• நவம்பர் 2016
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

உங்கள் யோகம் எப்படி? ??

5DIAMONDருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியம். லக்னத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு பாவம் பற்றியும், அந்தந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம், அதனால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும் கணிக்கமுடியும்.

ஒவ்வொரு லக்னத்துக்கும் லக்னாதிபதி மாறுபடுவார். எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்துக்கு உரிய அதிபதி ஜாதகத்தில் வலுப் பெற்று இருக்கவேண்டும். அப்போதுதான் யோக பலன் களை எதிர்பார்க்கமுடியும். லக்னாதிபதிக்கு அடுத்து அந்தக் குறிப்பிட்ட லக்னத்துக்கு யோக பலன்களைத் தரும் கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் ஜாதகருக்கு யோக பலன்கள் நடைபெறும்.

லக்னம் எந்த ராசியோ அந்த ராசிக்கு உரிய கிரகம்தான் லக்னாதிபதி. இனி, ஒவ்வொரு லக்னத்துக்கும் உரிய லக்னாதிபதிகளை அறிவோம்.

மேஷம் மற்றும் விருச்சிக லக்னங்களுக்கு அதிபதி செவ்வாய்
ரிஷபம், துலாம்: சுக்கிரன்
மிதுனம், கன்னி: புதன்
தனுசு, மீனம்: குரு
மகரம், கும்பம்: சனி
கடகம்: சந்திரன்
சிம்மம்: சூரியன்

உங்கள் ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் `ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டத்தை வைத்து, உங்களுக்கான லக்னத்தையும், அந்த இடத்துக்கு உரிய அதிபதியையும் அறியலாம்.

லக்னாதிபதி பலம்…

* லக்னாதிபதி தன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் அமர்வது சிறப்பு.

* லக்னாதிபதி லக்னம், 2,4,5,9,10,11 ஆகிய வீடுகளில் ஒன்றில் அமர்வதும் சிறப்பு ஆகும்.

* லக்னாதிபதி சுப கிரகமாக இருந்தாலும் சரி, அசுப கிரகமாக இருந்தாலும் சரி… தன் சொந்த வீட்டில் இருப்பது விசேஷம்.

* லக்னாதிபதிக்குச் சுபர் சேர்க்கை ஏற்படுவதும், குரு பார்வை ஏற்படுவதும், லக்னத்துக்கு 12-ம் வீடு, 2-ம் வீடு இவற்றில் சுப கிரகம் வீற்றிருப்பதும் விசேஷம்.

* லக்னாதிபதியாகும் கிரகத்துக்கு அல்லது லக்னத்துக்குக் குரு பார்வை ஏற்பட்டிருப்பதும் நல்ல அமைப்பு ஆகும். மேலே கூறிய விதிகளில் ஒன்று இரண்டு பொருந்தி இருந்தாலே லக்னாதிபதி வலுப் பெற்றிருப்பதாகக் கொள்ளலாம்.

இனி ஒவ்வொரு லக்னத்துக்கும் லக்னாதிபதி மற்றும் யோகம் தரும் கிரகம் எந்தெந்த இடத்தில் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.


மேஷம்

மேஷ லக்னக்காரர்கள் புத்திசாலிகள். அடக்கி ஆளும் குணம் உள்ளவர்கள். இவர் களுக்கான லக்னாதிபதி செவ்வாய். இவர் மேஷ லக்னத்துக்கு 1 மற்றும் 8-ம் வீடு இரண்டுக்கும் அதிபதியாகிறார். ஆக இந்த இரண்டு இடங்களில் செவ்வாய் இருந்தாலும் பலம் மிகுந்தவராகி விடுவார்.

மேலும், மேஷ லக்னக் காரர்களின் ஜாதகத்தில் சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் உச்ச வீடாகிய மகரத்தில் இருந்தாலும் ஜாதகருக்கு யோகபலன்கள் வழங்குவார்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறுவதாலும், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளுக்கு அதிபதியான புதன் செவ்வாய்க்கு பகை கிரகம் என்பதாலும் மிதுனம், கடகம், கன்னி ஆகிய ராசிகளில் இருக்கும் செவ்வாய் வலுக் குன்றி யோக பலன்களை வழங்க முடியாதவர் ஆகிறார்.

இந்த லக்னக்காரர்களுக்கு யோக காரகர் சூரியன். இவர், இந்த லக்னக்காரர்களின் ஜாதகத்தில் சிம்மத்தில் அமர்ந்தாலும், லக்னத்திலேயே உச்சம் பெற்று காணப்பட்டாலும் ஜாதகருக்கு மேன்மையான நற்பலன்களை அளிப்பார்.

அதேபோல் சூரியன் 9-ம் வீடான தனுசில் குருவின் வீட்டில் அமர்ந்தாலும், 10-ம் வீடாகிய மகரத்தில் அமர்ந்தாலும்  ஜாதகருக்கு மேலான நற்பலன்கள் உண்டாகும்.

