வாழ்த்துகள் பலவிதம். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்துவதும் ஒரு ரகம்.
வெற்றி, சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்யம், மோட்சம் என்பதே அந்தப் பதினாறு செல்வங்கள்.
மகாலட்சுமியின் கடைகண் பார்வை இருந்தால் இந்தப் பதினாறு செல்வங்களையும் நாம் பெறலாம்.
–
திருமகள் பல்வேறு நேரங்களில் பல அவதாரங்களில் திருமாலை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
திருமகள் திருபாற்கடலில் தோன்றி திருமாலை மணந்தாள் அது என்ன கதை?
–
கந்தர்வப் பெண் ஒருவள் வைகுண்டம் வந்தாள். மகாலட்சுமியை வணங்கினாள். மகாலட்சுமியின் அழகைக் கண்டு பிரமித்தாள். மனமெல்லாம் மகிழ்சி பொங்க மகாலட்சுமியை போற்றிப் புகழ்ந்தாள்.
மகாலட்சுமிக்கு ஏக மகிழ்ச்சி.
–
தன் தலையில் சூடியிருந்த பூமாலையை அடுத்தப் பெண்ணுக்குப் பரிசாகக் கொடுத்தாள்.
–
மனம் மகிழ்ந்த அந்தப் பெண் கையில் மாலையுடன் கந்தர்வலோகம் திரும்பிக் கொண்டிருந்தாள்.
–
வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். தன்னை வணங்கிய அந்தப் பெண்ணிடமிருந்து அருமையான நறுமணம் வருவதை உணர்ந்த முனிவர், “இந்த மணம் எங்கிருந்து வருகிறது?’ என்று அவளிடம் கேட்டார்.
“மகாலட்சுமி தந்த பூமாலை இது. இதிலிருந்துதான் இந்த நறுமணம் வருகிறது. இதை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிய அந்தப் பெண், அந்த மாலையை துர்வாச முனிவரிடம் தந்துவிட்டு போய்விட்டாள்.
மனம் நிறைய மகிழ்வோடு அந்த மாலையுடன் நடந்த துர்வாச முனிவர், வழியில் இந்திரன் பவனி வருவதைக் கண்டார்.
–
“திருமகளின் மாலை இது. பெற்றுக்கொள்’ என்ற முனிவர் அந்த மாலையை இந்திரனிடம் நீட்டினார்.
–
யானையின் மேல் இருந்தபடியே அலட்சியமாக அங்குசத்தால் அந்த மாலையை வாங்கிய இந்திரன் அதை யானையின் மேல் போட்டான். யானையோ அந்த மாலையை தன் துதிக்கையால் எடுத்து காலில் போட்டு துவம்சம் செய்தது.
முனிவருக்கு கோபம் தலைக்கேறியது.
–
“உன்னிடம் இருக்கும் காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம் அனைத்தும் உன்னைவிட்டு விலகும். உன் யானையான ஐராவதம் காட்டு யானையாகத் திரியும்’ எனச் சாபமிட்டார்.
முனிவரின் சாபத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், தன் தவறை மன்னிக்கும்படியும் சாபவிமோசனம் தரும்படியும் வேண்டினான்.
“அவை உரிய நேரத்தில் கிடைக்கும்’ என்றார் முனிவர்.
–
இந்திரன் அனைத்தையும் இழந்ததால் தேவலோகத்தை வறுமை பற்றியது. துன்பம் சூழ்ந்தது. தேவர்கள் வேதனைப்பட்டனர்.
என்ன செய்வது என்று தேவர்கள் பிரம்மனிடம் கேட்டார்கள்.
–
“பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதன்பின் அனைவரும் துன்பமின்றி வாழலாம்’ என்றான் பிரம்மன்.
–
மந்திரமலை மத்தாயிற்று. வாசுகி என்ற பாம்பு நாணாயிற்று. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையத் தொடங்கினர்.
திருமால் ஆமை உருவெடுத்து மந்திரமலை நழுவிப்போகாமல் காத்தார்.
–
தேவர்களும் அசுரர்களும் சிவ பெருமானின் அனுமதி பெறாமல் பாற்கடலைக் கடைந்ததால் ஆலகாலவிஷம் கடலில் பொங்கத் தொடங்கியது.
தேவர்கள் அஞ்சினர். பிரம்மன் பாதாளத்தில் மறைந்தான். பாம்பின் தலைப்பக்கம் நின்ற அசுரர்கள், விஷத்தின் கடுமையால் உடல் வெந்து அழிந்தனர்.
