• ஓகஸ்ட் 2016
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

குரூ பெயற்சியின் நற்பலன்கள் 02.08.2016.

8Blue%20Sapphire

மேஷம்

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

என்ற திருக்குறள் கூறும் கருத்தின்படி நீங்கள் வரவிருக்கும் ஒரு வருட காலத்திற்கும் நடந்துகொள்ள வேண்டும். குழி தோண்டுவதற்காக தன்னை வெட்டுகின்ற மனிதனையும் சேர்த்துத் தாங்கிப் பிடிக்கின்ற நிலம் போல, தன்னை அவமதிப்பவர்களிடமும் பொறுமை காட்டி, மன்னித்து அவர்களுக்கு உதவி செய்து வருவதால் மட்டுமே இந்த ஒரு வருட காலத்தில் உங்களால் நிம்மதியான சூழலைக் காண இயலும்.

இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குரு பகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு வர உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்னை ஏதுமின்றி தனவரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.

ஆறாம் இடத்தில் குரு பகவானின் வாசம் உடல்நிலையை சற்று அசைத்துப் பார்க்கும். சர்க்கரை நோயுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான உழைப்பின் காரணமாக அவ்வப்போது உடல் அசதியால் அவதிப்பட நேரிடும். வீண்வம்பு, வழக்கு வந்து சேரக்கூடும். நமக்கு சம்பந்தமில்லாத அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். தொலைதூரப் பிரயாணங்களின்போது தக்க பாதுகாப்புடனும், மிகுந்த கவனத்துடனும் பயணிக்க வேண்டியது கட்டாயமாகிறது. வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளைத் தற்போது செய்வது நல்லதல்ல. வரும் ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு பணியிலும் மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் ஈடுபட வேண்டியிருக்கும். இந்த குருபெயர்ச்சி மேஷ இராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையே தரும்.

மாணவர்கள்: குருவின் சாதகமற்ற நிலையால் மாணவர்கள் கூடுதல் உழைப்பினை வெளிப்படுத்துவது அவசியம். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற ஆசிரியர்களின் உதவி தேவை. ஆசிரியரோடு உணர்ச்சிவசத்தால் உண்டாகும் கருத்து வேறுபாடு உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

பெண்கள்: கணவரின் உடல்நிலையில் மட்டுமல்லாது மன நிலையிலும் அக்கறை கொள்ள வேண்டிய நேரம் இது. ஏழாம் வீட்டிற்கு 12ல் குரு பகவான் மறைவதால் தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

தொழில், உத்யோகம்: பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது குருபகவானின் சிறப்புப் பார்வை விழுவதால் தொழில் ரீதியாக எவ்விதத் தடங்கலும் இருக்காது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வோடு விரும்பிய இடமாற்றத்தினையும் அடைவார்கள். மற்ற பணியாளர்களின் ஆதரவின்றி தனித்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் சற்று அதிகப்படியான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். காவல்துறையினர், சட்ட ஆலோசகர்கள், போக்குவரத்துறை ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், வருவாய்த் துறையைச் சார்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டு முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

வியாபாரிகள்: தங்கள் தொழிலில் தனித்திறமையின் மூலம் நற்பெயரை அடைவார்கள். குரு பகவானின் பார்வையால் சுயதொழில் சிறக்கும். சிறிய அளவில் முதலீடு செய்யக்கூடிய பெட்டிக்கடை, குடிசைத் தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற தொழில்களைச் செய்து வருவோர் முன்னேற்றம் காண்பார்கள்.

பொதுவான நிலை: சயன, சுக ஸ்தானத்தின் மீதான குருபகவானின் பார்வை இரவினில் நிம்மதியான உறக்கத்தினைத் தரும்.வீண் கற்பனைகள் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கினாலும். குரு பகவானின் பார்வை தைரியத்துடன் செயல்படச் செய்யும் மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் குறைத்தாலும், தன்முயற்சியால் வெற்றி காண வழிவகை செய்யும்.

பரிகாரம்:

மனதினைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. பிரதி மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி நாளில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி பைரவர் வழிபாடு செய்வது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது சேலம் ஊற்று மலையில் அமைந்துள்ள சதுஷ்ஷஷ்டி பைரவர் ஆயலத்திற்குச் சென்று ஸ்ரீசக்ர பைரவரை தரிசித்துவர புத்துணர்ச்சி பெறுவீர்கள். –

ரிஷபம்

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.”

என்ற குறள் கூறும் கருத்தினை வரும் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நல்ல நடத்தை என்பது பின்னாளில் நமக்கு நன்மைகள் விளைவதற்காக விதைக்கும் விதையைப் போன்றது. தீய ஒழுக்கத்தால் உடனேயும் துன்பம் உண்டாகும், பின்னாளிலும் துன்பம் தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எல்லோரிடமும் எளிதில் வெளிப்படையாகப் பழகும் குணத்தினை மாற்றிக்கொள்வது நல்லது.

குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

வரும் ஒரு வருட காலத்திற்குள் நிறைய நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். செல்போன், இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதில் பெரும் பங்காற்றும். இயற்கையாகவே நட்பு பாராட்டும் குணம் கொண்ட நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற இணையதளங்களை அவ்வப்போது உபயோகப்படுத்தி வருவீர்கள்.

ஐந்தாம் இடத்தில் இணைவினைப் பெறும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மனதில் சாந்தமும், வாழ்வில் நிம்மதியும் காண்பீர்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துகளில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அனுகிரகத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும்.

உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் கூடி வரும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரகத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள். இந்த வருடத்தில் மண வாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும்.

மாணவர்கள்: குருவின் சாதகமான சஞ்சாரத்தினால் மாணவர்களின் அறிவுத்திறன் உயர்வடையும். ஆயினும் எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம்பிடிக்க ஜென்ம ஸ்தானத்திலிருந்து தொலைதூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.அயல்நாட்டுப் படிப்பிற்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமானதாக இருக்கும். ஆட்டோ மொபைல்ஸ், கேட்டரிங் டெக்னாலஜி, ஃபேஷன் டெக்னாலஜி, விஸ்கா போன்ற தொழிற்கல்வி சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : சுக்கிரனின் வீட்டினில் சென்று அமரும் குரு பகவான் மனதிற்கு இனிமையான சம்பவங்களை அன்றாடம் சந்திக்க வைப்பார். கேளிக்கைகள், விருந்து கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எனினும் ஆன்மிகத் தேடுதல்கள் அதிகமாக இருக்கும்.

