நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில், தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வரும் வயிற்றுவலி பிரச்னை குறித்த மருத்துவ விளக்கங்களை நம்மிடம்
பகிர்ந்துகொள்கிறார், சென்னை, அப்போலோ மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ரவீந்திரன் குமரன்.
‘‘உணவுக்குழல் முதல் ஆசன வாய் வரை உள்ள பகுதியை ஜீரண மண்டலம் என்றும் வயிற்றுப் பகுதி என்றும் சொல்லலாம். இதில் உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் போன்ற முக்கிய உறுப்புகளும்… கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற சார்ந்த உறுப்புகளும் இருக்கின்றன. இவை தவிர சிறுநீரகம், பெண்களுக்கு கர்ப்பப்பை, சினைமுட்டைப்பை போன்றவையும் இருக்கும். சாப்பிட்ட உணவை ஜீரணித்து வெளியேற்றுவது மட்டும்தான் வயிற்றின் வேலை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி, உடலில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருப்பது, தேவையற்ற பொருட்களை உடலுக்குள் தங்கவிடாமல் கழிவாக மாற்றி வெளியேற்றுவது உள்ளிட்ட இன்னும் பல வேலைகளும் அதன் பொறுப்பு. அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதை வெளிப்படுத்தும் அறிகுறியே வயிற்றுவலி என்பதால், அதை கவனிக்காது விட்டுவிடாமல் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்’’ என்ற வலியுறுத்தலுடன் விளக்கங்களைத் தொடர்ந்தார் டாக்டர்.
சாதாரண வயிற்றுவலி… சிக்கலான வயிற்றுவலி!
“சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும், எப்போதும் வயிற்றுவலி வரலாம். அது சாதாரண வலியா, உடனடியாக கவனிக்க வேண்டிய அளவுக்கு ஆபத்தானதா என்பதை, சம்பந்தப்பட்டவர் முதற் கட்டமாக தன் உடலின் சுயமதிப்பீட்டால் அறிந்து கொள்ளலாம். சாதாரண வயிற்றுவலி எனும்போது, சாப்பிடாமல் இருப்பது, நேரத்துக்குச் சாப்பிடாதது, கெட்டுப்போன உணவை சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது, பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வருவது… என வயிற்றுவலிக்கான காரணம் நமக்கே தெரியும். ஆனால், இப்படி எந்தக் காரணத்தையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத சூழலுடன், வயிற்றுவலி பொறுக்க முடியாததாகவும், காய்ச்சல், வாந்தி என அதனுடன் மற்றும் சில பிரச்னை களும் சேர்ந்து வெளிப்பட்டால், அது ஆபத்தான கட்டம் என்று சுதாரிக்க வேண்டும். உதாரணமாக…
குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்வலி ஏற்படுவது
அன்றாட வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு வலி உண்டாவது
ரத்த வாந்தி
12 மணி நேரத்தில் 20 தடவைக்கு மேல் வாந்தி
மிக அதிக காய்ச்சல்
தார் நிறத்தில் (கருமையான) மலம் கழிப்பது
மிகமோசமான துர்நாற்றத்துடன் கூடிய மலம்
ஒருநாளில் 10 தடவைக்கு மேல் மலம் கழிப்பது உள்ளிட்ட இன்னும் பல.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், பித்தப்பை கற்கள் தொடங்கி வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்வரை அதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, காலம் கடத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். தாமதம் செய்யும் ஒவ்வொரு மணித்துளியிலும், வயிற்றுக்குள் ஆபத்து வளர்ந்துகொண்டே இருக்கும்… எச்சரிக்கை.
வயிற்றுவலி தரும் சில அபாய எச்சரிக்கை!
பித்தப்பை கற்கள்
பித்தக்குழாய் கற்கள்
நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னைகள்
தொடர் கணைய அழற்சி
பெருங்குடல் அழற்சி
சிறுகுடல் சுருக்கம்
வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்
வயிற்றுப் புண் (அல்சர்)
குடல் வால்… என வயிற்றுவலிக்கான காரணப் பட்டியல் மிக நீண்டது. அதாவது, வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதிக்கப்பட்டாலும் வயிற்றில் வலி வரலாம்.
சோதனை முறைகள்!
சாதாரண ரத்தப் பரிசோதனை
சாதாரண சிறுநீர் பரி சோதனை
அல்ட்ரா சவுண்ட் பரி சோதனை
வாய்வழியாக டியூப் செலுத்தி மேற்கொள்ளப்படும் எண்டோஸ்கோபி (Endoscopy) பரிசோதனை
ஆசனவாய் வழியாக டியூப் செலுத்தி மேற்
கொள்ளப்படும் கொலனோஸ் கோபி (Colonoscopy) பரிசோதனை
சி.டி ஸ்கேன்
எம்.ஆர்.ஐ
காம்ப்ளிகேட்டட் ரத்த பரிசோதனை உள்ளிட்ட இன்னும் பல சோதனை முறைகள் உள்ளன.
