தண்டுவடம், தண்டுவட நரம்பு என்றால் என்ன?
நம் உடலின் இயக்க மற்றும் உணர்வு நரம்புகளை, மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொகுப்பு தொடர் தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடல் இயக்கத்தை மூளையின் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தண்டுவட பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
சில நேரங்களில் தண்டுவடத்தில் ஏற்படும் கிருமி தாக்குதல், கட்டியால் ஏற்படும் அழுத்தம், மிக வேகமாக வாகனங்களை ஓட்டுவது, தண்டுவட பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் என்ன ஆகும்?
தண்டுவட எலும்பு முறிவதால், தண்டுவட நரம்பு, உடைந்த எலும்புகளுக்கிடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் அழுத்தப்பட்டு, உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடுகின்றன.
செயல் இழப்பு நிரந்தரமானதா, தற்காலிகமானதா?
செயல் இழப்பு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இருக்கும். தண்டுவட எலும்பு முறிவு இருந்தால், பாதித்த பகுதிக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும், மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். இதனால் தசைகளிடையே இயக்கமின்மை, தோல் உணர்விழப்பு, மலம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். தண்டுவட நரம்பு மண்டலத்தில் அழுத்தம் மட்டும் இருந்தால், சிகிச்சைக்குப் பின், பிசியோதெரபி செய்து, முழுமையாக குணம் பெறலாம்.
தண்டுவட முறிவை அறிவது எப்படி?
தண்டுவட எலும்பு முறிவு கழுத்தில் ஏற்பட்டால், கைகள் மற்றும் கால்கள் செயல் இழப்பு, மார்பு, வயிறு, முதுகு முழுவதும் உணர்ச்சி இன்மை ஏற்படலாம். மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு விடுதல், உணவு விழுங்குதலில் சிரமமும் கழுத்து எலும்புக்கு கீழ் என்றால், கால்கள், உடல் மற்றும் இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். தண்டுவட முறிவுக்குப் பின் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?
பாதிக்கப்பட்டவருக்கு படுக்கை புண் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான பிசியோதெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். வயது, தண்டுவட முறிவின் அளவு, தண்டுவட நரம்புகளின் செயல்பாடுகளை பொறுத்து, பிசியோதெரபி மூலம் தசைகளை
வலுப்படுத்த முடியும்.
நடக்க முடியுமா?
தண்டுவட முறிவின் அளவை பொறுத்து, சிலரால் ஒரு ஆண்டிற்குள்ளாகவே முன்பு போல் நடக்க முடியும். சிலருக்கு, இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு சிறு உபகரணங்கள் உதவியும் வேறு சிலர் சக்கர நாற்காலியும் தேவைப்படும். முழுமையாக தண்டுவட முறிவு ஏற்பட்டால், பெரிய அளவில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், இயல்பாக வாழ்க்கையை நடத்தத் தேவையான பயிற்சி, ஆலோசனை பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு துறை மருத்துவரிடம் பெறலாம்.
சக்கர நாற்காலி உதவியால், முன் போல் செயல்பட முடியுமா?
உங்ளுக்கென செய்யப்படும் சக்கர நாற்காலி உதவியால், வீட்டிற்குள், அலுவலகத்திற்கு செல்ல முடியும். சாலையில், தானாக இலகுவாக செல்லவும் விளையாட்டில் ஆர்வம் இருந்தால், விளையாட்டில் பங்கு பெறவும் பிரத்யேக சக்கர நாற்காலிகள் உள்ளன.
பிரத்யேக சக்கர நாற்காலிகள் எங்கே கிடைக்கும்?
இதற்கென்று பிரத்யேக நிபுணர்கள் உள்ளனர்.
இதனால் நினைத்த முன்னேற்றம் கிடைக்குமா?
முன்னேற்றம் என்பது, உடல் மட்டும் சார்ந்தது அல்ல; மன உறுதியையும் சார்ந்தது. மாற்றத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். தண்டுவடம் முறிந்தாலும் தன்னம்பிக்கை முறிய கூடாது.
டாக்டர் இ.முகமது அமீர் உசேன்,
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்