தொழில், உத்யோகம்: தொழில் ரீதியாக இடமாற்றத்தினை சந்திக்க நேர்ந்தாலும் பதவி உயர்வடையும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் நேரடிப்பார்வை விழுவதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள்: இதுநாள் வரை உண்மையாக உழைத்து வந்ததற்கான பலனை அனுபவிக்கத் துவங்குவார்கள். சுயதொழில் செய்வோரில் டிரை கிளீனர்ஸ், ப்யூட்டி பார்லர் போன்ற சுத்தம், சுகாதாரம் சார்ந்த தொழில்கள் சிறக்கும். டிரை ஃப்ரூட்ஸ், விலையுயர்ந்த பழ வகைகள், அளவில் சிறிய ஃபர்னிச்சர் சாமான்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் சில்லறை வணிகர்கள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காது சிறிது நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பொதுவான நிலை: வாழ்வியல் தரம் உயர்வடையும். பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

பரிகாரம்:

பிரதி மாதம்தோறும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் கோபூஜை செய்து வழிபடுங்கள். இயலாதவர்கள் காமதேனு படத்தினை வைத்தும் வழிபட்டு வரலாம். உத்தராயணத்தில் ஒரு முறை, தட்சிணாயணத்தில் ஒருமுறை என வருடத்தில் இருமுறை குறைந்தது 5 சுமங்கலிகளுக்கு போஜனத்துடன் கூடிய தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்கவும். நேரம் கிடைக்கும்போது திருச்சி திருவானைக்காவல் திருத்தலத்திற்குச் சென்று அகிலாண்டேஸ்வரி அன்னையை தரிசித்து வருவது நன்மை தரும்.

மிதுனம்

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்”

என்ற திருக்குறள் கூறும் கருத்தின்படி செயல்பட்டு வருவீர்கள். காலம் கருதி காத்திருந்து, சரியான வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக்கொண்டு செயலாற்றுபவன், உலகம் முழுவதையும் தன்வசப்படுத்த முடியும் என்பதனை முழுவதுமாக புரிந்து வைத்திருப்பீர்கள். கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் குருபகவானின் அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்
படும் திறன் ஓங்கும்.குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையத் துவங்கும்.

நான்காம் இடத்து குருவினால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகரியங்கள் நிறைந்து விளங்கும்.தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துகளை மீட்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சதா உங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். வண்டி, வாகனங்கள் புதியதாய் சேரும். இன்னும் ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது திடீர் பிரயாணங்கள் செய்ய நேரிட்டாலும் நல்ல வாகன சுகம் உண்டு.

தொழில்முறைப் பிரயாணத்தின் போதும் ஆன்மிகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். விரய ஸ்தானமாகிய எட்டாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை சுபச் செலவுகளை உண்டாக்கும். தாயார் வழி சொத்துகள் வந்து சேரும் நேரம் இது. அதே நேரத்தில் அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி விடாமுயற்சியின் பேரில் வெற்றி பெறும் வகையில் அமையும்.

மாணவர்கள்: குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், டீச்சர் டிரெயினிங், பி.எட்., சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

பெண்கள்: உங்களின் விவேகமான அணுகுமுறையால் குடும்பப்பிரச்னைகளை எளிதில் சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்க வைப்பீர்கள். கணவரின் குறிப்பறிந்து செயல்பட்டு வருவீர்கள். ஒரு சிலருக்கு தொழில்முறையில் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் தோன்றக்கூடும்.

தொழில் – உத்யோகம்: 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருபகவானின் நேரடிப்பார்வை தொழில் முறையில் உங்களுக்கு மிகவும் சாதகமான நிலையை உருவாக்கித் தரும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உடனடியாகத் தேடி வரும். உத்யோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தினை அடைவார்கள். அலுவல் பணியில் தினம் தினம் புதிதாக பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தாலும் உங்களின் தனிப்பட்ட அணுகுமுறையால் அவற்றை எளிதாக வென்று நற்பெயர் காண்பீர்கள். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசியர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், வங்கித்துறை பணியாளர்கள், தணிக்கையாளர்கள் ஆகியோர் வெகு சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

வியாபாரிகள்: வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். நவீன வியாபார உத்திகள் தொழில் முறையில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். விளம்பரங்கள் பெரிதும் துணை புரியும். சுயதொழில் செய்வோரில் நகை வியாபாரிகள், ஏஜென்சி துறையைச் சேர்ந்தவர்கள், புரோக்கர்கள், ஆகியோர் முன்னேற்றம் காண்பர். அதே போன்று செல்போன், சிம்கார்டு, ஐபாட், சிடி, டிவிடி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை, ஜெராக்ஸ், அச்சகம், போட்டோ ஸ்டுடியோ, வீடியோ கேம்ஸ், இண்டர்நெட் சென்டர் ஆகிய தொழில்கள் சூடு பிடிக்கும்.

பொதுவான நிலை: பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். 12ம் இடமாகிய சயன சுக ஸ்தானம் குருவின் அனுகிரகத்தினைப் பெறுவதால் இரவினில் நிம்மதியான உறக்கம் கொள்வீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வரப் பிரசாதமாகவே அமைந்துள்ளது.

பரிகாரம்:

தினம் ஒரு தேவாரப் பாடலை படித்து வருவது நல்லது. ஓய்வு நேரத்தில் அருகில் உள்ள சிவாலயத்தை சுத்தம் செய்யும் பணியைச் செய்து வாருங்கள். சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குச் சென்று சொக்கநாதரை தரிசனம் செய்ய மன நிம்மதி உண்டாகும்.

கடகம்

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவது என்பது இழுக்கு”

என்ற திருக்குறள் கூறும் கருத்தினை உறுதியாகப் பின்பற்றி வருவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் துவகுவதற்கு முன்னால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செயல்பட்டு வருவீர்கள். அதேநேரத்தில் காரியத்தில் இறங்கிவிட்டால் அதன் பின்னர் யோசிக்காமல் வேகமாகச் செயல்படுவீர்கள். தற்போது நடைபெற உள்ள குருப்பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள்.

பாக்ய ஸ்தான அதிபதியான குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத விதமாக அலைச்சல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளிக்கும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுத்து விடுவீர்கள். எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கும்.

ஏழாம் இடத்தின் மீதான குருபகவானின் பார்வையால் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பிரச்னைக்குரிய நேரத்தில் நேரத்தினை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. உங்களது எண்ணங்களை வார்த்தைகளாக பிரயோகிக்காது எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது நன்மை தரும். பொருளாதார ரீதியாக சேமிப்பில் சிரமம் கண்டாலும் அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அடுத்தவர்களின் செயல்களைப் பொறுப்பேற்றுச் செய்து கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.

