினருக்கும் கடற்படையினருக்கும் விமானப் படையினருக்கும் முகாம் அமைக்கக் கொடுக்கின்ற கைங்கரியத்தில் தம்மை ஈடுபடுத்துகின்ற நியாயம் வடமாகாணத்தில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று.
அவ்வாறுதான் யாழ்ப்பாண நகரிலிருந்து மிக அண்மையில் இருக்கிறதும் இலகுவாக அபிவிருத்தியடையச் செய்யக் கூடியதுமான மண்டைதீவு எனும் கிராமத்திலும் நிகழ்கிறது. யுத்தத்தின் பின் வடக்கு நோக்கிப் படையயடுத்த பொருளாதாரப் புரட்சியாளரின் செயற்றிட்டங்களுக்கு உல்லாச விடுதிகளுக்கு ஏனைய வியாபார நோக்கங்களுக்கு முடிக்குரிய காணிகளை விலைபேசி விற்றுவிட்டு வாழ்வாதாரச் சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் அப்பாவி மக்களின் காணிகளைச் சுவீகரித்து கடற்படையினருக்குக் கொடுப்பதற்கான ஆயத்தங்கள் மண்டைதீவில் நிகழ்கிறது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனை.
யுத்த முடிவின் பின்னர் தான் குறித்த பூர்வீக விளைநில மற்றும் குடியிருப்புக்காணிகளில் கடற்படை முகாமமைத்தது. அப்போதும் மண்டைதீவு கிராம மக்கள் எதிர்த்தனர். அவ் எதிர்ப்பால் குறித்த இடங்களை மட்டும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு சில விளைச்சல் நிலங்களை விட நேர்ந்தது கடற்படைக்கு. அன்றைக்கு அரசியல்வாதிகளிடமும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடமும் விடுத்த கோரிக்கைகள் நீர்மேல் எழுத்தாயின. இன்று அக்காணிகளை நில அளவை செய்து கடற்படைக்கு உரியதாக்கும் முயற்சி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ஏக்கர் 01 றூட் 10 பேர்ச் மேட்டுநிலக் காணிகளே இவ்வாறு அளவை செய்யப்பட்டு சுவீகரிக்க முனையப்பட்டுள்ளது.
மண்டைதீவு முதலாம் வட்டாரத்தில் ஜே/07 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மேற்படி மேட்டுக் காணிகள் மிளகாய், வெங்காயம், தக்காளி, வெண்டி, கத்தரி , பயிற்றை போன்ற காய்கறித் தோட்டங்களாலும் வர்த்தகப் பயிரான புகையிலைச் செய்கையாலும் ஏனைய உப பயிரினச் செய்கையாலும் நிறைந்து அந்நில உரிமையாளர்களின் வாழ்வாதாரத் தினை ஏற்றியிருந்தன.
1990 ஆம் ஆண்டு மண்டைதீவு மக்கள் வலிந்து இடம்யயர்க்கப்பட்டதிலிருந்து இன்று வரை அக்காணிகளைப் பார்வையிடுவதற்கோ விவசாயம் செய்வதற்கோ உரிமையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று அங்கு அமைந்துள்ள கடற்படை முகாமினை நிலையாகவும் விரிவாகவும் அமைக்கும் நோக்குடன் 11.04.2019 அன்று நில அளவைத் திணைக்களம் மூலம் அளவை செய்யப் படுவதாக உரிமை யாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
குடியிருப்பில்லை வாழ்வாதார நிலங் கள் இல்லை, நாட்டின் முதன்மை உற்பத்திச் செய்கைக்குரிய பயிரிடு நிலங்கள் இல்லை. ஆனால் கடற்படைக்கு மட்டும் இந்நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றமை என்பது சுதேச கிராமத்தவர்களுக்கு அதிலும் சிறுபான்மைத் தமிழினத்திற்கு அர சாங்கமும் துணைபோகும் அரசியல்வாதிகளும் செய்கின்ற உச்சக்கட்ட அநீதி என்றன்றி வேறேதுவுமில்லை.
11.04.2019 ஆம் திகதியில் மக்களின் போராட்டத்தால் நிலஅளவை மாத்திரம் நிறுத்தப்பட்டு கலைக்கப்பட்டாலும் மேலும் வரும் காலங்களில் சத்தமின்றி என்னென்ன காரியங்கள் நிகழவுள்ளதோ என்ற ஆதங்கத்தில் அக்கிராமமக்கள் உள்ளமைதான் உண்மை.
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”என்றார் மகாகவி பாரதியார். இங்கோ உணவினை உற்பத்தி செய்யும் நிலங்களே பாதுகாப்புப் பிரிவின் வாசஸ்தலங்களாக்கப்படுகின்ற அநீதி அரங்கேறுகிறது.
விடுதலை, தன்னாட்சி, சுதந்திரம் என்று கோசமிடுகின்ற அரசியல்வாதிகள் அரசமரக் காணிகளை ஆக்கிரமிக்கும் பெளத்தருக்கும் விளைநிலங்களில் கட்டடங்களை விரிவுபடுத்தும் முப்படைக்கும் காணிகள் சுவீகரிப்பதைக் கண்டுகொள்ளாது பறிக்கப்படும் நிலத்திற்கு சுயாட்சியுரிமை கேட்கும் பகுத்தறிவற்ற அவலநிலை ஆசியாவின் ஆச்சரியத்தில் மட்டுமே நிகழத்தக்கது.
அரச காணிகளை ஏலத்தில் வழங்கி விட்டு கிராமத்தவர்களின் நிலங்களை அரசுடைமையாக்கி வாழ்வாதார சவால் மிகுந்தவர்களாக்கி மகிழ்கின்ற நிலை உள்ள வரைஎம் தாகம் தணியாது. வாழ்வியலுக்கான போராட்டமும் நிறைவுறாது.
உரியதரப்பினர்களே இது உங்கள் கவனத்திற்கு, உங்கள் ஓய்வுக் காலங்களை எம் மக்களின் சாபங்களினால் இருள் மயமாக்கி விடாதீர்கள்.
சிறி திவ்வியன்
(வலம்புரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது)
நன்றி வலம்புரிக்கு
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்