சூரியன் அரசாங்க கிரகம் என்பதால் அரசாங்கத்தில் உயர் பதவி, அரசால் அனுகூலம் போன்ற நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்.

மேஷ லக்னத்துக்கு குருவும் யோக பலன்களை வழங்கக்கூடியவர் என்பதால், குரு ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கவேண்டும்.

மேஷ லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றோ, தனுசு அல்லது மீனத்தில் ஆட்சி பெற்றோ இருந்தால் ஜாதகருக்கு நல்ல பலன்கள் ஏற்படும். மாறாக மகரத்தில் நீச்சம் பெற்றோ, சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் பகை பெற்றோ இருந்தால் யோக பலன்கள் ஏற்படாது.

பரிகாரம்

லக்னாதிபதி செவ்வாய் வலுவின்றி இருந்தால், முருகனை வழிபடுவதும், சஷ்டிதோறும் விரதம் இருப்பதும் நன்மை தரும். சூரியன் வலுக்குன்றி இருந்தால் சூரிய வழிபாடும், குரு வலுக் குன்றி இருந்தால் தட்சிணாமூர்த்தி வழிபாடும் நன்மை தரும்.


ரிஷபம்

ரிஷப லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன். ரிஷபத்தில், அழகைப் பிரதிபலிக்கும் சந்திரன் உச்சம் பெறுவதால், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றம், மற்றவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் தன்மை, இரக்க மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

இந்த லக்னக் காரர்களின் ஜாதகத்தில், ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தாலும், மீனத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் அற்புதமான யோக பலன்கள் உண்டாகும். அதேபோல், சுக்கிரனுக்கு நட்பு கிரகங்களாகிய மிதுனம், கன்னி ஆகிய ராசிகளிலும், சனியின் வீடுகளான மகரம், கும்பம் ஆகிய ராசிகளிலும் இருந்தால் யோக பலன்களைத் தருவார். நல்ல வாழ்க்கைத்துணை, இனிய இல்லறம், சகல சௌபாக்கியங்கள் அனைத்தும் வாய்க்கும்.

ரிஷப லக்னத்துக்கு யோககாரகர்கள் புதனும் சனியும். புதன் லக்னத்தில் இருந்தாலும், சொந்த வீடுகளான மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தாலும் யோக பலன்கள் உண்டாகும். குறிப்பாக கன்னியில் புதன் உச்சம் பெற்று இருந்தால், பெரிய அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார்கள். தெய்வ பக்தி, தீர்க்கதரிசனம், இனிய இல்லறம் போன்ற யோக பலன்கள் உண்டாகும்.

புதன் 11-ம் வீடான மீனத்தில் நீச்சம் அடைந்திருந்தாலும், 6-ம் வீடாகிய துலாம், 12-ம் வீடான மேஷத்தில் அமர்ந்தாலும் புதனால் கிடைக்கக்கூடிய யோகபலன்கள் கிடைக்காமல் போகும்.

ரிஷப லக்கினத்துக்கு ராஜயோகத்தை அளிக்கும் கிரகம் சனி ஒருவர் மட்டும்தான். இவர், உங்கள் ஜாதகத்தில் பலம் பெற்றிருப்பின் ராஜயோகப் பலன்களைத் தனது தசை நடைபெறும் 19 வருஷ காலத்தில் வாரி வழங்குவார்.

சனி தன் சொந்த வீடான மகரம், கும்பம் மற்றும் உச்ச வீடான துலாம் ஆகிய இடங்களில் அமர்ந்தால், அற்புதமான யோக பலன்களை வழங்குவார். சனி 12-ம் வீடான மேஷத்தில் நீச்சம் பெறுவதால், அங்கிருக்கும் சனியால் ஜாதகருக்கு யோக பலன்களை வழங்கமுடியாமல் போகும்.

பரிகாரம் 

சுக்கிரன் வலு இல்லாமல் இருந்தால் அம்பிகை வழிபாடும், புதன் வலுக் குன்றி இருந்தால் மகாவிஷ்ணுவை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் தினமும் காகத்துக்கு அன்னம் வைப்பதும் உங்களுக்குக் காப்பாக அமையும்.


மிதுனம்

மிதுன ராசியை லக்னமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்பவர்கள். இயல்பிலேயே அறிவுத் திறன் மிக்கவராக இருப்பார்கள். அனைவரிடமும் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.