மாணவர்கள்: மாணவர்கள் வரும் ஒரு வருட காலத்தில் சிறிது சிரமத்தினை சந்திப்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவிற்கு ஆளானாலும், குரு பகவான் மூன்றில் அமர்வதால் எழுத்து வன்மை அதிகரிக்கக் காண்பார்கள். வேகமாக எழுதும் திறன் உண்டாகும் என்பதால் அடிக்கடி பாடங்களை எழுதிப் பார்ப்பதை சௌகரியமாக உணர்வீர்கள். மொழிப்பாடங்கள் உள்ளிட்ட கலைப்பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் கண்டு வருவார்கள். கணிதம் உள்ளிட்ட அறிவியல் பிரிவு மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது.

பெண்கள்: பிறந்த வீட்டாரோடு சொத்துப் பிரச்னைகளில் கருத்து வேறுபாடு தோன்றக் கூடும். கழுத்துவலி, இடுப்புவலி, நரம்பு பலவீனம் போன்ற பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

தொழில் – உத்யோகம்: உத்யோகரீதியாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். விடாமுயற்சியும் தனித்திறமையுடன் கூடிய செயல்பாடுகளும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும்.உடன் பணிபுரிவோர் செய்ய வேண்டிய பணிகளையும் நீங்களே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். பணிச்சுமை அதிகரிப்பது போல் உணர்வீர்கள். தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள், அரசுத்துறை பணியாளர்கள், வழக்கறிஞர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் ஆகியோர் ஏற்றம் காண்பார்கள். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் அடுத்தவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

வியாபாரிகள்: தொழில் நிலையில் அபிவிருத்தி கண்டு வந்தாலும் சதா பணமுடை இருப்பதைப் போல் உணர்வார்கள். எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உத்யோக முறையில் ஸ்திரமில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள் உத்யோகம் ஓரிடத்தில் நிலைபெறக் காண்பார்கள். நேர்மையும், நாணயமும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் சீரான தனலாபத்தினை அடைந்து வருவார்கள்.

பொதுவான நிலை: ஓய்வின்றி செயல்பட்டு வரும் உங்களுக்கு இந்த வருடத்தில் கடுமையான போட்டி உண்டாகும். உங்கள் திறமையால் கடுமையான சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் முயற்சிகளை வெற்றிபெறச் செய்யும் வகையில் குருபகவான் துணைநிற்பார்.

பரிகாரம்:

பிரதி மாதம் வரும் அமாவாசை நாளன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். விட்டுப்போன முன்னோர் வழிபாட்டினை உடனடியாகச் செய்வதும் குடும்பத்திற்கு நல்லது. அபிராமி அந்தாதி பாடல்களைப் படித்து வருவதும் அற்புதமான பலனைத் தரும். நேரம் கிடைக்கும்போது திருக்கடையூர் திருத்தலத்திற்குச் சென்று அமிர்தகடேஸ்வர ஸ்வாமியை தரிசித்துவர கவலை மறந்து மனத்தெளிவு காண்பீர்கள்.

சிம்மம்

“யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு.”

என்ற குறள் கூறும் கருத்தினை இனி வரும் ஒரு ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். எப்பேர்பட்ட உயர்பதவியில் இருந்தாலும், பேசும்போது ஜாக்கிரதையுடன் சொற்களை கையாள வேண்டும். நாவினை அடக்கிப் பேசாவிட்டால் சொற்குற்றம் உண்டாகி அதனால் துன்பப்பட வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேபோல அவசரப்பட்டு கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவதற்குள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவீர்கள். எச்சரிக்கை தேவை.

கடந்த ஒரு வருட காலமாக ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பயனைத் தரும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். எனினும் 5, 8ம் இடத்திற்கு அதிபதியாகிய குரு தன ஸ்தானத்தில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவினத்தை சந்திப்பீர்கள், எந்த ஒரு விஷயத்தையும் கையாளுவதற்கு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதிலுள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும்.

குரு பார்வை ஆறாம் இடத்தின் மீது விழுவதால் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். ரத்தக் கொதிப்புநோய் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்வது நல்லது. கடன் பிரச்னைகள் குறைந்து நிம்மதி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும். சில நேரங்களில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

மாணவர்கள்: அர்த்தாஷ்டம சனியால் சற்றே சிரமப்பட்டு வரும் சிம்ம ராசி மாணவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தருகிறது. பொதுஅறிவு உயரும். ஞாபகமறதி தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். பாடங்களில் எழும் சந்தேகங்களை ஆசிரியர்களின் துணையோடு உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. அனைத்துப் பிரிவு மாணவர்களும் தேர்வு நேரத்தில் குரு பகவானின் துணையோடு சிறப்பாக செயல்படுவர்.

பெண்கள்: குடும்பத்தில் உங்கள் பொறுப்பு உயரும்.குடும்பத்தினரின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பீர்கள்.பண விவகாரங்களைத் தனித்துக் கையாளுவது நல்லதல்ல.

தொழில் – உத்யோகம்: 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப் பார்வை உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்தும். உத்யோக ரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். அரசுப் பணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். உத்யோக முறையில் ஸ்திரமில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள் உத்யோகத்தில் ஓரிடத்தில் நிலைபெறக் காண்பார்கள். நேர்மையும், நாணயமும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர், தொழிலாளிகள் சார்ந்த பிரச்னைகளை மிகுந்த லாவகத்தோடு கையாண்டு நற்பெயர் காண்பார்கள்.

வியாபாரிகள்: சுயதொழில் செய்வோர் சீரான தனலாபத்தினை அடைந்து வருவார்கள். அதே நேரத்தில் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு கணக்கு வழக்குகளை கையாள வேண்டியது அவசியம். மளிகை, ரியல் எஸ்டேட், கட்டிடத்துறையைச் சார்ந்தவர்கள் அதிக எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

பொதுவான நிலை: உங்கள் இராசிக்கு 5, 8க்குரிய குரு பகவான் இரண்டாம் இடத்தில் அமர்வதால் சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆயினும் ஏதேனும் ஒரு வழியில் பொருள் வரவு தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும். மொத்தத்தில் செலவினங்களுக்குத் தகுந்தாற்போல் வரவும் அதிகரிப்பதால் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைத் தருகின்ற வகையிலேயே அமைந்துள்ளது.

