நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ பகுதியில், நாளுக்கு நாள் பெருகி வரும் தோல் வியாதிகள் பற்றி, காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரையிலான விஷயங்களைப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் டாக்டர் மாயா வேதமூர்த்தி.
‘‘மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். அது தன்னிகரற்ற பாதுகாப்புக் கவசம். தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறி உடலைப் பாதுகாப்பது தொடங்கி, ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமான பல வேலைகளை தோல் செய்கிறது. அதற்கு உரிய பாதுகாப்பும், பராமரிப்பும் தருவதுடன், அதன் ஆரோக்கியத்துக்கு ஏதும் ஊறு ஏற்பட்டால் விரைந்து சரியான சிகிச்சை எடுக்க வேண்டியதும் முக்கியம். இல்லையெனில், முகப்பரு தொடங்கி, சரும புற்றுநோய் வரை அதன் பாதிப்புகள் இருக்கும்’’ என்று எச்சரிக்கையூட்டி ஆரம்பித்தார் டாக்டர்.
தோலின் பணிகள் என்ன?
உடலைப் பாதுகாக்கும் தோல், ஆரோக்கியத்துக்குத் தேவையான `விட்டமின் டி’யை சூரியனிடம் இருந்து பெற்று உடலுக்குத் தரும் கருவி. உணர்ச்சிகளை உணரவைக்கும் உறுப்பு. தோலில் 2 மில்லியன் வியர்வை துவாரங்கள் உள்ளன. உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் அதன் பணி, மிக அத்தியாவசியமானது. சருமத்தின் ஆரோக்கியத்தை எதிரொலிக்கவல்லது என்பதால் தோலை ஆரோக்கியத்தின் கண்ணாடி (mirror of health) என்பார்கள். நகம், முடி என உடலுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கும் தோல், அனைத்து உடல் உறுப்புகளையும் தன்னுள்ளே கொண்டு பாதுகாப்பதால், அது மனித உடலின் மிக முக்கிய உறுப்பாகிறது. எனினும், உடலில் மிகவும் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உறுப்பும் அதுதான். 80% தோல் பாதிக்கப்பட்டால் (தீப்புண், ஆசிட் வீச்சு போன்றவற்றால்), அது மரணம்வரை இட்டுச்செல்லும்.
பாதிப்புகள்… வயது வாரியாக!
பிறந்த குழந்தைக்கு: கொப்புளங்கள் தொடங்கி ஆங்காங்கே அதிக கறுப்பு மச்சங்கள், உடல் முழுக்க சிவப்பு மச்சங்கள், சருமத் தொற்று.
1 – 10 வயதுக் குழந்தைகளுக்கு: சொறி, சிரங்கு தொடங்கி சருமத் தொற்றுவரை.
பருவ வயதினர்: முகப்பரு, முடி உதிர்வு, பொடுகு, சொரியாசிஸ், வெண்புள்ளிகள், சருமத் தொற்று.
பெண்களுக்கு: முடி உதிர்வு, தோல் நிறம் மாறுவது, அதிக எடை அதிகரிப்பு/குறைவால் உடலில் ஆங்காங்கே தழும்புகள் (உதாரணம்: பிரசவத்துக்குப் பிறகான ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்), தேவையில்லாத இடங்களில் ரோம வளர்ச்சி.
வயதானவர்களுக்கு: மருக்கள் உண்டாவது, தோல் தடித்து, வற்றிப்போவது.
என்ன காரணங்கள்?
தனிநபர் சுகாதாரமின்மை, சருமத்தை சரிவரப் பராமரிக்காதது, பாதுகாக்காதது, உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு, தேவையான தண்ணீரில் பற்றாக்குறை ஏற்படுவது, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை உடுத்தாதது, அளவுக்கு அதிகமான அழகு சாதனப் பொருட்கள் பயன்பாடு, புகைப்பிடித் தல், அதிக வெப்பத்துக்கு சருமம் ஆட்படுவது, மனஅழுத்தம் இவையெல்லாம் சருமத்தின் ஆரோக்கியத்தை சிதைக்கும் காரணிகள். உடலில் உள்ள 2 மில்லியன் வியர்வைத் துவாரங்கள் வழியாக கழிவுகள் சரிவர வெளியேற, குடிக்கும் தண்ணீரும், சூரியஒளியும் துணைபுரியும். அந்த துவாரங்களின் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும்போது, வியர்க்குரு, வேனல் கட்டி, முகப்பரு, அம்மை, தோல் நோய்கள் போன்றவை வரக்கூடும்.
அலர்ட் செய்யும் அறிகுறிகள்!
சருமம் ஆங்காங்கே சிவந்துபோவது, அரிப்பு, கொப்புளம், நிற மாற்றம், முடி உதிர்வு, வாய்ப்புண், நகம் பாதிக்கப்படுவது… இவையெல்லாம் சருமத்தின் ஆரோக்கியம் குன்றியதை உணர்வதற்கான அறிகுறிகள். அதை உணர்ந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும். எந்தளவுக்கு வளரவிடுகிறோமோ, அந்தளவுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாகும். உதாரணமாக, சொரியாசிஸ் வியாதியை ஒரு கட்டத்துக்கு மேல் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும். சிகிச்சையளிக்கப்படாத வாய்ப்புண், புற்றுநோயில் கொண்டுபோய் நிறுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, கவனம்.
சோதனையும் சிகிச்சையும்!
ரத்தப் பரிசோதனை, சருமம், கேசம், நகத்தின் செல்களை எடுத்துச் செய்யப்படும் பயாப்ஸி பரிசோதனைகள் போன்றவை தோல் நோய்களைக் கண்டறிவதற்கான அடிப்படை சோதனை முறைகள். வாய்ப்புண், சொரியாசிஸ் என பிரச்னையின் தன்மை, வீரியத்தைப் பொறுத்து, நவீன பரிசோதனை முறைகள் பரிந்துரைக்கப்படும்.
சருமத்துக்கு அரணாக அமையவல்ல உணவு முறைகள்!
வண்ணமான பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும். காபி, செயற்கை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை முற்றிலும் தவிர்க்கவும். இளநீர், நுங்கு, மோர் போன்ற இயற்கை ஆகாரங்களே நல்லது. பெரும்பாலான தோல் வியாதிகளுக்கு அதிகமாக கொழுப்பு உணவை உட்கொள்வதே காரணம் என்பதால் அதைத் தவிர்க்கவும். அதேபோல மாவுச்சத்து உணவுகளை அளவோடு எடுத்து, நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளவும். நம் பாரம்பர்ய உணவுகளான தினை, சாமை, கேழ்வரகு போன்றவை சருமத்துக்கு நன்மை செய்யவல்லவை. தினமும் 6 – 8 கிளாஸ் தண்ணீர் (அ) இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மொத்தத்தில், ஆரோக்கியத்தின் கண்ணாடியான, அழகின் குறியீடான சருமத்தை பராமரிப்போம், பாதுகாப்போம்!’’
– அக்கறையுடன் சொல்லி முடித்தார் டாக்டர் மாயா வேதமூர்த்தி.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்