காரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, ‘நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்…’ என்கிறார்.
மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டே இறைவனால் நடத்தப்படுகின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இருந்த போது, நடந்த ஒரு சம்பவம்…
பதினாயிரம் யானை பலம் கொண்டவன் பீமன். அவன் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அவன் கண்களில் பட்ட மிருகங்கள் எல்லாம் காலனை அடைந்தன. பார்வையில் படாத மிருகங்களோ பயந்து ஓடின. அப்போது வழியில் எதிர்பட்ட ஒரு பெரிய மலைப் பாம்பு, பீமனை பிடித்து கொண்டது. அதனிடமிருந்து விடுபட, பீமன் எவ்வளவோ முயற்சி செய்தும் விடுபட முடியவில்லை.
அயர்ந்து போன பீமன். ‘பாம்பே… உன்னிடம் தோற்றுப்போன எனக்கு, மனிதர்களின் உடல் பலம் நிலையற்றது என்பது புரிந்து விட்டது. இதை எனக்கு உணர்த்திய நீ யார்…’ எனக் கேட்டான். ‘பீமா, உன் முன்னோர்களில் ஒருவனான நகுஷன் என்பவனே நான். அகஸ்திய முனிவரை அவமானப்படுத்தினேன். அவர், ‘பாம்பாக போ…’ என, சாபம் கொடுத்து விட்டார்.
‘அவரிடம் சாப விமோசனம் கேட்ட போது, ‘எவன் ஒருவன், ஆத்மா எது, ஆத்மா இல்லாதது எது என்பதன் வேறுபாடு குறித்த, உன் கேள்விகளுக்கு பதில் கூறுவானோ, அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்…’ என்று, கூறினார்…’ என்றது.
அந்த நேரத்தில், பீமனைக் காணாததால், தேடி வந்த தர்மர், பாம்பு, பீமனை பற்றியிருப்பதை கண்டு, விடுவிக்க முயன்றார். ஆனால், பாம்பு, தன் பிடியை விலக்கிக் கொள்ளாமல், தன்னைப் பற்றிய தகவல்களைக் கூறி, ‘என் கேள்விகளுக்கு நீ பதில் கூறினால், உன் தம்பியை விட்டு விடுவேன்…’ என்றது.
தர்மர் அதற்கு ஒப்புக் கொண்டார். பாம்பு கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்க, தர்மர் அனைத்திற்கும் பதில் கூறினார். பாம்பு சாப விமோசனம் பெற்று, நகுஷனாக மாறி, சொர்க்கத்தை அடைந்தது. பீமனுடன் திரும்பினார் தர்மர். பலசாலியான பீமன், பாம்பால் பிடிக்கப் பட்டதும், தர்மர் அங்கு வந்ததும், அதன் விளைவாய், நகுஷன் சாப விமோசனம் பெற்றதும், இவையெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை. முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கக்கூடிய அளவிற்கு, தர்மருக்கு ஆற்றல் இருந்தது.
ஒரு செயல் ஏன் நடந்தது என்பது தெரியாவிட்டாலும், நல்வழியில் நடப்பது, நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கும் என்பதே, இச்சம்பவம் விளக்கும் நீதி!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்