மிதுன லக்னத்துக்கு லக்னாதிபதி புதன் லக்னத்தில் இருந்தாலும், உச்ச வீடான கன்னியில் இருந்தாலும் உயர் கல்வி, சொந்த வீடு, வசதியான வாழ்க்கை போன்ற யோக பலன்கள் ஜாதகருக்கு உண்டாகும்.
புதன் கடகத்தில் ஆயில்ய நட்சத்திர சாரத்தில் இருந்தால், வாக்குசாதுர்யம் பெற்றிருப்பவராகவும், செல்வாக்கு கொண்டவராகவும் இருப்பார். இந்த அமைப்பில் புதன் இருப்பது விசேஷ யோக பலன்களைத் தருவதாகும். மேலும் சிம்மம், துலாம் போன்ற இடங்களில் இருந்தாலும் யோக பலன்கள் உண்டாகும்.

மிதுன லக்னத்துக்குச் சுக்கிரன் யோக கிரகம் ஆவார். சுக்கிரனும் லக்னாதிபதி புதனும் நட்பு கிரகங்கள். ஆகவே, ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்று இருந்தால் அற்புதமான யோகபலன்கள் ஏற்படும்.
6-ல் சுக்கிரன் தனித்திருந்தால் நற்பலன்கள் ஓரளவு ஏற்படும் என்றாலும், 5-க்கு உரிய புத்திரஸ்தானதிபதி 6-ல் மறைவுற்றால், புத்திரபாக்கியம் ஏற்படத் தாமதம் ஆகும்.

கன்னியில் சுக்கிரன் நீச்சம் பெறுகிறார். இதனால், ஜாதகருக்கு யோக பலன்கள் ஏற்படாது என்பதுடன், கண் பார்வைக் குறைபாடு, நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

மிதுன லக்னத்துக்கு யோகங் களை வழங்கக்கூடிய மற்றொரு கிரகம் சனி. சனி ஜாதகத்தில் துலாம் ராசியில் உச்சம் பெற்றாலும், மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் நீண்ட ஆயுளுடன் சிறப்பான யோகபலன்கள் உண்டாகும். சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் ஓரளவுக்கு யோக பலன்கள் உண்டாகும்.

சனி மேஷத்தில் நீச்சம் பெற்று இருந்தால் அவரால் யோக பலன்களை வழங்கமுடியாமல் போகும்.

பரிகாரம்

புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவர் வழிபாடும், சுக்கிரன் வலுவின்றி இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதும், சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை பயக்கும்.


கடகம்

டக லக்னத்தில் பிறந்தவர்கள் நுட்பமான அறிவு கொண்டவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

கடக லக்னத்துக்கு அதிபதி சந்திரன். எனவே, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் வலுப்பெற்று இருப்பது அவசியம்.

சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்று காணப்பட்டாலும், ரிஷபத்தில் உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் ஜாதகருக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். புத்திக்கூர்மையும், மனவலிமையும் அதிகம் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம் எதுவாக இருந்தாலும், நல்ல முன்னேற்றமும் வருமானமும் தடையின்றி ஏற்படும். சொந்தவீடு, வாகன வசதி, சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் ஜாதகர் மேன்மையுடன் இருப்பார்.

விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்று காணப்பட்டால் யோக பலன்களைத் தராது என்பதுடன், உடல்நல பாதிப்பும், மன சஞ்சலமும் ஏற்படும்.அதேபோல் சந்திரன் தனுசில் இருந்தாலும் யோக பலன்களைத் தரமுடியாமல் போகும்.

கடக லக்னத்துக்கு செவ்வாய் அற்புதமான யோக பலன்களைத் தரக்கூடியவர். உங்கள் ஜாதகத்தில், இவர் தனது சொந்த வீடான விருச்சிகம், மேஷத்தில் இருப்பின் சொந்த வீடு, வாகன வசதி, பூமி சேர்க்கை, தொழில், உத்தியோக வகையில் மேன்மை, அரசாங்க அனுகூலம், அரசியலில் ஈடுபாடு, விவசாயத் தொழில், மருத்துவம் போன்றவற்றால் வருமானம், போலீஸ், ராணுவம் இவற்றில் உயர் பதவி போன்ற யோக பலன்கள் ஏற்படும். செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் மேற்கூறிய யோக பலன்கள் ஏற்படும். சிம்மம், துலாம், ரிஷபம் ஆகிய இடங்களில் இருந்தாலும் நல்ல யோகம் உண்டு.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்று காணப்பட்டால், யோக பலன்கள் ஏற்படாது என்பதுடன் பல வகையிலும் பாதிப்புகளை உண்டுபண்ணுவார்.

பரிகாரம்

சந்திரன் வலுவின்றி இருந்தால், திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதும், செவ்வாய் வலுவில்லாமல் இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதும் நன்மை தரும்.


சிம்மம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எவருக்கும் கட்டுப்படமாட்டார்கள். மற்றவர்களிடம் பெருந் தன்மையுடன் நடந்துகொள்வார்கள். எதிலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பார்கள். தர்ம நியாயப்படி நடந்துகொள்வார்கள். சற்று முன்கோபம் உள்ளவர்கள். எவரையும் சாராமல் தன்னுடைய சுயமுயற்சியினால் முன்னேற்றம் அடைவார்கள்.

சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிபதி சூரியன். எனவே இவர் சுப பலம் பெற்று அமைந்திருப்பது அவசியம். சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் மேஷத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், இந்த லக்னக்காரர்களுக்கு அற்புதமான யோக பலன்களை வழங்குவார். அரசாங்கத்தில் உயர் பதவி, தொழில், உத்தியோக வகையில் நல்ல முன்னேற்றம், செல்வ வளம், தந்தை வழியில் அனுகூலமான பலன்கள், பூர்வீகச் சொத்துச் சேர்க்கை போன்ற யோக பலன்கள் உண்டாகும். சிலர் அரசியலிலும், சிலர் கலைத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.

கன்னி, விருச்சிகம் போன்ற இடங்களில் சூரியன் இருந்தாலும் யோக பலன்கள் உண்டாகும். ஆனால், கன்னியில் இருக்கும் சூரியன் ஜாதகருக்கு கண்களில் சிறு பாதிப்பை ஏற்படுத்துவார்.

அதேபோல், சூரியன் மேஷத்தில் நீச்சம் பெறுவதும், 12-ம் இடமான கடகத்தில் மறைவு பெறுவதும் நல்லதல்ல.

சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் யோக பலன்களை வழங்கக் கூடியவர் ஆகிறார்.

செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும், மகரத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் தொழில், உத்தியோகம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம், பூமி சேர்க்கை, வண்டி வாகன வசதி, சகோதரர்களால் ஆதாயம், அரசாங்க அனுகூலம் போன்ற யோக பலன்களை வழங்குகிறார்.

செவ்வாய் லக்னத்துக்கு 12-ம் இடமான கடகத்தில் நீச்சம் பெறுவது, இந்த லக்னக் காரர்களுக்கு பலவீனமாகும்.

பரிகாரம்

சூரியன் வலுவின்றி இருந்தால், சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், செவ்வாய் வலுவின்றி இருந்தால், சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.


கன்னி

ன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். தங்கள் தோற்றத்தால் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் அறிவு சார்ந்த பணிகளிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இந்த லக்னத்துக்கு அதிபதியான புதனுக்கு இந்த ராசியே ஆட்சி மற்றும் உச்ச வீடாக அமைந்திருப்பது சிறப்பு. மேலும் லக்னாதிபதியான புதனே ஜீவன ஸ்தானம் என்னும் 10-ம் இடமான மிதுனத்துக்கும் அதிபதி ஆகிறார்.

புதன் மிதுனம், கன்னி ஆகிய இடங்களில் தனித்து இருப்பதை விடவும் சூரியனுடன் சேர்ந்திருந்தால், உயர் கல்வி, நல்ல உத்தியோகம், உயர்பதவி போன்ற யோக பலன்கள் உண்டாகும். துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலும், நல்ல நினைவாற்றல், குடும்ப ஒற்றுமை, செல்வம், செல்வாக்கு, அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஆகியவற்றை அள்ளி வழங்குவார்.

புதன் 6-ம் இடமான கும்பத்தில் மறைவு பெறுவதும், 7-ம் இடமான மீனத்தில் நீச்சம் பெறுவதும் ஜாதகருக்கு யோக பலன்களைத் தராது என்பதுடன், பல வகைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவார். மேலும் 12-ம் இடமான சிம்மத்தில் மறைவு பெற்றால் ஜீவன வகையில் பல பாதிப்புகளையும் ஏற்படுத்துவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு யோக பலன்களைத் தரக்கூடிய மற்றொரு கிரகம் சனி ஆவார்.

சனி கன்னி லக்னத்துக்கு 5-ம் இடமான மகரம், 6-ம் இடமான கும்பம் ஆகிய சொந்த வீடுகளில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால், நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், எதிர்பாராத வருமான வாய்ப்புகள்,  தொழில், உத்தியோகத்தில் அனுகூலமான பலன்கள் போன்ற யோகங்களை வழங்குவார். சனி துலாமில் உச்சம் பெற்று இருந்தால், நல்ல குடும்பம், வாக்கு வன்மை, வழக்குகளில் வெற்றி போன்ற பலன்களை வழங்குவார்.

தனுசு, மிதுனம், கடகம் போன்ற ராசிகளில் சனி இருந்தாலும் அனுகூலமான பலன்களே ஏற்படும்.

பரிகாரம்

புதன் வலுக் குன்றி இருந்தால், புதன்கிழமை அன்று அல்லது ஜன்ம நட்சத்திர தினத்தில் திருவெண்காடு சென்று புத பகவானை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் திருநள்ளாறு தரிசனமும் நன்மை தரும்.


