பனம் பொருளில் பலகாரங்களும் உள்ளது கவனத்தில் கொள்க
இங்கே நீங்கள் படத்தில் காண்பது எனது நண்பன் ஒருவனின் சிபார்சில் புலம்பெயர் நாடு ஒன்றில் அவனின் உறவினர் ஒருவனின் திருமண வைபவத்தில் வருகைதரும் விருந்தினர்களுக்கு பலகாரம் (sweets) வைத்து அவர்கள் புறப்படும் போது அன்பளிப்பாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்.
தீவக பிரதேசம் ஒன்றில் ஓடர் கொடுத்து இவ்வாறான 600 பெட்டிகளை தயாரிக்க சொல்லி அதனை உரிய நாட்டுக்கு அனுப்பிவைக்கின்றான்.
இதனால் கிடைக்கின்ற பலாபலன்கள்
1. அன்பளிப்பு வழங்க பயன்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற ஒவ்வாத பொருட்களுக்கான மாற்றாக அமைகின்றது.
2. பலரும் விரும்பும் வகையில் பாரம்பரிய பொருளாக அமைவதால் இதனை வதிவிடத்தில் ஒரு அலங்கார பொருளாக காட்சிப்படுத்தமுடியும்
3. (மிக முக்கியமான காரணம் இதுதான் )இந்த பெட்டி உற்பத்தியை ஊரைச்சேர்ந்த ஓர் ஏழை குடும்பத்திற்கு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ,உற்பத்தி ஊக்கத்திற்கும் வழி சமைத்ததாக அமைவதோடு அவர்களின் சுயசார்பு பொருளாதாரத்திற்கும் பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு மற்றவர்களுக்கும் இதனை முன்வைத்து அவர்களின் வேலை வாய்ப்பை தொடர்ச்சியுற வைக்க முடியும் .
நாங்களும் சிந்திப்போம், இன்றைக்கு எங்கள் ஊரில் வசிக்கின்ற குடும்பத்தவர்கள் அனைவரும் விளிம்புநிலைக்கும் கீழான பொருளாதார வலுவுள்ளவர்களாகவும் ,முறைமையான வேலை வாய்ப்பைக் கொண்டிராதவர்களாகவும் காணப்படுகின்ற சூழ்நிலையில் அவர்களுக்கான உண்மையான உதவியாகவும் அக் குடும்பங்களின் அபிவிருத்தி நோக்கிலான வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பதாகவும் இவ்வாறு அவர்களின் உற்பத்திசார் ஊக்குவிப்புகளுக்கு வாய்பளித்துக்கொடுப்பதே ஆகச் சிறந்த வழியாகும் .எங்களின் உதவிகள் யாவும் அங்கே வசிக்கின்ற குடும்பத்தவர்களின் உழைப்பை வலுப்படுத்துவதாகவும் சீரான ஆரோக்கிய சமூக பொருளாதார நிலையில் அவர்களை வளர்த்தெடுப்பதாகவும் அமைய வேண்டும்.
இன்றைக்கு மண்டைதீவின் அடையாளம் என்பது அங்கு வசிக்கின்ற மக்களே ,அவர்களின் முன்னேற்றம்தான் ஊரின் முன்னேற்றம் நாங்கள் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்ற நிலையில் ஊரின் உரிமை என்பது அவர்களுக்கு அடுத்த நிலைதான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஊரின் அவசிய தேவையான முடிவுகளை நாங்கள் தீர்மானிப்பதும் பொருந்தாத பெளதீக அபிவிருத்தித்திட்டங்
களை தன்னிச்சையாக பொதுநிதிகள் மூலம் உருவாக்கி வீண்டிப்பதையும் தவிர்க்க வேண்டும் .எங்களிடம்தான் கல்வி பலம் பணபலம் இருக்கிறது என்ற தோரணையில் முடிவுகளை திணிப்பதும் என்றைக்கும் உதவப்போவதில்லை.
எனவே எங்களின் ஊர் நோக்கிய சிந்தனை என்பது அனைவரதும் ஒத்துழைப்பு பலரதும் ஆலோசனைகள் எல்லோரதும் ஒற்றுமை என்ற விதமாக அமைவதென்பதே முதன்மையானதாகும் இதில் பிரதேச வாதம் ,மத வாதம் குறுகிய மட்டமான தட்டையான சிந்தனைகள் பரவாது பார்ப்பது என்பதே ஊர் வளர உதவும் என்பதே உண்மையாகும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்