ஆஷாவுக்கு 20 வயது. இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி. எப்போதும் கலகலப்பாகப் பெற்றோர், தம்பி, தங்கையுடன் சிரித்துப் பேசும் இயல்புடைய பெண். சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையைச் செய்தபடியே இருப்பாள்.
சமீபமாய் ஆஷாவின் நடவடிக்கைகளில் மாற்றம். தேர்வுக்குப் படிக்கும்போது படபடப்பாகக் காணப்படுகிறாள். மற்றவர்களிடம் பேசுவதைக் குறைத்து க்கொண்டாள். எப்போதும் தனிமையையே விரும்புகிறாள். அவளின் பொருட்களை யாராவதுக் கேட்காமல் பயன்படுத்தினால் கூச்சல், சண்டை என வீட்டையே அமர்க்களப்படுத்தினாள். தனது பொருட்கள் தான் வைத்த இடத்தில்தான் உள்ளதா எனத் திரும்பத் திரும்ப சோதனையிட்டுக்கொண்டே இருக்கிறாள். ஆஷாவின் விநோதமான நடவடிக்கைகளைக் கண்டு வருந்திய பெற்றோர், அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். மருத்துவர், ஆஷாவுடன் 20 நிமிடங்கள் பேசியதன் மூலமாக ஆஷாவுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை ‘அப்ஸசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்’ (Obsessive compulsive disorder – OCD) எனப்படும் எண்ண சுழற்சி நோய் என புரிந்துகொண்டார். ஓ.சி.டி என்பது என்ன? இந்தப் பிரச்னை யாருக்கு எல்லாம் ஏற்படும்? இதன் அறிகுறிகள் என்னென்ன? தீர்வு என்ன?
அப்ஸசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்
‘அப்ஸசிவ்’ என்ற சொல்லுகுத் ‘துன்பத்தைத் தரக்கூடிய எண்ணம்’ என்று பொருள். ‘கம்பல்சிவ்’ என்றால் கட்டாயமாக ஒரு செயலில் ஈடுபடுதல். மனதுக்குள் எழும் தவறான எண்ணங்களிடம் இருந்து தப்பிக்க மனம் ஏதாவது ஒரு வேலையில் தன்னை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திக் கொள்ளும் மனநிலையை ‘ஓ.சி.டி’ என்கிறார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அவர் மனதை வருத்தும் ஒரு எண்ணம் மனதுக்குள் திரும்பத் திரும்பச் சுழன்றுகொண்டே இருக்கும். அந்த எண்ணம் ஏற்படுத்தும் வலி, குற்றவுணர்வு, அவஸ்தையில் இருந்து தப்பிப்பதற்காக, அனாவசிய சிந்தனை வரும். இதைச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என பாதிக்கப்பட்டவருக்குத் தோன்றும். எனவே இந்த பாதிப்பு உள்ளவர்கள் செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருப்பார்கள்.
உதாரணமாக, வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் முன், நன்றாகப் பூட்டி இருக்கிறோமா எனத் திரும்பத் திரும்ப சோதனை செய்துகொண்டே இருப்பார்கள். டீக்கடையில் பணம் கொடுத்துவிட்டு மீதிச்சில்லறையை வாங்கி பர்சில் போட்டுக்கொண்டு, சில்லறை வாங்கினோமா இல்லையா என்ற குழப்பத்தில் அடிக்கடி பர்ஸை சோதனை இட்டுக்கொண்டே இருப்பார்கள். சிலர், துலக்கிய பாத்திரங்களை எடுத்துவந்து மீண்டும் சுத்தம் செய்வார்கள். சிலர், வீட்டில் உள்ள பொருட்களை கலைத்து மீண்டும் அடுக்கிவைத்துக்கொண்டே இருப்பார்கள்.
யார் யாருக்கு ஏற்படலாம்?
பணிச்சுமை, வீட்டுப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை, உறவுச் சிக்கல்கள் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அதிகமாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இளம்பருவத்தினர் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக, 13-19 வயது உள்ள பதின் பருவத்தினர் இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள், பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயம், படிப்பில் தங்கள் மேல் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வைக்கும் அதீத எதிர்பார்ப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு ஓசிடி பிரச்னையில் சிக்குகிறார்கள்.
அறிகுறிகள்
*ஒரே இடத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள்.
*எப்போதும் தனிமையில் இருப்பதை விரும்புவார்கள்.
*எந்த செயலிலும் இவர்களுக்கு ஒருவித சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.
*திடீரென அதீத சுத்தத்தைக் கடைபிடிப்பார்கள்.
*குளியலறையில் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள்.
*தாங்கள் அடுக்கிவைத்தப் பொருட்கள் மற்றவர்களால் மாற்றி வைக்கப்படிருந்தாலோ கலைந்து கிடந்தாலோ சண்டை போடுவார்கள். கூச்சலிடுவார்கள்.
*ஷாப்பிங் மேனியா அதிகமாக இருக்கும். தனக்குத் தேவைப்படுகிறதோ இல்லையோ ஏதேனும் ஒரு பொருளை வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.
வகைகள்
ஓசிடி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து வகையான மனச்சிந்தனைகள் ஏற்படும்.