துலாம்

துலாம் ராசியை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள் நீதி தவறாதவர்கள். எத்தனை பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றை எல்லாம் கடந்து முன்னேறுவார்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்பவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் பெற்றிருப்பார்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள்.

துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிரன். எனவே துலாம் லக்ன அன்பர்களுக்கு சுக்கிரன் வலுப்பெற்றிருப்பது அவசியம். சுக்கிரன் லக்னத்தில் ஆட்சி பெற்றோ அல்லது 8-ம் வீடும் சொந்த வீடுமான ரிஷபத்தில் ஆட்சி பெற்றோ இருந்தால், நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், தொழில், உத்தியோக வகையில் அபரிமிதமான முன்னேற்றம், சொந்த வீடு, வாகன வசதி போன்ற அற்புத மான யோக பலன்களை வழங்குவார்.

மீனத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் மேற்கூறிய அற்புத பலன்களுடன் சமூகத்தில் பிரபலமான நபராக விளங்கச் செய்வார். சுக்கிரன் விருச்சிகம், தனுசு, கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய இடங்களில் இருந்தாலும் அற்புதமான யோக பலன்கள் ஜாதகருக்கு உண்டாகும்.

சுக்கிரன் கன்னியில் நீச்சம் பெற்று காணப்பட்டால், வாழ்க்கையில் பல சோதனைகளும் கஷ்டங்களும் ஏற்படும்.

சுக்கிரனுக்கு அடுத்தபடியாக துலாம் லக்னத்துக்கு யோகம் தரக்கூடியவர் புதன். இவர், தன்னுடைய ஆட்சி வீடான மிதுனம், ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னியில் அமைந் திருப்பின் ஜாதகருக்கு அனைத்து வகைகளிலும் முன்னேற்றமான பலன்களே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டுக்குச் சென்று தொழில் தொடங்கும் பாக்கியமும் உண்டாகும்.

தனுசு, மகரம், கும்பம், ரிஷபம், சிம்மம் ஆகிய இடங்களில் இருந்தாலும் அற்புதமான யோக பலன்கள் உண்டாகும்.

புதன் மீனத்தில் நீச்சம் அடைகிறார். நீச்சபங்கம் ஏற்படாமல் போனால், வாழ்க்கையில் முன்னேற்றத் தடையும், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும்.

பரிகாரம்

அம்பிகையை வழிபடுவதும், சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வதும்; புதன் வலுவின்றி இருந்தால், திருவெண்காடு சென்று புத பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வதும் அசுப பலன்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.


விருச்சிகம்

விருச்சிகத்தை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள், பார்ப்பதற்கு அப்பாவியாக இருந்தாலும் காரியங்களை சாதித்துக்கொள்ளுவதில் சமர்த்தராக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள்.  எந்த வேலையைத் தொடங்கினாலும் அது முடியும்வரை தொடர்ந்து பாடுபடுவார்கள். இவர்களிடம் சற்று பிடிவாத குணமும் காணப்படும்.

விருச்சிக லக்னத்துக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடமான மேஷத்துக்கும் அதிபதி ஆகிறார். செவ்வாய் லக்னத்திலோ அல்லது மேஷத்திலோ ஆட்சிபெற்று இருந்தால் செவ்வாய் வலுப் பெற்று, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், பூமி சேர்க்கை, சகோதரர்களால் அனுகூலம், வழக்குகளில் வெற்றி போன்ற யோக பலன்களை வழங்குகிறார். செவ்வாய், 3-ம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று காணப்பட்டாலும் மேற்கூறிய யோக பலன்களை வழங்குவார்.

மேலும் செவ்வாய் 2-ம் இடமான தனுசில் இருப்பதும் யோக பலன்களைத் தரும். 2-ல் செவ்வாய் இருப்பது தோஷம் என்றாலும், லக்னாதிபதி என்ற காரணத்தாலும், தனுசு குருவின் வீடு என்பதாலும் பாதிப்பு இருக்காது. மேலும் கும்பம், சிம்மம், கன்னி ஆகிய இடங்களில் இருந்தாலும் யோக பலன்களை அளிப்பார்.

விருச்சிக லக்னத்துக்கு அதிகப்படியான யோகங்களை வழங்கக்கூடியவர் குருபகவான். இவர், தன்னுடைய சொந்த வீடுகளான தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்தாலும், கடகத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் செல்வச் சேர்க்கை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, உயர்ந்த அந்தஸ்து, நிலம், வீடு, வாகனம் என்று அத்தனை யோகங்களையும் ஜாதகருக்கு வழங்குவார்.

குருபகவான் மகரத்தில் நீச்சம் பெறுவதால், அங்கிருக்கும் குரு பகவானால் பணத்தட்டுப்பாடு, தொழிலில் முடக்கம், தாமத நிலை, தாமதத் திருமணம், புத்திர தோஷம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், மன அமைதியின்மை உண்டாகும்.