இவற்றில் முதல் மூன்று சோதனை முறைகளிலேயே 99% சதவிகிதம் வயிற்றுவலிக் கான காரணம் கண்டறியப் பட்டுவிடும். அறுதியிட்டுச் சொல்ல முடியாத அந்த 1% காரணத்தை, மற்ற சோதனை முறைகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடியும்.
சிகிச்சை முறைகள்!
நோயின் வீரியத்தைப் பொறுத்து மாத்திரை, மருந்துகள் தொடங்கி பல நவீன சிகிச்சைகள் வரை அளிக்கப்படுகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஓபன் அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு வந்தது. ஆனால், வாய்வழியாக டியூப் கொண்டு செய்யப்படும் எண்டோஸ்கோபி (Endoscopy), வயிற்றுப்பகுதியில் மிகச் சிறிய துவாரம்போட்டு மேற்கொள்ளப்படும் லேபரோஸ்கோபி (Laparoscopy) என இன்று எவ்வளவோ தொழில்நுட்ப வசதிகள் மருத்துவத்தில் வந்துவிட்டன. வயிற்றில் வலி என்று உணர்ந்த பிறகு, ‘இன்னும் ரெண்டு நாள் பார்த்துட்டு அப்புறம் டாக்டர்கிட்ட போகலாம்’ என்று காலம் தாழ்த்தாமல், உடனடியாக சிகிச்சைக்கு விரையும் போது பாதிப்புகளும் அந்தளவுக்குத் தவிர்க்கப்படும்.
தற்காப்பு நடவடிக்கைகள்!
ஒரே சத்து நிறைந்த உணவை தொடர்ந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்து, சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, கீரை, பழங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நம் பகுதியில் விளையும் பழங்களும், சீஸனல் பழங்களும் மிகவும் சிறந்தவை.
தேவைக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
தேவையான உடற்பயிற்சி அவசியம்.
தினமும் இரண்டு லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பிறகும் பெண்கள் தங்கள் எடை விஷயத் தில் கூடுதல் அக்கறையோடு இருக்க வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பின்பற்ற வேண்டும்.
தெற்கு ஆசியர்களுக்கு சாதாரணமாகவே வயிற்றுப் பகுதியில் எடைபோடும் தன்மை கூடுதலாக இருப்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மது, புகை, துரித உணவுகள் தவிர்ப்பது போன்றவை வயிற்றுக்கு அரணாக அமையும் பழக்கவழக்கங்கள்.
உடலின் மிக முக்கியப் பகுதி யான வயிற்றின் ஆரோக்கியம் என்பது, உயிருக்கான கவசம்!’’
– விளக்கங்களுடன் விழிப்பு உணர்வும் தந்து நிறைவு செய்தார், டாக்டர் ரவீந்திரன் குமரன்.
எச்சரிக்கைகள்!
சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். மனஉளைச்சல், அதிகமாக காரம் சாப்பிடுவது போன்றவை இதை ஏற்படுத்தலாம்.
உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு பித்தப்பை கற்கள் முக்கியக் காரணமாக இருக்கலாம்.
பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்றுவலிக்கு புற்றுநோய் காரணமாக இருக்கக்கூடும். மேலும், மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக வயிற்றுவலி, மலத்தில் ரத்தம் வெளியேறுதல் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு ஏதேனும் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வரக்கூடிய வயிற்றுவலியின் காரணமும், பாதிப்பின் தன்மையும் அதிகமாக இருக்கக்கூடும். அதனால் உடனடி சிகிச்சை முக்கியம்.
குழந்தைகள், வயோதிகர்கள்… எக்ஸ்ட்ரா கேர் ப்ளீஸ்!
தொடர் வயிற்றுவலி + வாந்தி + பேதி அதிகமாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ‘குடும்ப டாக்டர்/தெரிந்த டாக்டர் ஊர்ல இல்லை, நாளைக்குதான் வருவார்’ என்பது போன்ற அசட்டுக் காரணங்கள் கூடாது. சாதாரண ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டு வயிற்றுவலியால் துடித்த குழந்தைகள், உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்கப்படாததால் இறந்த சம்பவங்கள் உள்ளன. அதேபோல, சர்க்கரை நோயாளிகளின் வயிற்றுவலிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாதபோது, உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும். குழந்தைகள், பெரியவர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்