சுத்தம், அசுத்தம் பற்றிய சிந்தனை
அசுத்தமாக இருப்பது இவர்களுக்குப் பிடிக்காது. எப்போதும் சுத்தமாக இருக்க நினைப்பார்கள். தொடர்ந்து பல மணி நேரம் கைகழுவுதல், கறை அல்லது அழுக்கைத் துடைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். தாங்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள். ஆடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை வரிசையாக, நேர்த்தியாக அடுக்கிவைப்பார்கள். இவர்களது பொருட்கள் ஒழுங்கிலிருந்து சிறிது மாறுபட்டாலும் இவர்களுக்கு கோபம், படபடப்பு ஏற்படும்.
கடவுள் வழிபாடு பற்றிய சிந்தனை
கடவுள் பற்றிய சிந்தனை, இறப்பு, மறுஜென்மம், ஆவி, பேய் பற்றிய அமானுஷ்ய சிந்தனைகள் இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். ஒரு நாளில் அதிகமுறை கடவுளை வழிபடும் பழக்கம் இருக்கும். அருகில் பலர் இருந்தாலும் தனிமையாக உணர்வார்கள். நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காக இதே சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.
வன்முறையைப் பற்றிய சிந்தனை
தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று தங்களுக்கு வேண்டியவர்களைத் தாங்களே கொலை செய்வது, துன்புறுத்துவது போன்ற எண்ணங்கள் இவர்களது மனதில் ஓடிக்கொண்டிருக்கும். தங்களால் தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்கிற அச்சம் இவர்களது மனதில் எப்போதும் இருக்கும். இதனால், இவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
‘இது சரியா, தவறா’ எனும் குழப்பம்
ஓர் செயலைச் செய்துவிட்டு, தான் செய்தது சரியா… தவறா என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளைத் தவறாக இருந்தால், அதை ஏன் செய்தோம் என நினைத்து வருந்துவார்கள்.
பாலியல் தொடர்பான சிந்தனை
எப்போதாவது சிறுவயதில் செய்த பாலியல் தவறை நினைத்து குற்றவுணர்வில் துடிப்பார்கள். இதனால், இவர்களது துணையுடன் உடலுறவில் முழுமனதுடன் ஈடுபட முடியாது. இந்த எதிர்மறை எண்ணங்கள் இவர்களது மனதை ஆட்கொண்டு, இவர்களது செக்ஸ் ஆர்வத்தைக் கெடுக்கும்.
பரிசோதனை மற்றும் சிகிச்சை
காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரப்பி (Cognitive behavioral therapy) மூலமாக மனநல மருத்துவத்துக்கான சிகிச்சைக்கு வருபவரை பரிசோதனை செய்வர். இதில் மருத்துவர், எதிராளியின் பேச்சு, கேள்விக்குப் பதிலளிக்கும் வேகம், பார்வை, உடல் மொழி ஆகியவற்றைக் கண்காணிப்பார். இதன் மூலமாக அவருக்கு ஓசிடி உள்ளதா எனக் கண்டறிவார்.
ஆரம்பநிலையில் உள்ளவர்களை தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தித்தருவது போன்றவற்றின் மூலமாகவே குணப்படுத்திவிடலாம். பொதுவாக, இவர்களுக்கு மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் குறைவாகச் சுரக்கும். அவசியப்பட்டால் மருத்துவர் செரட்டோனின் சுரப்புக்கான மாத்திரைகளையும் பிற மூட் ஸ்டெபிலைசர்களையும் பரிந்துரைப்பார்கள்.
சிலருக்கு மாத்திரை சாப்பிடும் வரை எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சாப்பிடுவதை நிறுத்தியதும் மீண்டும் படபடப்பு, மனஅழுத்தம், தவறான எண்ணங்கள் அதிகரிக்கும். இவர்களுக்குத் தொடர் கவுன்சலிங் மற்றும் மருத்துவசிகிச்சைத் தேவைப்படலாம்.
நோயின் தாக்கம் அதிகரித்த சிலர், மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். குடும்பத்தார் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச்செல்ல முனைந்தாலும் ஒத்துழைக்க மாட்டார்கள். இவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில், சிறிய அளவில் மயக்க மருந்து கொடுத்துதான் சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டி இருக்கும். இவர்களுக்கு, ஆழ்மன எண்ணங்களை வெளிக்கொண்டு வந்து தீர்வு காணும் சைக்கலாஜிக்கல் தெரப்பி சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக, இந்த நிலை ஏற்படுவது அரிதுதான்.
ஓசிடியில் இருந்து விடுபட வழிகள்
உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மனம்விட்டு பேசுவதே ஓசிடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்தத் தீர்வு. இதனால், மனஅழுத்தம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளது.
எப்போதும் மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். யோகா, மூச்சுப் பயிற்சிகள், உடற்பயிற்சி, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுதல், நடனம் ஆடுவது, பிடித்த பாடலைக் கேட்பது, சுயமுன்னேற்றப் புத்தகங்கள் வாசிப்பது போன்ற பழக்கங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான எளிய வழிகள்.
நன்றி –
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்