பரிகாரம்

செவ்வாய் வலுக்குன்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், குரு வலுக்குன்றி இருந்தால் ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


தனுசு

னுசு லக்னத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். தெய்வ பக்தி மிக்கவர்கள். பார்ப்பதற்கு அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்பவர்கள் போல் தோன்றினாலும் அனைவரிடமும் கனிவுடன் நடந்துகொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும்.

குரு பகவான் லக்னம் மற்றும் மீனம் ஆகிய இடங்களில் ஆட்சி பெற்று இருந்தாலும், கடகத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் உயர் கல்வி, உயர்ந்த பதவி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, சொந்த வீடு, நிலம், வாகன வசதி போன்ற யோக பலன்களை வழங்குவார். மேலும் ஜாதகருக்கு பரிபூரண தெய்வகடாட்சம் உண்டாகும். மற்றும் மேஷம், சிம்மம், கன்னி ஆகிய இடங்களில் இருந்தாலும் நல்ல யோக பலன்களை வழங்குவார்.

குருபகவான் மகரத்தில் நீச்சம் பெறுவதால், மகரத்தில் இருக்கும் குருபகவானால், பணத் தட்டுப்பாடு, திருமணம் நடைபெறுவதில் தடைகள், வாழ்வில் முன்னேற்றத் தடைகள், நிரந்தரமான வருமானம் பெறத் தடை என்று பல வகைகளிலும் அசுப பலன்களே ஏற்படும். கும்பம், ரிஷபம், விருச்சிகம் போன்ற இடங்களில் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும்.

தனுசு லக்னத்துக்குச் செவ்வாய் யோக கிரகம் ஆவார்.

செவ்வாய் 5 அல்லது 12-ல் ஆட்சி பெற்றிருந்தாலும் மகரத்தில் உச்சம் பெற்றிருந்தாலும், ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பும், நல்ல சந்தர்ப்பங்களும் ஏற்படும். சொந்த வீடு, பூமி சேர்க்கை ஏற்படும். தெய்வ அனுகூலம் ஏற்படும். ஜாதகர் துணிச்சலுடன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வார். அரசாங்க அனுகூலம் ஏற்படும். தொழில், உத்தியோக வகையில் மேன்மை ஏற்படும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறுகிறார்.  வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் கை நழுவிப் போகும். எல்லா வகையிலும் தாமதமும் தடங்கலும் ஏற்படும். புத்திர தோஷமும் உண்டு.

பரிகாரம்

குரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடும், குருபகவான் வழிபாடும் நலம் தரும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் முருகப்பெருமானை வழிபடுவதும், அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் சிரமங்களைக் குறைக்கும்.


மகரம்

கர லக்னத்தில் பிறந்தவர்கள் உழைப்புக்கு பின்வாங்கமாட்டார்கள். விடாமுயற்சியுடன் எடுத்த காரியத்தை முடிப்பார்கள். லட்சியத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

மகர லக்னத்துக்கு 1, 2-ம் வீடுகளுக்கு உரியவர் சனி பகவான். சனி லக்னத்திலேயே இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் யோகம் ஏற்படும். சொந்தத் தொழில், உத்தியோகம், காரியங்களில் வெற்றி, பொருளாதாரத்தில் ஏற்றம் போன்ற நன்மைகள் உண்டாகும். இங்கிருக்கும் சனியை குரு பார்வை செய்தால் நற்பலன்கள் அதிகமாகும்.

சனி 2-ல் இருப்பின் செல்வம் சேரும், தொழில் முன்னேற்றம் உண்டாகும்.அதேபோல், மீனத்தில் சனி இருப்பதும், பொருளாதார ரீதியில் ஏற்றம் அளிக்கும்.

ரிஷபம், மிதுனம் ஆகிய இடங்களில் சனி இருந்தால், நல்ல முன்னேற்றம், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். எனினும் ரிஷபச் சனி  மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார்.

சனிபகவான் மேஷத்தில் நீச்சம் பெறுகிறார். அதனால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனினும் இங்குள்ள சனிக்குக் குரு பார்வை இருப்பின் கெடுதல் குறைய இடமுண்டு.

மகர லக்னத்துக்கு சுக்கிரன் முதல்தரமான யோக கிரகம்.

சுக்கிரன் சொந்த வீடான ரிஷபம் அல்லது துலாமில் இருந்தால் ஜாதகருக்குச் செல்வம் சேரும். சொத்து சுகம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம் எதுவானாலும் முன்னேற்றம், அபிவிருத்தி, ஆதாயம் உண்டாகும்.