வெள்ளை நிறமாக இருந்த திருமாலை நீலநீறமாக மாற்றியது அந்தக் கொடிய விஷம்.
–
அனைவரும் சிவபெருமானைத் துதிக்க, அவர் ஆலால சுந்தரரை பாற்கடலுக்கு அனுப்பினார். அவர் அந்த விஷம் முழுவதையும் உருட்டிக் கொண்டு வந்து சிவபெருமானிடம் கொடுக்க, சிவபெருமான் அதனை விழுங்கினார். அந்த விஷயம் சிவபெருமானின் கண்டத்திலேயே நிலைத்து நிற்கும்படி பார்வதி செய்தாள்.
பின்னர் சிவபெருமான் அருளால் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது அலையின் நடுவே ஓர் அழகிய பெண் மணமாலையுடன் தோன்றினாள்.
அவளே மகாலட்சுமி.
–
அவள் மகாவிஷ்ணுவின் மேல் காதல் கொண்டு அவரையே மணந்தாள்.
பாற்கடல் மறுபடியும் கடையப்பட்டது.
இந்திரன் இழந்த அனைத்தையும் பெற்றான்.
=
அமிர்த கலசம் தோன்றியது. தேவர்களும் மற்றவர்களும் அந்த அமிர்தத்தை அருந்தினர். இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்றனர்.
இப்படிப்பட்ட மகாலட்சுமிக்கு கோவையில் ஒரு தனி ஆலயம் உள்ளது.
–
கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்ற ஆலயத்தில் மகாலட்சுமியே மூலவர். மகாலட்சுமியுடன் துர்க்காதேவியும் சரஸ்வதி தேவியும் இணைந்து அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் ஆகும்.
இங்கு அம்மனுக்கு மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது. வேறு எந்த பெயரிலும் யாருக்காகவும் அர்ச்சனை செய்யப்படுவதில்லை.
–
ஆலயத்தில் மேற்கு பிராகாரத்தில் பத்மநாப சுவாமி சயன நிலையில் இருக்க அருகே ஸ்ரீதேவியும், இருபுறமும் மிகப் பெரிய சங்கும், சக்கரமும் உள்ளன.
இந்த ஆலயத்தின் கருவறை மும்பை மகாலட்சுமி ஆலயத்தின் அமைப்பைப் போலவே உள்ளது.
–
ஆலயத்தின் கோபுரம் வட இந்திய கலாசாரத்தில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
–
திருப்பாற்கடலைக் கடையும்போது வாசுகி என்ற பாம்பு நாணாகப் பயன்படுத்தப்பட்டது அல்லவா! இந்த வாசுகியின் திருமேனியை ஆலயங்களில் காண்பது அரிது.
திருவாளப்புத்தூரில் உள்ள மாணிக்கவண்ணர் ஆலயத்தில் வாசுகிக்கு தனிச் சன்னதி உள்ளது.
–
விநாயகர் மற்றும் அஷ்ட நாகர்களுடன் இங்கு வாசுகி அருள்பாலிக்கிறாள்.
–
இரண்யனை வதம் செய்து அழித்த நரசிம்மர் அந்தப் பாவம் தீர கருப்பத்தூர் வந்தார். இங்குள்ள சிம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பச்சாதபேசுவரரை வணங்கி பாவ விமோசனம் பெற்றார்.
சிவாலயங்களில் மகாலட்சுமியின் சன்னதி இருப்பது அபூர்வம். கணவருக்கு பாவம் போக அருள் புரிந்த இந்த சிவாலயத்தில் அன்னை மகாலட்சுமி பிராகாரத்தின் வடக்குத் திசையில் தனிச் சன்னதியில் தங்கி இன்றும் அருள்பாலிக்கிறாள்.
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது கீழசூரிய மூலை என்ற தலம். இங்குள்ள சூரிய கோடீஸ்வரர் ஆலயத்தின் குபேர மூலலையில் வடமேற்கு பிராகாரத்தில் மகாலட்சுமிக்கு தனிச் சன்னதி உள்ளது.
இங்கு கருவறையில் திருமகள் அமர்ந்து நிலையில் பத்மாசனக் கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் அழகை காண கண்கோடி வேண்டும். தவிர இங்கு திருமகளின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது ஓர் அபூர்வமான அமைப்பு என்கின்றனர். மாத பௌர்ணமிகளில் திருமகளுக்கு இங்கு நடைபெறும் ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள்.
நாம் அனைத்து வளங்களையும் பெற மகாலட்சுமியை வணங்குவோம்!
–
===========================================
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்