ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்?
❂ தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் இது.
பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
❂ ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.
❂ ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி” என்பது பழமொழி. அதாவது ஆடிமாத செவ்வாய்கிழமையன்று விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
❂ ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்”என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.
❂ ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது! ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசே~ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இத்தகைய விசேஷ நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.
❂ மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. ஆடி மாதத்தில் அம்மன் மட்டும் இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருப்பதால், ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுகிறது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்