மகர லக்னத்துக்கு புதனும் யோக கிரகமே. இவர் 6 அல்லது 9-ல் இருப்பின் உயர்கல்வி, தொழில் உத்தியோக வகை முன்னேற்றம், சொந்தத் தொழில் மூலம் வருமானம் ஏற்படும்.

புதன் மீனத்தில் நீச்சம் பெறுகிறார். நீச்ச பங்கம் பெறாது போயின் கல்வியில் தடை, தொழில், உத்யோக வகையில் இடையூறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிணி போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.

பரிகாரம்

சனி வலு குறைந்து இருந்தால் சனிபகவானையும், சுக்கிரன் வலுக்குன்றி இருப்பவர்கள் அம்பிகையையும், புதன் வலுக்குன்றி இருப்பவர்கள் ஹயக்ரீவரையும் வழிபட, சிரமங்கள் குறையும்.


கும்பம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்கள். எப்போதும் மலர்ச்சியாக காணப்படுவார்கள். மற்றவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். உயர்ந்த பதவி, அந்தஸ்து ஆகியவை இவர்களைத் தேடி வரும். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள்.

கும்ப லக்னத்துகு லக்னாதிபதி சனிபகவான் 12-ம் வீட்டின் அதிபதியும் ஆகிறார். ஆகவே அதிக வருமானம், அதிக செலவு என்று  இரண்டையுமே ஏற்படுத்துவார். சனிபகவான் லக்னம், 12 இவற்றில் ஆட்சி பெற்றாலும், 9-ல் உச்சம் பெற்றாலும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் யோகம் உண்டு. தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற எதுவாக இருந்தாலும் மேன்மை, முன்னேற்றம், அபிவிருத்தி, ஆதாயம் ஏற்படும். சொந்த வீடு, வாகன வசதி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து, நல்ல குடும்பம், வசதியான வாழ்க்கை போன்ற அனுகூலங்கள் ஏற்படும்.

சனி 9-ல் இருப்பது மிகப் பெரிய யோகம் ஆகும். ஜாதகர் எல்லாவகையிலும் முன்னேற்றம் அடைய உறுதுணையாகும். இங்கு சுக்கிரன் இணைந்து இருப்பது ஜாதகருக்குக் கூடுதல் நற்பலன்களை அளித்திடும்.

சனி 3-ல் நீச்சம் பெறுகிறார். நீச்ச பங்கம் பெறாது போயின் தோல்வியும், துன்பமும், காரியத்தடையும் உண்டாகும்.

கும்ப லக்னத்துக்கு 4,9-க்கு அதிபதி சுக்கிரன் யோக கிரகம் ஆவார். இவரும் லக்னாதிபதி சனியும் நட்பு கிரகங்கள். ஜாதகத்தில் இவர் வலுப்பெற்று இருந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் 2-ல் உச்சம் பெற்றிருந்தாலும் 4 அல்லது 9-ல் ஆட்சி பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு உயர்கல்வி, நல்ல குடும்பம், செல்வம், உத்தியோகம், தொழில் வகையில் முன்னேற்றம், வீடு, வாகனம், சொத்துச் சேர்க்கை போன்ற மேலான யோகங்களை அளிப்பார்.

சுக்கிரன் கன்னியில் நீச்சம் பெறுகிறார். அதனால் வாழ்க்கையில் விரக்தி மேலோங்கும். பணத்தட்டுப்பாடு, தாமதத் திருமணம் போன்ற அசுப பலன்கள் உண்டாகும்.

பரிகாரம்

சனி வலுவின்றி இருந்தால் சனி தசையின்போது ஒருமுறை திருநள்ளாறு சென்று அர்ச்சனை செய்து வருவதும், சுக்கிரன் வலுக் குன்றி இருப்பவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


மீனம்

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமாக இருப்பார்கள். மென்மையாகப் பேசுவார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். இவர்களுக்கு இரக்க குணமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். சற்று முன்கோபம் உண்டு.

குருபகவான் லக்னத்தில் இருந்தால் நீன்ட ஆயுள், உயர்கல்வி, செல்வம், உத்தியோக மேன்மை, தொழில், வியாபார வகையில் முன்னேற்றம், நல்ல குடும்பம், சொத்துச் சேர்க்கை போன்ற யோக பலன்களை வழங்குவார்.

மேஷம், மிதுனம் ஆகிய இடங்களில் இருக்கும் குருபகவானால் யோக பலன்கள் ஏற்படும் என்றாலும் மேஷத்தில் குரு தனித்து இருப்பதை விடவும் மற்றொரு கிரகத்துடன் சேர்ந்து இருப்பது அவசியம்.
5-ம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்று இருப்பது அற்புதமான யோக பலன்களைத் தரக் கூடியது. 9-ம் இடமான விருச்சிகத்தில் குரு இருப்பதும் யோக பலன்களைத் தரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், பூர்வீகச் சொத்துச் சேர்க்கை, தெய்வ அனுகூலம் போன்ற யோக பலன்கள் உண்டாகும்.

