முப்பது வயதுக்கு மேல், ‘ஐயோ! பல் சொத்தை, முக அழகைக் கெடுக்குமே’ எனத் தாமதமாகக் கவலைப்படுவதைவிட முன்னரே பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்குவதுதான் ‘பிரிவென்ட்டிவ் டென்டிஸ்ட்ரி’. ‘30 வயதில் பற்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று டாக்டரிடம் செல்வதே தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுதான். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம் இருந்தே, பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்கிவிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
கைக் குழந்தைக்கும் வாய்ப் பராமரிப்பு
தாய்பால் குடித்தபிறகு, வெள்ளைப் பருத்தித் துணியை, இளஞ்சூடான நீரில் நனைத்து, மென்மையாக குழந்தையின் ஈறுகளைத் துடைத்துவிட வேண்டும். அதுபோல, நாக்கையும் மென்மையாகத் துடைத்துவிட வேண்டும். அனைத்து பால் பற்களும் முளைக்கும் வரை, பருத்தித் துணியால் ஈறுகள் மற்றும் நாவைச் சுத்தப்படுத்துவது அவசியம்.
ஒரு பல் முளைத்தாலே ஃபிங்கர் பிரஷ்
ஃபிங்கர் பிரஷ் என்று கடைகளில் கிடைக்கும். குழந்தைக்கு ஒரு பல் முளைத்தவுடன், அதை நம் கையில் மாட்டிக்கொண்டு, மென்மையாக அந்தப் பல்லை காலை, இரவு சுத்தம்செய்ய வேண்டும். சாதாரண பிரஷ் ஈறுகளைக் குத்த வாய்ப்பு உண்டு. ஃபிங்கர் பிரஷ்ஷில் ஒரு பல், இரண்டு, மூன்று பற்களுக்கு எல்லாம் பிரத்யேக வகைகள் உள்ளன.
இரண்டு வயதுக்குப் பிறகுதான் பேஸ்ட்
அனைத்துப் பற்களும் முளைத்துவிட்ட பின்னர், குழந்தைகளுக்கு ஏற்ற பிரத்யேகமான, மென்மையான பிரஷ்ஷைப் பயன்படுத்தலாம். அதுவும், இரண்டு வயது ஆன பின்புதான். குழந்தைக்கு பேஸ்ட்டைக் கொடுத்துப் பல் தேய்க்கவைக்க வேண்டும். அந்த வயதில்தான் குழந்தை துப்புவதற்குக் கற்றுக் கொள்ளும். அதற்கு முன்னர், வாய் கொப்பளித்துத் துப்பத் தெரியாது.
குழந்தைக்கு எந்த பேஸ்ட்
முதல் இரண்டு வயதுக்குப் பின்னர், எந்த பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்று குழந்தைகளுக்கான பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பொதுவாக, ஃப்ளோரைடு கலந்த பேஸ்டை டாக்டர் பரிந்துரைப்பார்.
நாக்கைச் சுத்தம் செய்யலாமா?
நாக்கில் நிறைய சுவை மொட்டுக்கள் உள்ளன. அவைதான், சுவை உணர்வைத் தருகின்றன. உலோக டங்க் கிளீனரால் நாக்கைச் சுத்தம்செய்தால், சுவை மொட்டுக்கள் பாதிக்கப்படும். எனவே, மிருதுவான பிளாஸ்டிக் டங்க் கிளீனரால், தினமும் காலை மற்றும் இரவில் சுத்தம் செய்யலாம்.
ஃப்ளோரைடு நல்லதா?
ஃப்ளோரைடு என்ற ரசாயனம் பற்களின் உறுதித் தன்மைக்கு அவசியம். இது, கிருமிப் பாதிப்பைத் தடுத்து, பற்கள் சொத்தையாவதைத் தடுக்கும். சாப்பிடும்போது, பற்களின் மேல் படியும் மாவை, ஃப்ளோரைடு தடுக்கும். டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஃப்ளோரைடு மவுத் வாஷ் பயன்படுத்தலாம். அதுவும், குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தான். டாக்டர் பரிந்துரைக்கும் ஃப்ளோரைடு பேஸ்ட்டை ஐந்து வயது குழந்தை முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம்.
