பிரியத்தின் ரகசிய நாள்கள்
மீண்டும் வருகின்றன

ரணத்தின் ரகசிய வேர்கள்
மீண்டும் ஒருமுறை வேரற அறுக்கப்படுகின்றன

சொற்களினால் காயம்பட்டவர்கள்

சொற்களினாலேயே
தன் மருந்துகளை
மீண்டும் ஒரு முறை
உருவாக்குகிறார்கள்

நடந்து தீராத
பாதைகளில் மீண்டும்
ஒரு முறை மழை பெய்கிறது

இம்முறை கொஞ்சம் அமிலமாக

o

வனயட்சிகள் தன் எல்லைகளை
மீறி வெளிவரும்போது
எழும் கூக்குரல்களில்
ஒரு இசை இருக்கிறது

மலர்கள் நிலத்திலறைய
அதிர்ந்து விழும் மரத்திலிருந்து
சில பறவைகள்
தன் புதிய கூட்டினைத் தேடி
பறக்கத்தொடங்குகின்றன

பெரு நிழல்கள்
விழும் தெருக்கள்
சிறியதாய் இருப்பதில் தவறேதும் இல்லை

எனினும்

சிறகு முளைக்கும்வரையாவது
காத்திருந்திருக்கலாம்
தாய்பறவைகள்

o

கூண்டுமிருகங்கள்
காட்டைவிட்டுக் கிளம்பும்போது
தன் கடவுள்களை
அறுத்துக்கொள்கின்றன

ஆழத்தின் கடல்
தன் கரைகளை
உடைத்து வெளியேறும்போது
அதுவரை மறைந்திருந்த
மீன்களைத் தூக்கி
தூரத்திற்கு எறிகிறது

வடுக்களைக் கத்தியால்
சுரண்டுபவன்
காயங்களை அறுத்துவிட
எத்தனிக்கிறான்

ஒரே கதவுதான்.

ஆனாலும்

நுழைதலும்
வெளியேறுதலும் ஒன்றல்ல
பிதாவே.