பரிகாரம்:

தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. இலவசமாக நடைபெறும் மருத்துவ முகாம்களுக்குச் சென்று இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியினை செய்து வாருங்கள். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில் சரபேஸ்வர ஸ்வாமியை வணங்கி வாருங்கள். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்துகொள்வது நன்மை தரும்.

கன்னி

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.”

என்ற திருக்குறள் கூறும் கருத்தின்படி நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம் ஆகிறது. குளத்தில் உள்ள தண்ணீரின் அளவிற்கு ஏற்பத்தான் தாமரை மலரின் தண்டு நீளும். அதேபோல உங்கள் உள்ளத்தில் உண்டாகும் ஊக்கத்தின் அளவிற்கு ஏற்பத்தான் உங்கள் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும் என்பதை புரிந்துகொண்டு வரும் ஒரு வருட காலத்திற்கு ஊக்கத்தோடு செயல்படவேண்டியது அவசியமாகிறது.

பொதுவாக ஜென்ம குருவினால் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேர்ந்தாலும், மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு வழிகளைப் பின்பற்ற இயலாது என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண வேண்டியிருக்கும். 4ம் இடத்தின் அதிபதி ஜென்ம ராசியில் இடம்பெறுவது சிறப்பான நற்பலன்களைத் தரும். ஏதேனும் ஒரு வழியில் புதிய சொத்துகள் சேரும். ஆயினும் ஜென்ம குருவினால் உண்டாகும் மனசஞ்சலம் இருந்து வருவதைத் தவிர்க்க இயலாது.

கோயில்களுக்குச் செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான, தர்மங்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் மனதில் திருப்தி காண இயலும். குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குருபலமும் வந்து சேர்கிறது. இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்ர காரகனான குருவின் அருட்பார்வை ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் நெடுநாட்களாக பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள்.

பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் அனுகூலத்தினை தரும்.

மாணவர்கள்: மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவினில் குருவின் அருளால் இடம் கிடைக்கும். அறிவியல் துறை சார்ந்த மாணவர்களை விட கலைத்துறையைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். குறிப்பாக மொழிப்பாடங்கள், கணக்குப் பதிவியல், ஆசிரியர் பயிற்சி, கல்வித்துறை மற்றும் சட்டம்சார்ந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை அடைவார்கள்.

பெண்கள்: களத்ர ஸ்தானாதிபதி குரு பகவான் ஜென்ம இராசியில் இடம்பிடிப்பதால் தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். கணவர் தனது பணிகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பார். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவீர்கள்.

தொழில் – உத்யோகம்: உத்யோக ரீதியாக மறைமுக எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் மிகுந்த கவனத்துடன் பழக வேண்டியது அவசியம். மேலதிகாரிகள் தங்கள் தவறினை மறைக்க உங்களை பலிகடா ஆக்க முயற்சிக்கக் கூடும். அவ்வப்போதைய பணிகளை தள்ளிப்போடாது உடனுக்குடன் முடித்து வைத்துக் கொள்வது நல்லது. அலுவல் பணி நிமித்தம் காரணமாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றம், கேம்ப் செல்லுதல் போன்ற கூடுதல் சுமைக்கு ஆளாவீர்கள். கல்லூரி விரிவுரையாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பார்கள்.

வியாபாரிகள்: சுயதொழில் செய்பவர்கள் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபத்தினைத் தரும். அக்கவுன்ட்ஸ், ஆடிட்டிங், கலைத்துறையினர், திரைப்படக் கலைஞர்கள், அனிமேஷன் துறையைச் சேர்ந்தவர்கள், அழகுக் கலை நிபுணர்கள், ஹோட்டல் பணியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வேத விற்பன்னர்கள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காண்பார்கள்.

பொதுவான நிலை: இயற்கையில் அமைதி யான சுபாவம் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜென்மத்தில் அமர்ந்து நிறைய மறக்க முடியாத அனுபவ பாடங்களைக் கற்றுத் தந்து நற்பலனை அருளுவார். பொதுவாக இந்த ஒரு வருடத்தில் மன சஞ்சலம் என்பது ஒரு புறம் இருந்தாலும் ஏதேனும் ஒருவழியில் புதிய சொத்துக்கள் சேரக் காண்பீர்கள்.

பரிகாரம்:

ஏகாதசி நாளில் விரதம் இருப்பது உடல்நலத்திற்கு நல்லது. தினமும் காலையில் துளசி தீர்த்தத்தினை சிறிதளவு பருகி வருவதால் நரம்பு மண்டலம் வலிமை பெறும். புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வருவது நல்லது. இயலாதவர்கள் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வாருங்கள். நேரம் கிடைக்கும்போது திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாப ஸ்வாமியை தரிசித்து வர நன்மை உண்டாகும்.

துலாம்

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்”

என்ற குறள் கூறும் கருத்தின்படி செயல்பட்டு வருவீர்கள். நமக்கு தீங்கு செய்பவர்களுக்கும் நன்மை செய்வதன் மூலமாக அவர்களை வெட்கி தலைகுனிய வைப்பீர்கள். வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது.

சிந்தனையில் இருப்பவற்றை செயல்படுத்த நினைப்பது நடைமுறை வாழ்வினில் எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். 11ம் இடமாகிய லாப ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு பகவான் 12ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் வந்து அமர்வது பொருளாதாரரீதியாக சற்று சிரமமான சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.

முக்கியமான பணிகளின்போது அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தேவையான ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. குடியிருக்கும் வீட்டினில் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வண்டி, வாகனங்கள் சேரும். தாயார்வழி உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

12ம் இடத்தில் குரு பகவான் அமர்வதால் ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். ஆன்மிகரீதியாக தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். விடை தெரியாத கேள்விகளால் மனதில் குழப்பமான சூழல் நிலவி வரும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும்.உறக்கத்தின்போது அவ்வப்போது கனவுத் தொல்லைகளால் அவதிப்பட நேரிடும்.

மாணவர்கள்: வித்யா ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் சாதகமான பார்வையால் மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவினில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்கும்.மொழி இலக்கியம், ஆசிரியர் பயிற்சித் துறை மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.எழுத்து வேகத்தினை உயர்த்திக் கொள்ள நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழக வேண்டியது கட்டாயமாகிறது.

பெண்கள்: கணவரின் உடல்நிலையில் மட்டுமல்லாது மன நிலையிலும் அக்கறை கொள்ள வேண்டிய நேரம் இது. தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தம்பதியருக்குள் பிரச்னை உருவாகும்போது நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பணிச்சுமை காரணமாக பிள்ளைகள் மற்றும் கணவருடன் தனிமையில் செலவழிக்கும் நேரம் வெகுவாகக் குறையும்.