10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஃப்ளோரைடு அப்ளிகேஷன் செய்துகொள்வது அவசியம். பெரியவர்களுக்கு, சென்ஸிட்விட்டி பிரச்னை இருந்தால் அவர்களுக்கும், ஃப்ளோரைடு அப்ளிகேஷன் நல்ல பலன்களைத் தரும்.
டாக்டர் விசிட்
குழந்தைக்கு முதல் பல் முளைத்த உடனே பல் டாக்டரிடம் செல்ல வேண்டும். பிறகு, ஆறு மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பல் டாக்டரிடம் சென்று செக்அப் செய்வது அவசியம். அப்போது, பற்களில் ஃப்ளோரைடு ஃபோம் அல்லது ஜெல்லை பல் மருத்துவர் தடவிவிடுவார். இது, பற்களின் தரத்தைப் பாதுகாக்கும்.
பூச்சிப்பல் வராமல் தடுக்க முடியும்
பற்களில் ஒட்டக்கூடிய சாக்லேட், கலர் பானங்கள், செயற்கை நிறம் சேர்த்த இனிப்புகள், ஜவ்வு போன்று இழுக்கும் உணவு வகைகள் பூச்சிப்பல் ஏற்பட முக்கியக் காரணம். உணவு, பற்களில் படியும்போது, அதனால் பூச்சிப்பல் வரும். இதுவே, நார்ச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட்டால், பற்களில் படியாது. எனவே, உணவில் நார்ச்சத்து பிரதானமாக இருக்கட்டும்.
பற்கள் சீராக வளர…
பற்கள் எத்தி வளர்வது மரபியல் சார்ந்ததாக இருக்கலாம். நாக்கை பற்கள் முளைக்கும் இடத்தில் தொட்டுக்கொண்டே இருப்பது, விரல்களால் ஈறுகளை அடிக்கடி தொடுவது, கை சூப்புவது, நாக்கைத் துறுத்துவது, உதட்டைக் கடிப்பது, நகங்களைக் கடிப்பது போன்ற பழக்கங்கள், பற்கள் சீராக வளர்வதைத் தடுக்கும்.
எந்த உணவுக்கு எந்தப் பற்கள்
பாட்டில் மூடியைப் பற்களால் திறப்பது, கரும்பை முன்பற்களால் கடிப்பது போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். முன்பற்களை மிருதுவான உணவுகளை (பிஸ்கட், ஆப்பிள்) கடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடினமான உணவுகளை, கடவாய் பற்களால் கடிக்க வேண்டும். கடித்து, மென்று சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்களால் செய்வது நல்லது.
சென்ஸிட்டிவிட்டி
பற்களின் எனாமல் தேய ஆரம்பித்தால், பற்களின் நடுப் படிமம் பாதிக்கப்பட்டு, பற்கூச்சம் ஏற்படும். வெந்நீர், குளிர்ந்த நீர், டீ, காபி, குளிர்க் காற்றுபடும்போது கூச்சத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி சென்ஸிட்டிவிட்டி பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம்.
ஓரல் ஹெல்த் மேனேஜ்மென்ட்
தினமும் இருமுறை பல் துலக்குவது கட்டாயம். அதுபோல நாக்கைச் சுத்தம் செய்வதும் நல்லது.
இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள அழுக்கை எடுக்க ‘ஃபிளாஸ்’ செய்ய வேண்டும். ஃபிளாஸ் செய்வது எப்படி என்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னர் செய்வது நல்லது.
சாப்பிட்டு முடித்ததும் வாய் கொப்பளிக்க வேண்டும். அது நொறுக்குத்தீனியாக இருந்தாலும் சரி. முடியாத சூழலில் தண்ணீரை வாயில்வைத்து, நன்றாகக் கொப்பளித்து விழுங்கிவிடலாம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்