நட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம். நட்பு, தோழமை, சினேகம் என்பது வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டது.
நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
தோழமை என்பது பூலோகத்தின் சொர்க்கவாசல். அந்த வாசலின் சாவி நம்முடைய நேசம் தான். நட்பு என்பது சுயநலமில்லாமல் இருக்க வேண்டும்.
வரலாற்று பக்கங்களில் எல்லாம் நட்பின் சுவடுகள் இன்னும் அழியாமல்தான் இருக்கின்றன. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, அதியமான்-அவ்வையார் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு, துரியோதனன்-கர்ணன் நட்பு இவையெல்லாம் நட்பின் கோபுரங்கள்.
ஆடை அவிழும் போது கை தானே சென்று கீழே விழாமல் காப்பது போல நண்பன் துன்பப்படும்போது ஓடிசென்று உதவுவது நட்பு என வள்ளுவர் கூறுகிறார்.
நமது வாழ்க்கை பாதையில் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது. நறுமண மலர்களை மாலையாக தொடுக்கும் வாழைநார் கூட பூவின் வாசனையைப் பெற்று நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் வீழ்ந்த வாசனைமிக்கமலரும் சாக்கடையின் வாசத்தையே பெற்றுவிடுகின்றது.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
உண்மையான நண்பர்கள் உங்களுடைய சந்தோ~த்தின்போது காணாமல்போனாலும் உங்களுடைய துயரவேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.
நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள். நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்கவேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
நண்பனின் கெட்டப் பழக்கம் நம்மை பாதிக்குமா?
தீய நண்பர்களின் நட்பும் சகவாசமும் இருக்கும் சிலர், என் நண்பர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், ஆனால் எனக்கு நண்பர்களாக இருந்தால் போதும் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு ஆப்பிள் கூடையில் ஒரு அழுகிய ஆப்பிள் இருந்தாலும் அது மற்ற ஆப்பிள்களையும் கெடுத்துவிடும். அதுபோல இந்த நட்பும் கூடா நட்பாக அமைய வாய்ப்புள்ளது.
தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும், அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். உண்மையில் நட்பு என்கிற சொல்லையே இது களங்கப்படுத்துவதாகும். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான்.
யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
– லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி என்று உங்களின் நண்பர் சொல்கிறாரா? நல்ல நண்பன் யார் ? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை நாளை காண்போம் !
நினைவிருக்கட்டும் !
கூடா நட்பு தூக்குமேடைக்கு வழிகாட்டும்.
ஆனால் நல்ல நட்பு வாழ்க்கையின் சிகரத்திற்கே வழிகாட்டும்.
Filed under: Allgemeines |
Ellaa Uravukalaiyum vida Muthal Idaththil Irukkum Uravu Natpu Thaan(Nanban)…