தொழில் – உத்யோகம்: அலுவல்பணி காரணமாக எதிர்பாராத பயணங்களையும், இடமாற்றத்தினையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. மேலதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் தோன்றலாம். உங்களுக்குக் கீழ் பணி செய்வோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.கெமிக்கல்ஸ், பொது மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத்துறையைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள்.ஆசிரியர், வேத விற்பன்னர்கள், நீதித்துறையைச் சார்ந்தவர்கள் அதிக எச்சரிக்கையுடன் தங்கள் பணியில் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

வியாபாரிகள்: எதிர்பார்க்கும் லாபத்தினைக் காண்பது சிரமம் என்பதால் அவசரப்பட்டு அதிக முதலீட்டில் ஈடுபடாது நிதானமாக செயல்படுவது நல்லது.சுயதொழில் செய்து வருவோருக்கு சோதனைக் காலமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஃபேன்சி ஸ்டோர், ஜவுளி, பிரின்டிங், எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் ஆகிய தொழில்கள் ஏற்றம் அடையும்.

பொதுவான நிலை: இயற்கையில் எல்லோருக்கும் நல்லது செய்ய நினைக்கும் நீங்கள் இந்த ஒரு வருட காலத்திற்கு நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.அடுத்தவர்களுக்கு நாம் நல்லது செய்ய நினைத்தாலும் அது அவர்களது கண்களுக்கு தவறாகவே தோன்றும்.இந்தக் குருப்பெயர்ச்சியினால் அடுத்த ஒரு வருட காலத்திற்கு அதிக அலைச்சலையும், போராட்டத்தினையும் சந்தித்து வெற்றி காணும் சூழலே நிலவும்.

பரிகாரம்:

பிரதி மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்தில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். முடிந்தால் ஏதேனும் ஒரு பிரம்மச்சாரி சிறுவனுக்கு உணவளிப்பது நல்லது. நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நன்மை உண்டாகும்.

விருச்சிகம்

“ஆக்கமும் கேடும் அதனால் வருவதால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு”

என்ற குறள் கூறும் கருத்தின்படி செயல்பட வேண்டியது அவசியம். நன்மையும் தீமையும் பேசுகின்ற சொல்லைப் பொறுத்தே வரும். தவறான பொருள் தரும் கருத்துடைய சொற்களைப் பேசிவிடாதபடி நாக்கை அடக்கி கவனத்தோடு காத்துக் கொள்ள வேண்டும். வெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு குரு பகவான் வரவிருப்பது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாக இருக்கும். இறங்கிய காரியங்களில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிக தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். ஐந்தாம் இடத்தின் மீது குருவின் நேரடிப் பார்வை விழுவதால் சிந்தனையில் இருந்து வரும் குழப்பங்கள் விலகி ஓரளவிற்கு மனத் தெளிவு கிடைக்கக் காண்பீர்கள்.

10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் இதுவரை குரு பகவான் சஞ்சரித்ததால் உங்களது உண்மையான உழைப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளீர்கள். இப்பொழுது அவர் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கு வர உள்ளார். அதுவும் தனஸ்தானமாகிய 2ம் இடத்திற்கு அதிபதி லாபத்தினைத் தரும் 11ம் இடத்தில் அமர்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். இதுநாள் வரை சிரமத்தினை சந்தித்து வந்த நீங்கள் அதற்கான தனலாபத்தை அடைய உள்ளீர்கள். உண்மையாக உழைத்ததற்கான பலன் தற்போது கிட்டும். மேலும், 11ம் இடம் என்பது வெற்றியைக் குறிக்கும் இடம் என்பதால் நினைத்த காரியம் ஜெயமாகும். நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான லாபமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும்.

மாணவர்கள்: குருவின் சாதகமான சஞ்சாரத்தினால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வடையும். எதிர்பார்க்கும் பாடப்பிரிவில், எதிர்பார்க்கும் கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆட்டோ மொபைல்ஸ், ஜெனிட்டிக் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகள் சிறப்பான முன்னேற்றம் தரும். இயற்பியல் துறை சார்ந்த படிப்புகளும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கைகொடுக்கும்.

பெண்கள்: ஏழாம் இடத்தின் மீது குரு பகவானின் விசேஷ பார்வை விழுவதால் தாமதமாகி வந்த திருமணம் உடனடியாக நடக்கும். தம்பதியருக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். கணவர் வழி உறவினர்களுக்கு அவ்வப்போது உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயர்வு காண்பதோடு அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்காக சொத்து சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

தொழில் – உத்யோகம்: தொழில் முறையில் காணும்போது வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுன்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். தொழில் நுட்பம், மெக்கானிகல் மற்றும் இதர அறிவியல் துறை சார்ந்த பணியாளர்கள் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைத்து வரும். அதேநேரத்தில் தங்களுக்குக் கீழ் பணி செய்வோரின் ஒத்துழைப்பும் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். தகவல் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் அமர்ந்த இடத்திலிருந்தே நினைக்கும் விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். செல்போன், இன்டர்நெட் போன்ற சாதனங்கள் உங்களின் மூன்றாவது கரமாக செயல்படும். உதவியாளர்கள் நேர்மையான முறையில் பணியாற்றி உங்கள் பணிச்சுமையைக் குறைப்பார்கள்.

வியாபாரிகள்: சுயதொழில் செய்வோரில் டிராவல்ஸ், ரியல் எஸ்டேட், அரசுத்துறை கான்ட்ராக்டர்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

பொதுவான நிலை: எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்துவதால் வெற்றி என்பது உறுதியாகிறது. ஒவ்வொரு செயலிலும் தனிப்பட்ட முறையில் உங்கள் முத்திரையை பதித்து வருவீர்கள். தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள். நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்குத் துணை நிற்பார்கள். பொது ஜனத் தொடர்பின் மூலம் பல காரியங்கள் சித்தியாகும்.மொத்தத்தில் வரும் ஒரு வருட காலத்திற்கு ஜென்மச் சனியால் உண்டாகும் தொந்தரவுகள் குறைந்து சிறப்பான வெற்றியினை காண உள்ளீர்கள்.

பரிகாரம்:

பிரதி மாதம்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி நாளில் விரதம் இருந்து சுப்ரமணியரின் சந்நதியில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வருவது நல்லது. செவ்வாய் தோறும் கந்த சஷ்டி கவசம் படித்து வருவதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை தரிசித்து வாருங்கள்.நினைத்த காரியம் கைகூடும்.

