உங்களின் உள் விரோதி யார்?
யோசித்து பாருங்கள் யாரென்று? உங்களுக்கு பிடிக்காதவர்கள் அனைவரும் நினைவுக்கு வருவார்கள் அப்படித்தானே…!
இந்த உலகில் நல்ல நண்பர்களும் உண்டு, உடனிருந்து குழி தோண்டும் துரோகிகளும் உண்டு. இவர்களெல்லாம் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் உருவானவர்கள். இவர்களால் ஏற்படும் கெடுதலை விட உங்கள் முன்னேற்றத்தை அதிகம் கெடுப்பது யார்? உங்களால் யூகிக்க முடிகிறதா?
உங்களுக்கு தெரிந்த பல விஷயங்கள் உங்களுக்குள்ளேயே முடங்கி போயிருக்கும், ஒரு நிமிடம் யோசித்து, பின் வாங்காமல் அதை செய்திருந்தால் நமக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கும் என பல விஷயங்களில் நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
நீங்கள் சொல்ல நினைத்த கருத்தை தொண்டை குழியிலேயே விழுங்கி இருப்பீர்கள் ஏனென்றால், எங்கே நாம் தவறாக கூறிவிடுவோமோ?
இதனால் நம்மை பார்த்து பலர் சிரித்து விடுவார்களோ? என்று பல விதங்களில் குழப்பிக் கொண்டு உங்களின் முன்னேற்றத்திற்கு நீங்களே தடைக்கல்லாக இருந்திருப்பீர்கள் அல்லவா, அதுதான் உங்கள் முதல் எதிரி அதற்கு பெயர் தான் தாழ்வு மனப்பான்மை.
உங்களின் முன்னேற்றத்தை உங்களை தவிர வேறு எவராலும் தடுக்க முடியாது. தளிவான ஒரு முடிவை எடுத்தபின் உங்களின் திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்தால் சிறந்த முறையில் வெளிக்காட்டுங்கள். இதுபோன்ற வாய்ப்பு பலருக்கு கிடைக்காமல் இருக்கக்கூடும். முதலில் உங்களை நீங்களே நம்புங்கள் உங்களால் இது சாத்தியமென்று, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால் மற்றவர்கள் எவ்வாறு உங்களை நம்புவார்கள்.
இந்த உள் விரோதியை எவ்வாறு நம்மை விட்டு விரட்டுவது இதோ சில டிப்ஸ்….
நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் சொன்னாலும், ரசித்தாலும் தான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
பிற மொழிகளில் சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.
என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை, இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
கேள்வி கேட்பதற்கும், உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழிப்புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்துவிட்டு முன் செல்லுங்கள்.
உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
உங்களின் திறமை விலைமதிப்பில்லாதது என்பதை புரிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நாளையும் புது உத்வேகத்துடன் துவங்குங்கள் மொத்தத்தில் நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்…
Filed under: Allgemeines |
Ungal Karuththukkal Ellaam Unmaiyaanathavai Thaan,Aanaal?