ஆக., 10 – கருட ஜெயந்தி
–
ஆழ்வார் என்ற அடைமொழியுடன் இணைந்து, கருடாழ்வார்
என புகழாரம் சூட்டப்பட்டவர், மகாவிஷ்ணுவின் வாகனமான
கருடன்.
தேவர்களின் தந்தையான காஷ்யப மகரிஷியின், மனைவியர்,
வினதை மற்றும் கத்ரு.
வினதை நல்லவள்; அவளது மனதுக்கேற்றாற் போல், அவளுக்கு
கருடனும், அருணனும் பிறந்தனர். சூரியனின் தேரோட்டியாகும்
பாக்கியம் பெற்றான், அருணன்.
–
கத்ருவோ, பொறாமை குணம் கொண்டவள்; வினதையை
அவளுக்கு பிடிக்காது. அவளது குணத்திற்கேற்றாற் போல்,
ஆயிரம் பாம்புகளை, பிள்ளைகளாக பெற்றாள்.
–
உயர்ந்ததை எண்ணுபவர்களுக்கே உயர்ந்தது கிடைக்கும். கத்ரு
போன்ற கெடு குணம் கொண்ட பெண்களுக்கு பாம்பு போன்ற
பிள்ளைகள் தான் பிறப்பர்.
நல்லவர்களுக்கு கடவுள் ஒவ்வொரு நாளையும், நல்ல நாளாக
அமைத்து தருகிறார். நட்சத்திரங்களில் மிக உயர்ந்ததான
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர், கருடன். இந்நாளில் மழை
பெய்து, அதில் ஒரு துளி நீர் சிப்பியில் விழுந்தால், அது, முத்தாக
மாறி விடும்.
–
அதேபோன்று, அன்று பெண்களுக்கு திருமணம் நடந்தால்,
அப்பெண்ணின் பெற்றோர் மோட்ச கதி அடைவர் என்பது,
ஐதீகம்.
இந்த நட்சத்திரத்திற்குரிய தேவதை, வாயு பகவான்;
இவர் காற்றாய் எங்கும் நிறைந்துள்ளார். இதனாலேயே எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருளான பரந்தாமன், தன் நரசிம்ம
அவதாரத்திற்கு இந்த நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்தார்.
–
காற்றாய் பறந்து செல்லும் அரிய சக்தியைப் பெற்றவர், கருடன்.
அச்சக்தியின் மூலம், இளைய தாயாரால், தன் தாய்க்கு ஏற்பட்ட
அவமானத்தை துடைக்க, தேவலோகம் சென்று, அமிர்த கலசத்தை
எடுத்து வந்தார்.
–
தாயின் துயர் தீர்க்க, தன் உயிரையும் கொடுக்க நினைக்கும்
பிள்ளைகள், தேவநிலைக்கு உயர்த்தப்படுவர். அந்த அடிப்படையில்,
திருமாலின் வாகனமானார், கருடன்.
இந்திரத் துய்மன் என்ற மன்னனும், கூகு என்ற கந்தர்வனும்
சாபத்தால், யானை மற்றும் முதலையாக பிறந்தனர். திருமாலை
பூஜிப்பதற்காக, தினமும் திரிகூட மலையிலுள்ள ஒரு நதிக்கு
பூப்பறிக்க செல்லும், யானை. அந்த நதியில் வசித்த முதலை,
ஒரு நாள், யானையின் காலைப் பற்றியது.
–
வலி தாங்க முடியாத யானை, ‘ஆதிமூலமே…’ எனக் கதறியது.
திருமால் கருடனைப் பார்க்க, அவரை கணநேரத்தில் சுமந்து வந்து
யானையைக் காக்க உதவியது, கருடன். இதனால் தான், பெருமாள்
கோவில்களில் முதலில், கருடனை வணங்கி அனுமதி பெற்ற பிறகே,
உள்ளே நுழைவது மரபாக இருக்கிறது.
திருமாலின் திருவடியைத் தாங்கும் பேறுபெற்ற கருடனை,
பெரிய திருவடி மற்றும் கருடாழ்வார் என்று புகழ்கின்றனர்.
கருடனின் அவதார நாளை, சிலர் ஆடி சுவாதியன்றும், சிலர் ஆடி
மாத வளர்பிறை பஞ்சமியன்றும் கொண்டாடுவர். இந்நன்னாளில்,
உயர்ந்த எண்ணங்கள் மனதில் வளர கருடாழ்வாரை பிரார்த்திப்போம்!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்