தனுசு

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்தி விடும்”

என்ற குறள் கூறும் கருத்தின்படி வரும் ஒரு வருட காலத்திற்கு ஓயாமல் செயல்பட்டு வருவது நல்லது. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் செல்வம் சேரும்.முயற்சி இல்லையேல் செல்வம் குறைந்து வறுமை வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த குருப்பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத் தரும்.பத்தாம் இடத்து குரு பதவியைப் பறிப்பார் என்ற கூற்று தவறான ஒன்று என்பதை அனுபவப் பூர்வமாக உணர இருக்கிறீர்கள்.

உங்களது இராசிக்கு அதிபதியான குரு பகவான் 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் வந்து அமர்வதால் எந்தவித பாதிப்பும் நேராது. தொழில் ரீதியாக அதிக அலைச்சலைத் தருவாரே தவிர பதவியைப் பறிக்க மாட்டார். சிரமப்படுவதற்கான நற்பலனையும் குரு பகவான் அளிப்பார். உங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான உழைப்பினால் நற்பெயரோடு புகழையும் அடைவீர்கள். இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்புகள் உயரத் துவங்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவி வரும்.

குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக் கூடும். முக்கியமான பணிகளின்போது அடுத்தவர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். மாற்று மதத்தினருடன் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது அவ்வப்போது பழுதடைந்து சிரமத்தினைத் தரலாம். சுகஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டின் மீதும் குருபகவானின் நேரடிப்பார்வை விழுவதால் சுகமான வாழ்வியல் நிலைக்குக் குறைவிருக்காது.

மாணவர்கள்: மாணவர்களின் கல்வித் தரம் உயரும். உயர்கல்வி மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளில் இடம் கிடைக்கப் பெறுவார்கள். கல்வியியல், மொழியியல், வானவியல் மற்றும் இதர ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மிகவும் ஏற்றம் தரும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு சாதகமான காலமாக அமையும். கலைப் பிரிவில் மொழிப் பாடங்கள் தவிர இதர படிப்புகளைச் சார்ந்த மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்கள்: பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிர்காலம் குறித்த திட்டங்களில் கணவருடன் இணைந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தினை காண்பீர்கள். அவரது வழி உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நண்பர்களும், உறவினர்களும் மீண்டும் வந்து உறவாடுவதற்கான வாய்ப்பு உண்டு.மாற்று மதத்தினர், முன்பின் அறிந்திராத பெண்டிர் ஆகியோருடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம்.

தொழில் – உத்யோகம்: தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க உள்ளீர்கள்.அரசுப் பணியாளர்கள், உத்யோகஸ்தர்கள் தங்களின் நேர்மையை நிரூபிக்கும் பொருட்டு அதிகம் மெனக்கெடுவார்கள்.சிறு சிறு விவகாரங்களையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும்.வங்கி, இன்ஷ்யூரன்ஸ், ரெவின்யூ, நீதித்துறை, கல்வி, அறநிலையத்துறை பணியாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வினை அடைவார்கள்.

வியாபாரிகள்: சுயதொழில் செய்வோர், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியோர் தொழிலாளர்களுடன் நிதானமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

பொதுவான நிலை: ஏழரைச்சனியின் காலத்தில் ஜென்ம ராசியின் மீது இருந்து வந்த குரு பகவானின் பார்வையும் அகலுவதால் இக்கட்டான சூழலில் முடிவெடுக்க இயலாது லேசான தடுமாற்றத்திற்கு உள்ளாவீர்கள்.அடுத்தவர்களின் ஆலோசனையை கேட்பதை விடுத்து உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை எந்தவித தயக்கமுமின்றி செய்து வாருங்கள். அடுத்து வரவுள்ள ஒரு வருட காலமும் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தினால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பரிகாரம் :

ஒவ்வொரு வியாழன் தோறும் குருமகான்களாக இருந்து தெய்வங்களாய் அருள்பாலிக்கும், ஸ்ரீராகவேந்திரர், சத்குரு சாயிபாபா, காஞ்சிமகா பெரியவர் போன்றவர்களை வணங்கி வாருங்கள். வறுமையில் வாடும் மாணவர் ஒருவரின் கல்விச் செலவினை ஏற்றுக் கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுவாமிமலைக்குச் சென்று சுவாமிநாத ஸ்வாமியை வணங்கி உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.

மகரம்

“தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.”

என்ற திருக்குறள் கூறும் கருத்தினை எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஆராயாமல் எளிதில் நம்பி விடுவதும், நன்கு ஆராய்ந்து நம்பியவனிடத்தில் அவ்வப்போது சந்தேகம் கொள்வதும் ஓயாத துன்பத்தைத் தரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரத்தினால் கண்டு வந்த சிரமங்கள் நீங்கி நற்பலன்களைக் காண உள்ளீர்கள். 8ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் இடமாகிய பாக்ய ஸ்தானத்திற்கு இடம் பெயர உள்ளார்.

மனதினில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். தர்ம, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை ஒதுக்கிவிட்டு சரியான பாதையில் பயணித்து வருவீர்கள். உங்கள் ராசியின் மீது குருவின் சிறப்புப் பார்வை விழுவதால் தன்னம்பிக்கையோடு எல்லா விஷயங்களையும் எதிர் கொள்வீர்கள். வருகின்ற ஒரு வருட காலத்தில் முழு ஈடுபாட்டோடு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி காண இயலும். இதுநாள் வரை இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகளை உங்களின் அணுகுமுறையால் சரி செய்வீர்கள் உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

சகோதர, சகோதரிகளுக்குத் தேவையான உதவியினைச் செய்ய முனைவீர்கள். குருபகவானின் சாதகமான சஞ்சாரத்தினால் உங்களின் நல்லெண்ணங்களும், நற்சிந்தனைகளும் வெளிச்சத்திற்கு வரும். அதிகம் பேசுவதை விட உங்கள் சிந்தனைகளை எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். வாக்குவன்மையை விட எழுத்து வன்மை பலம் பொருந்தியதாக அமையும். சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப்பார்வை உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.எண்ணிய காரியங்கள் நியாயமான முறையில் நடைபெறும்.