தனுசு குருவின் வீடு என்றாலும் 10-வது வீடாக இருப்பதால்  தொழில், உத்தியோக ரீதியில் ஒரு சில இடையூறு ஏற்பட்டாலும் முன்னேற்றம் உண்டாகும். இங்கு குரு, சூரியன் அல்லது செவ்வாயுடன் இருப்பின் மிகப் பெரிய யோகம் ஆகும்.

குரு மகரத்தில் நீச்சம் பெறுகிறார். நீச்ச பங்கம் பெறாது போயின், முன்னேற்றத் தடை ஏற்படும். குரு 3, 6, 8, 12-ல் மறைந்தாலும் மேற்கூறிய வகையில் அனுகூலமற்ற பலன்களே ஏற்படும்.

மீன லக்னத்துக்குச் செவ்வாய் யோக கிரகம் ஆவார். இவர் 2,9-ல் ஆட்சி பெற்றாலும் 11-ல் உச்சம் பெற்றாலும் ஜாதகருக்கு உயர்கல்வி, சொத்துச் சேர்க்கை, வீடு, வாகன வசதி, தொழில், உத்தியோக உயர்வு உண்டு.செவ்வாய் மீனம், ரிஷபம், தனுசு ஆகிய இடங்களில் இருந்தாலும் யோக பலன்கள் உண்டாகும்.

பரிகாரம்

குரு வலுக் குன்றி இருப்பவர்கள் திட்டை குருபகவானை தரிசித்து அர்ச்சனை செய்து வருவதும், செவ்வாய் வலுக் குன்றி இருப்பவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.

குறிப்பு: லக்னாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்து அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இருந்தாலும்கூட யோக பலன்களுடன் அசுப பலன்களும் கலந்தே ஏற்படும்.

இன்னும் சில யோகங்கள்

ஜாதகத்தில் லக்கின அடிப்படையில் யோகம் தரக் கூடிய கிரக நிலைகளைப் பற்றி பார்த்தோம். இதைத் தவிரவும் கிரக அமைப்பு களின்படி பொதுவான சில யோகங்கள் பற்றியும்  ஜோதிட சாஸ் திரம் சொல்கிறது. அவற்றுள் சில யோகங்களைப் பார்ப்போம்.

கஜகேசரி யோகம்: குருவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அதாவது 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் அமைந்திருப்பது கஜகேசரி யோகம் ஆகும். இந்த யோகம் ஜாதகருக்கு புகழ், செல்வாக்கு, தலைமைப் பதவி போன்றவை ஏற்படும்.

குரு மங்கள யோகம்: குருவும் செவ்வாயும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமைந்தி ருந்தாலும், இருவரும் சேர்ந்திருந் தாலும் குரு மங்கள யோகம் ஆகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு  வீடு, மனை ஆகியவை சேரும்.

குரு சந்திர யோகம்: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது 5,9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குருசந்திர யோகம் அமைகிறது.  இந்த யோகம் ஜாதகருக்கு உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் போன்றவற்றைக் கொடுக்கிறது.

பரிவர்த்தனை யோகம்: பரிவர்த்தனை யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வதால் ஏற்படுகிறது.

இந்த பரிவர்த்தனை யோகத்தால் அந்த கிரகங்களின் சக்தியானது மேலும் அதிகரிக்கிறது. இந்த யோகத்தால் நன்மையும் ஏற்படும் அல்லது தீமையும் ஏற்படும். இது அந்த கிரகம் அமர்ந்துள்ள வீட்டைப் பொறுத்தே அமைகிறது. இந்த பரிவர்த்தனை யோகம் 6, 8, 12 ஆகிய இடங்களாக இல்லாமல் இருந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.

அதாவது ஒரு கிரகமானது 6,8,12 ஆகிய வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு தீய பலன்களே கிடைக்கின்றன.

விபரீத ராஜயோகம்: விபரீத ரஜயோகம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களாகிய 3,6,8,12 ஆகிய வீடுகளுக்கு உரிய கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் அமர்வதால் விபரீத ராஜயோகம் அமைகிறது. அதாவது 3-ல் இருக்கக்கூடிய கிரகமானது 6,8,12-ல் ஏதாவது ஒரு வீட்டில் மாறி இருந்தால் இந்த யோகம் அமைகிறது. இந்த யோகம் அமையப்பெற்றால் பரம ஏழையும் பெரும் பணக்காரனாக மாறிவிடுவார்.

மேலும் அந்த கிரகத்துக்கு உரிய தசையோ அல்லது புக்தியோ ஜாதகருக்கு நடைபெறும்போது இதன் பலன்கள் பலமடங்கு கூடுகிறது

ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: