ஒரு பணக்காரர் தனக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலம் முழுவதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்து, மரக் கன்றுகள் நடுவதற்கான பள்ளம் தோண்டும் வேலையை சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்தார்.🌴 சந்திரன், இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய பள்ளங்கள் தோண்டி நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தார். ஏனெனில், அவருடைய மகளின் திருமணத்திற்காக சிறிது சிறிதாகப் பணத்தை சேர்த்துக் கொண்டு வருகிறார். ஆனால் இன்னும் மகளின் திருமணத்திற்குப் போதுமான அளவு பணத்தை சேர்க்கவில்லை. 🌴 சந்திரன் முதல் நாளில் பதினைந்து மரக்கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவர் தோண்டுகின்ற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஐம்பதாவது நாளன்று சந்திரன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவு முயற்சி செய்தும், அவரால் மூன்று பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. 🌴 பணக்காரர், சந்திரன் முதல் நாளிலேயே பதினைந்து பள்ளங்களைத் தோண்டினார். ஆனால் ஐம்பதாவது நாளான இன்று வெறும் மூன்று பள்ளம்தான் தோண்டி இருக்கிறார். இவருக்கு என்ன ஆயிற்று? என நினைத்து குழப்பமடைந்த அவர், சந்திரனின் கையில் இருந்த மண்வெட்டியை வாங்கிப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது.🌴 அவர் சந்திரனிடம், நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டார். அதற்கு சந்திரன் இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை ஐயா. நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றார். 🌴 அதற்கு பணக்காரர் சந்திரனிடம் இந்த மண்வெட்டியைப் போல்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கி விட்டால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நமக்கு எவ்வளவு கடமைகள் இருந்தாலும், நிறைய உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்தாலும், நாம் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலட்சியத்தையும் விரைவில் அடைய முடியும் என்றார்.🌴 பணக்காரர் கூறியதைக்கேட்டு சந்திரன் தன் கையில் இருக்கும் மண்வெட்டியின் முனையைக் கூர்தீட்டினான்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்