மாணவர்கள்: உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குறிப்பாக எம்.ஃபில்., பி.எச்டி., ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். கணக்குப் பதிவியல், பொருளாதாரம், அக்கவுன்ட்ஸ், ஆடிட்டிங், மொழிப் பிரிவு பாடங்கள், அரசியல் மேலாண்மை போன்ற கலைப்பிரிவு பாடங்களைப் படித்து வரும் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கணிதம், கணிப்பொறி அறிவியல் தவிர ஏனைய அறிவியல் பாடங்களை படித்து வருவோர் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பெண்கள்: திருமணத் தடையை சந்தித்து வந்த பெண்கள், குருபலத்தின் காரணமாக தடைகள் விலகி விரைவில் திருமணம் நடக்கக் காண்பார்கள். எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு வரன் அமையும் காலம் இது. 5ம் இடம் சந்தான பிராப்தியைத் தரும் வல்லமை உடையது என்பதால் குருவின் சிறப்புப் பார்வை குழந்தைப் பேறுக்காகக் காத்திருப்போருக்கு வாரிசு அமையும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரும். குடும்பப் பெரியவர்கள் உங்களுக்கு பக்க பலமாகத் துணை நிற்பார்கள்.

தொழில் – உத்யோகம்: உத்யோக ரீதியாக எதிர்பாராத வகையில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு வந்து சேரும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நற்பெயரைக் கண்டாலும் பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அயல்நாட்டு பணிக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்பு வந்து சேரும். உத்யோக இடமாற்றம் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேர்ந்தாலும், மன உறுதியோடு செயல்படுவீர்கள்.

வியாபாரிகள்: சற்று அதிக அலைச்சலை சந்தித்தாலும் தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தினை உணர்வார்கள். பழைய இரும்பு சாமான்கள் வியாபாரம், லேத் பட்டறை, வெல்டிங் ஒர்க்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், கேட்டரிங் ஒர்க்ஸ், புரோகிதம் ஆகிய தொழில்களைச் செய்வோர் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பொதுவான நிலை: பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் அகன்று அனுகூலம் காண்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமான முறையில் முடிவடையும். குரு பகவானின் ஒன்பதாம் இடத்துச் சஞ்சாரம் ஆன்மிகப் பயணங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அதிக தன லாபத்தினைத் தராவிட்டாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் அமைவதோடு நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்:

பிரதோஷ நாட்களில் நந்தியம்பெருமானை வழிபட்டு வருவதால் தடைகள் விலகக் காண்பீர்கள். சனிப்ரதோஷ நாட்களில் சிவாலயத்தில் அன்னதானம் செய்வதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது, வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள திருப்புன்கூர் திருத்தலத்திற்குச் சென்று நந்தனாருக்கு சிவதரிசனத்திற்கு விலகி வழிவிட்ட நந்தியையும், எம்பெருமானையும் தரிசியுங்கள். வாழ்வினில் தடைகள் அகன்று முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்

“அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.”

என்ற திருக்குறள் சொல்லும் அறிவுரையை முழுமையாக மனதில் கொள்ள வேண்டும். அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் அதனை எதிர்ப்பதற்கு பெயர் தைரியமல்ல, அது முட்டாள்தனம். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதை கோழைத்தனம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுவே அறிவுடையவர்களின் செயல் என்பதனைப் புரிந்துகொண்டு செயல்பட்டீர்களேயானால் வம்புதும்பு ஏதுமின்றி வாழ்க்கை சுமூகமாக செல்லும்.

கடந்த ஒரு வருட காலமாக 7ம் வீட்டினில் அமர்ந்து உங்கள் ராசியின் மீது தனது பார்வையை செலுத்தி வந்த குரு பகவான் வரும் 2.8.2016 முதல் தனது பார்வையை விலக்கிக்கொண்டு எட்டாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். குருபகவானின் பார்வை இருந்ததால் ஜென்ம கேதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டிருந்த நீங்கள் இப்போது கேதுவின் ஆதிக்கத்திற்குள் கட்டுப்பட வேண்டிய சூழல் உருவாகும்.கூடவே குரு பகவானின் அஷ்டம ஸ்தானத்து வாசமும் சிரமத்தினைத் தரும் வகையில் அமையும். ஜனன ஜாதக ரீதியாக நல்ல தசாபுக்தி நடைபெற்று வந்தால் பிரச்னை ஏதும் இல்லை.

கேதுவின் தாக்கத்தினால் மனதில் லேசான சோம்பேறித்தனம் குடிகொள்வதோடு சற்று அசட்டையாகவும் செயல்படுவீர்கள். இதனால் இறங்கிய செயல்களில் முழுமையான வெற்றியை அடைய இயலாது போகும். எனினும் ராசியாதிபதி சனி ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் சோம்பல்தன்மையை விட்டொழித்து கடுமையாக உழைத்தீர்களேயானால் அதிக சிரமம் உண்டாகாது. குருவின் பார்வையும் இல்லாத நிலையில் சனி ஒருவரே உங்கள் ராசிக்கு வலுவூட்டுபவராக இருக்கிறார்.

உங்கள் ராசிக்கு தன, லாப ஸ்தானங்களுக்கு அதிபதியான குரு பகவான் எட்டில் அமர்வதால் ஒரு சில வேண்டாத செலவுகளுக்கு ஆளாகலாம். மனதிற்குப் பிடித்தமில்லாத சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும். எதையும் திட்டமிட்டு செயல்பட இயலாத வண்ணம், நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமைவது கண்டு மன வருத்தம் கொள்வீர்கள். இதனால் மனதில் தைரியக்குறைவு உண்டாவதோடு தேவையற்ற கற்பனைகளுக்கு இடமளித்து அநாவசியமான பயத்தினை வரவழைத்துக் கொள்வீர்கள். மொத்தத்தில் பணம் சார்ந்த விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மாணவர்கள்: நான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் மாணவர்களின் கல்வித் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்தித்தாள், தொலைக்காட்சி மூலமாக அறிந்து கொண்டு மனதில் நிறுத்திக் கொள்வது எதிர் காலத்திற்கு நன்மை தரும். வேதியியல், புவியியல், மொழிப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

பெண்கள்: குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை பலம் விழுவதால் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.பொறுப்புகள் கூடும்.குடும்பத்தினர் யாவரும் தங்கள் பணிகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர்.மற்றவர்களுக்காக உழைக்கும் நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ன ஏக்கம் மனதில் இருந்து வரும்.

