திருவள்ளுவர் சொன்னபடி,”கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக…’ என்பது, வாழ்வில் மிக, மிக முக்கியம். படிப்பதன் நோக்கம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. “அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்…’ என்று, முதல் வகுப்பில், ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை, கடைசி வரை கடைபிடிப்பவனே நிஜமான கல்வியாளன். இதற்காகவே, சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம்.
சரஸ்வதிதேவியின் சிம்மாசனமான வெள்ளைத் தாமரை, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. தாமரைப்பூவின் வடிவத்தை உற்று நோக்கினால், அதன் இதழ்கள் பரந்து விரிந்திருக்கும். அதன் காம்பு நீருக்குள் மூழ்கியிருக்கும். இன்னும் உள்ளே இறங்கினால், கொடிகள் ஆங்காங்கே பின்னி, ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாமல் கிடக்கும். தாமரையின் வெள்ளை நிறம், ஒருவன் கற்கும் கல்வி, மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அவ்வாறு கற்கும் கல்வி, ஆழமான சிந்தனையை உருவாக்க வேண்டும் என்பதை, அதன் நீண்ட காம்பு எடுத்துக் காட்டுகிறது. அந்தக் கல்வி பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதை, அதன் விரிந்த இதழ்கள் சுட்டிக் காட்டுகின்றன.
ஒருவன் கற்கும் கல்வி, அவனுக்கு மட்டுமல்ல, அது உலகத்துக்கே பயன்படும் என்பதை, அதன் பின்னிப் பிணைந்த கொடிகள் தெளிவுபடுத்துகின்றன. படிப்பும் இறைவனை அடையவே பயன்பட வேண்டும், பற்றற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதையே, தாமரை இலையில் பட்டும் படாமலும் ஒட்டியிருக்கும் தண்ணீர் குறிக்கிறது. இப்படி, தன் சிம்மாசனத்தைக் கொண்டே அவள் உலகுக்கு நல்லறிவு புகட்டுகிறாள்.
வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்பதை, அவளது வீணை அறிவுறுத்துகிறது. அவளது வெள்ளைப் புடவை எளிமையை வலியுறுத்துகிறது. அந்தப் புடவை சரஸ்வதிக்கு மட்டுமல்ல. மீனாட்சி, காந்திமதி, உலகாம்பிகை என்ற திருநாமங்களுடன் மதுரை, திருநெல்வேலி, பாபநாசம் ஆகிய தலங்களில் அன்னை ஆதிபராசக்தியாக காட்சியளிக்கிறாள். இந்தக் கோவில்களில், மாலை நேர பூஜையின் போது, அம்பாளுக்கு வெள்ளைப் புடவை அணிவித்து வித்யாதியாக (கல்வி தேவதை) வணங்குகின்றனர். மகாலட்சுமியும் கையில் ஏடுடன் வித்யாலட்சுமியாக காட்சியளிக்கிறாள். ஆண் தெய்வங்களிலும் வித்யாகணபதி, தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர் ஆகியோர் கல்விக்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர்.
சரஸ்வதியின் குடும்பம் மிகவும் எளிமையானது. அவளது கணவர் பிரம்மாவுக்கு சிவன், பெருமாளைப் போல அதிக கோவில்கள் இல்லை. சில கோவில்களில் சன்னிதி இருந்தாலும், பூஜை நடப்பதில்லை. தன் கணவருக்கு கோவில் இல்லாததால், சரஸ்வதி, தனக்கு கோவில்கள் வேண்டும் என நினைக்கவில்லை. அவளுக்கும் பக்தர்கள் எழுப்பிய ஒன்றிரண்டு கோவில்களே உள்ளன. அவர்களது பிள்ளை நாரதருக்கும் கோவில்கள் எழவில்லை. ஒரு சாபம் காரணமாக பிரம்மாவுக்கு கோவில் இல்லை என்று புராணங்கள் கூறினாலும், குடும்பத் தலைவருக்கே கோவில் இல்லை என்பதால், தங்களுக்கும் கோவில் வேண்டாம் என மனைவியும், மகனும் விட்டுக் கொடுத்து, உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது சரஸ்வதியின் குடும்பம்.
பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து விட்டால், குறைந்து போகும். வீரம் என்பது, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மட்டும் தான்; வயதாகி விட்டால், சரீரம் ஒத்துழைக்காது. ஆனால், கல்வி மட்டும் யாருக்கு கற்றுக் கொடுத்தாலும், குறைவதே இல்லை; மாறாக வளரும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுத்தாலும், அது கேட்கும் சந்தேகம், நம் சிந்தனையைத் தூண்டி விடும். அதை தெளிவுபடுத்த மேலும் பல நூல்களை புரட்ட வேண்டியிருக்கும். வாழ்வின் இறுதி வரைக்கும் படிக்கும் மனிதர்களை இப்போதும் பார்க்கிறோம். ஆக, அள்ள, அள்ள குறையாத கல்விச் செல்வத்தை தருபவளாக சரஸ்வதிதேவி விளங்குகிறாள்.
சரஸ்வதி பூஜை மிகவும் எளிமையானது. அவளுக்கு நைவேத்யமாக அவல், பொரி போதும். விநாயகருக்குரிய அருகம்புல் மாலை அவளுக்கும் ஏற்றது. சரஸ்வதி தேவியை வணங்கும் போதெல்லாம், அவளது வெள்ளைத் தாமரை கண்ணில் பட வேண்டும். பரந்த வெள்ளை மனதுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்