“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது………. இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”

மூட்டு வலிகளுடன் வாழ்வது துன்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும். மூட்டு வலி என்றெல்ல உடலுக்கு உபாதை கொடுக்கும் எல்லா நோய்களும் துன்பமானதுதான்.
அவை உடலை மட்டுமின்றி மனத்தையும் சோரச் செய்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கச் செய்கின்றன. ஆனால் அதே நேரம் மற்றவர்கள் அவர்களது வலியைப் புரிந்து கொள்வது குறைவு.
ஒரு மில்லியன் அமெரிக்க பிரஜைகளின் மருத்துவ அறிவிக்கைகளை ஆராய்ந்த பொழுது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கிடைத்த சில முடிவுகள் மூலம் நீங்களும் அதை உணர்வீர்கள். Arthritis Care & Research சஞ்சிகையின் ஏப்ரல் 18, 2011 இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பாதிப்புகள் அதிகம்
- சாதாரண பிரஜைகளில் 12 சதவிகிதத்தினரே தங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை எனக் கருதியபோது மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோரில் 27 சதவிகிதத்தினர் தமது ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை என்றனர்.
- மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் உடல் ரீதியாகச் சுகயீனமுற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள் கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஏழு நாட்கள் ஆரோக்கியம் கெட்டிருந்ததாககக் கூறினர்.
- மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மன அமைதியற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள் கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஐற்து நாட்கள் பாதிப்புற்று இருந்தனர்.
- ஆரோக்கியம் முழுமையாக கெட்ட நாட்கள் சாதாரணமானவர்களுக்கு மாதத்தில் 5 ஆன இருக்க மூட்டு நோயாளருக்கு 10 ஆக இருந்தது.
- நாளாந்த பணிகள் கெட்டதாக நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது.
சமூக ரீதியில் பார்க்கும்போது மூட்டு நோயாளிகள்
- கல்வி ரீதியாகி,
- தொழில் ரீதியாக,
- மற்றும் வருமான ரீதியாகவும்
மற்றவர்களை விட அதிகம் பாதிப்புற்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களிடம் மற்றவர்களை விட புகைத்தல், மது, போதை போன்ற தவறான பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்த, உடற் பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைகளும் அதிகமிருந்தன.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதீத எடை போன்ற நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படது.
செலவு காரணமாகவும், சிகிச்சைக்காகச் சென்று வருவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் மருத்து உதவி போதியளவு கிட்டவில்லை என்பதும் தெரிய வந்தது.
பொருளாதார ரீதியாக
- வேலை செய்ய முடியாமை,
- போதிய வருமானமின்மை,
- மருத்துவத்திற்கு போதிய செலவழிக்க முடியாத நிலை,
- அத்துடன் நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுதல் போன்றவற்றால்
அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது. இதனால் அவர்களது இந்த வாழ்க்கைத் தரம் தாழ்ச்சியடைகிறது. இவற்றால் உள நலமும் குறைகிறது. இதுதான் அந்த ஆய்வின் முடிவு.
ஆனால் மூட்டு வருத்தங்கள் இருந்தபோதும், சோர்ந்து கிடக்காது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்களிடையே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.
செய்ய வேண்டியவை
எனவே மூட்டு நோயுள்ளவர்கள் பாதிக்கப்படாது இருக்கச் செய்ய வேண்டியது என்ன?
- “என்னால் எதுவும் முடியவில்லை” என மூட்டு வலியைக் காட்டி வாழாதிருக்கக் கூடாது. முடிந்தளவு உற்சாகமான சுறுசுறுப்பான வாழ்வைக் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
- தினசரி தோட்டவேலை, வீட்டு வேலைகள், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என ஈடுபட்டு தமது உடலைச் சோரவிடக் கூடாது. இது மனச் சோர்வையும், மனவிரக்தியையும் அண்ட விடாது.
- நீரிழிவு, பிரசர், போன்ற வேறு நோய்கள் இருந்தால் அவற்றிக்கு அவசியமான மருத்துவத்தை செய்து தமது பொதுவான ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.
- அவர்களைக் குற்றம் கூறி மேலும் வேதனையில் ஆழ்த்தாது சூழ இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி, மனப் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும்.
அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் மக்கள் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நோய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இவர்கள் எல்லோருக்கும் உடல் வலியும் மன உபாதையும் அற்ற வாழ்வை அமைக்க உதவுவற்கு இந்த ஆய்வின் ஊடாக நாம் படிப்பினை பெறலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்