தொழில் – உத்யோகம்: உத்யோக முறையில் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டியிருக்கும். மேலதிகாரிகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் எந்தச் சூழலிலும் நிதானத்தோடு எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. மருத்துவம், ராணுவம், போக்குவரத்து துறைகளைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

பொதுவான நிலை: பூர்வீகச் சொத்துகள், பாகப் பிரிவினை போன்ற விஷயங்களில் உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.புதிய நட்புறவு, பயணத்தின் போது உண்டாகும் திடீர் சிநேகம் ஆகியவற்றில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. அநாவசிய செலவுகளைத் தவிர்க்க கையில் ரொக்கமாக பணம் வைத்துக் கொள்ளக் கூடாது.அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதால் பொருளிழப்பினைத் தவிர்க்க இயலும்.பொதுவாக நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பதே அஷ்டமத்து குருவினால் உண்டாகும் விளைவாக இருக்கும்.

பரிகாரம்:

பிரதி மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி நாட்களில் வாராஹி அம்மனை வழிபட்டு வருவது நல்லது. தனியாக வாராஹி அம்மனின் ஆலயத்தினை காண இயலாதவர்கள் அருகில் உள்ள சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சப்தமாதர்களில் இடம்பெற்றுள்ள வாராஹிக்கு விசேஷ அபிஷேகம் செய்தும் வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது தஞ்சாவூர் பெரியகோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் மஹாவாராஹி அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.அவள் அருளால் பாதுகாப்புடன்
வாழ்வீர்கள்.

மீனம்

“மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து
அறன் ஆகுல நீர பிற.”

என்ற திருக்குறள் கூறும் கருத்தின்படி நடந்து வருவீர்கள். மனதில் எந்தவிதமான குற்றமான நோக்கமும் இன்றி செய்கின்ற நல்ல காரியம்தான் அறம் ஆகும். சுயநல நோக்கத்தோடு எந்த தர்மத்தினை செய்தாலும் அது வெறும் ஆடம்பரம்தானே தவிர அறம் ஆகாது என்ற கருத்தினில் உறுதியாக நிற்பீர்கள். கடந்த ஒரு வருட காலமாக சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிம்மதியைத் தரும் வகையில் அமையும். ஆறாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குருபகவான் தனது நேரடிப் பார்வையை உங்கள் ராசியின் மீது செலுத்துவதால் குருபலத்தினை அடைகிறீர்கள்.

“குரு பார்க்க கோடி நன்மை” என்பது போல் தடைபட்டிருந்த உங்கள் ஆசைகளும், விருப்பங்களும் வருகின்ற ஒரு வருட காலத்திற்குள் நிறைவேறும். குருவின் பார்வை ஜென்ம ராசியின் மீது விழுவதால் எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகன்று மன நிம்மதி காண்பீர்கள். மனதில் மகிழ்ச்சி குடிபுகும் நேரம் இது. ஜென்ம இராசியதிபதியான குருபகவான் ஜென்ம இராசியை கவனித்து வருவதால் வாழ்வியல் தரம் உயர்வடையக் காண்பீர்கள்.

மூன்றாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப் பார்வை மனதில் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும்.உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.முக்கியமான நேரத்தில் எதிர்பாராத வகையில் உதவிகள் வந்து சேரும். எந்த ஒரு பணியும் உங்கள் முயற்சியால் தடையில்லாமல் நடந்தேறும். சிந்தனையில் தோன்றுவதை உடனடியாக செயல்படுத்த முயற்சித்து வெற்றி காண்பீர்கள்.வெற்றியைத் தரும் 11ம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை உங்களின் வெற்றியை உறுதி செய்யும்.

மாணவர்கள்: மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி காண்பார்கள். ஆயினும் உயர்கல்வியில் விரும்பியப் பாடப்பிரிவில் இடம் கிடைக்க சிரமப்பட வேண்டியிருக்கும்.அவ்வப்போது ஞாபக மறதிக்கு ஆளாகி வருவதால் கூடுதல் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது. அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், காமர்ஸ், எகனாமிக்ஸ், எம்.பி.ஏ., படித்து வரும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சிவில் சர்வீஸ் தேர்விற்காக பயிற்சி பெறும் மாணவர்கள் பலன் பெறுவர். அறிவியல் துறை சார்ந்த மாணவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம்.

பெண்கள்: கடந்த காலத்தில் திருமணத்தடை கண்ட பெண்கள்ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரஹத்தால் இந்த வருடத்தில் திருமணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள்.குருபலத்தின் காரணமாக இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும்.

தொழில் – உத்யோகம்: குரு பகவானின் இந்த பெயர்ச்சி நிலை தொழில்முறையில் உங்களுக்கு பெருத்த மாறுதலைத் தோற்றுவிக்காது.எனினும் குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருக்கும் நீங்கள் செய்யும் செயல்கள் யாவும் நன்மை தரும் வகையிலேயே முடிவடையும் என்பதால் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவீர்கள்.உயரதிகாரிகளிடம் நற்பெயர் காண்பதோடு பதவி உயர்விற்கான வாய்ப்பினையும் அடைவீர்கள். அரசியல்வாதிகள் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினைக் காண்பார்கள். ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், ஐ.டி. துறை பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பர்.

வியாபாரிகள்: சுயதொழில் செய்பவர்கள் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் தொழில்துறையில் நல்ல பெயரை அடைவார்கள்.ளையை முலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள், தரகு, கமிஷன் தொழில் செய்து வருவோர், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், ஆலய அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் ஆகியோருக்கு
பொற்காலமாய் அமையும்.

பொதுவான நிலை: குரு பகவான் ஏழாம் பாவகத்தில் இணைவினைப் பெற்றுள்ள இக்காலக் கட்டத்தில் ஆன்மிகப் பெரியோர்கள், சாதுக்கள், சந்நியாசிகளுடன் சந்திப்பு நிகழும் வாய்ப்பு உண்டு. இக்கட்டான சூழலில் ஏதேனும் ஒரு வகையில் உதவி கிடைக்கக் காண்பீர்கள். இயற்கையில் உண்மை விரும்பியான உங்களுக்கு குருபகவானின் பார்வை பலம் அடுத்த ஒரு வருடத்திற்கு நற்பலன்களை வாரி வழங்கும் வகையில் அமையும்.வாழ்க வளமுடன்!

பரிகாரம்:

பிரதி மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் குடும்பத்தினரோடு இணைந்து சிவபூஜை செய்வது நல்லது. பௌர்ணமி நாளில் ஏலக்காய்தூள், சர்க்கரை கலந்த பாலினை சோமாஸ்கந்தருக்கு நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருவாரூர் திருத்தலத்திற்குச் சென்று அருவுருவமாய் காட்சிதரும் தியாகராஜ ஸ்வாமியை தரிசித்து வாருங்கள்.வளம் பெறுவீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: