பொங்கல் திருநாளன்று, புத்தரிசியுடன் புதுவெல்லத்தையும் பாலையும்கூட்டி, புதுப்பானையில் மஞ்சள்கிழங்கை இலையுடன் சேர்த்துக்கட்டி, “பொங்கலோ பொங்கல்! பால்பொங்கல்!” என்று மகிழ்ந்து குரவையிட்டு, நல்ல அறுவடைக்கு கதிரவனுக்கு நன்றிசெலுத்துவர் நம்தமிழ்ப் பெருமக்கள். இதை உழவர் திருநாளென்றும், மகர சங்கிராந்தி என்றும், உத்தராயணப் புண்யகாலம் என்றும் அனைவரும் கொண்டாடுகின்றனர்.
எப்பெயரைச் சொல்லிக் கொண்டாடினாலும், இத்திருநாள் கதிரவனுடன் தொடர்புள்ள ஒன்றேயாகும்.
அயராது, நெற்றி வியர்வை நிலத்தில்சிந்த, மாதக்கணக்கில் உழைத்த உழவர் – தகுந்த நேரத்தில் மாதந்தோறும் மும்மாரிமூலமும், அளவுக்கதிகமான வெப்பத்தால் பயிர்களைக் கருக்காமலும், நிறைந்த அறுவடையைத்தந்த ஆதவனுக்கு பொங்கல் நன்நாளில் நன்றிசெலுத்துகின்றனர். புதுப்பானையில் புத்தரிசி பொங்குவதைக் காணும் தமிழர் அந்நன்நாளைப் ‘பொங்கல்’ என்று பேணுகின்றனர்.
வானில் தெற்குநோக்கி நகர்ந்து செல்லும் சூரியன், தனது ஓட்டத்தை நிறுத்தி, வடக்குநோக்கி நடைபயிலத் துவங்கும் நாளை, ‘உத்தராயணப் புண்ணியகாலம்’ என்று வானவியலறிந்த இந்தியப்பெரியோர்கள் பகர்வர். ஆதவனின் இந்த வடக்கு-தெற்கு ஓட்டமே பருவகாலங்களையும், மழையையும் தோற்றுவிக்கிறது என்று அறிவியல் அறிவிக்கிறது.
பகலவன் தனுர்ராசியிலிருந்து மகரராசிக்குச் செல்வதை ‘மகர சங்கிராந்தி’ என்று வடமொழி சொல்கிறது.
அதுமட்டும்தானா?
ஆதவனுக்கும், நமக்கும் என்ன அப்படியொரு உறவு?
சுருங்கச் சொன்னால் ஆதவனில்லையேல் நம் உலகம் இல்லை, நாம் இல்லை, நாம் உண்ணும் உணவும் இல்லை, நமது அறிவும் இல்லவேயில்லை!
ஏன்?
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது”
என்று வள்ளுவர்பிரான் வழங்கியபடி மண்ணில் புல் தோன்றக்கூட விண்ணிலிருந்து மழை பொழியவேண்டும்; அம்மழைபொழிய சூரியன் வடக்கு-தெற்காக நடைபயின்று பருவகாலத்தையும், பருவமழையையும் தோற்றுவிக்கவேண்டும். எனவே, ஒருவர் ஊணுண்டாலும்சரி, ஊனுண்டாலும்சரி, மண்ணில் பயிர் விளையவேண்டும், மண்ணில் விளைவதை உண்ணும் உயிரினம் உண்டாகவேண்டும். அதற்கு ஆதவனின் ஒத்துழைப்பு கட்டாயம் நமக்கு வேண்டும்.
ஆதவனின் ஒளியையும், கரியமிலவாயுவையும் கையாண்டுதானே தாவரங்கள் வளருகின்றன! கதிரவனின் ஒளியின் சக்திதானே காய்களிலும், கனிகளிலும் சேமித்துவைக்கப்படுகிறது! கதிரவனின் அந்த சக்திதானே ஊணுண்ணும் மாந்தருக்கும், மிருகங்களுக்கும் உணவாகிறது! ஊனுண்ணும் மாந்தரும், மிருகங்களும், காய்-கனிகளை உண்டவற்றை உண்டுதானே கதிரவனின் அந்த சக்தியைப் பெறுகிறார்கள்!
வேதத்தில் மிகவும் போற்றப்படும், உருவாக்கியவர் யாரென்று தெரியாத, விசுவாமித்திர முனிவர் உணர்ந்தோதி மற்றவருக்களித்த காயத்திரி மந்திரத்தை ‘சந்தஸின் அன்னை’ [காயத்ரீம் ச்சந்தஸாம் மாதா] என்று சொல்லி ஓதுவார்கள். அந்த காயத்திரி மந்திரம் குறிப்பிடும் பரம்பொருள் பகலவனே என்று, சூரியப்பிரமாணப் பொருளும் சொல்வார்கள்.
“பூவுலகம், விண்ணுலகம், பாதாளவுலகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான, ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை [சூரியனை] நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அப்பரம்பொருள் [சூரியன்] எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்”
பாரதியாரும், தான் இயற்றிய ‘பாஞ்சாலி சபத’த்தில்,
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்; அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக” என்றே பாடிப் பரவியுள்ளார்.
எனவே, சூரியன்தான் அனைத்துக்கும் காரணம், நமது அறிவை ஊக்குவிக்க அவனது அருள் வேண்டும் என்பதை நமது ஆன்றோர்கள் என்றோ உள்ளி உணர்ந்துவிட்டார்கள் என்று தெரிகிறதல்லவா!
நாம் எதையும் ஒளியின்றிப் பார்க்கவியலாது. ஒளியில்லையேல் பார்வையில்லை; பார்வையில்லையேல் கல்வியில்லை; கல்வியில்லையேல் அறிவில்லை; அறிவில்லையேல் மாந்தருக்கு — இவ்வுலகமென்ன, எவ்வுலகமும் இல்லை!
இதையேதான் செந்நாப்போதாரும்,
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
தன் ஈர்ப்புச் சக்தியைக்கொண்டு இப்புவீயைச் சரியான பாதையில் சுற்றவைப்பதும் ஆதவன்தான். அதுமட்டுமா? ஒரே தூசுமண்டலமாக இருந்தவற்றை – தானாக உருவாகி, தன் விசையினால் அத்தூசுமண்டலத்தைத் தன்னைச் சுற்றிவரச்செய்து, தூசுகள் ஒன்றுசேர்ந்து இப்புவி உருவாகக் காரணமான, நாம் நேரில் காணும், நம் அனைவரும் உருவானமைக்குக் காரணகர்த்தாவும் இக்கதிரவன்தான். எனவேதான் கதிரவன் ஒரு கடவுளாக, நம்மால் வணங்கப்ப்டுகிறான்.
நம்மையும், நாமிருக்கும் இப்புவியையும், நமது உணவையும் உருவாக்கி, நமக்கு ஒளியையும், உஷ்ணத்தையும், ஈந்து, நம்மை வாழவைக்கும், நம்மைத் தினமும் வந்து பார்த்து, நமக்கு, “நான் இருக்கிறேன், உன்னைப் படைத்த கடவுள்!” என்று சொல்லி தரிசனமும் தரும் கதிரவனை – நமது கண்கண்ட தெய்வத்தை இப்பொங்கல் நன்நாளில் நினைவில்நிறுத்தி, நன்றிகூறுவோமாக!
Filed under: Allgemeines |
Ungal Anaivarukkum Enathu Iniya Maaddu Pongal Nal Vaazhlththukkal Uriththaakaddum Anbudan Ungalil Oruvan Sethu Thavam Germany