நேற்று இரவு ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. அந்த ஊருடன் சேர்ந்து நானும் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பாரிய வெளிச்சம் என் கண்முன் தோன்ற…
அட எங்கட யாழ்ப்பாணத்து மின்சாரம் இவ்வளவு பிரகாசிக்கிறது என்று எனக்குள்ளே முணுமுணுத்தபடி உற்று நோக்கினேன்… அப்போதுதான் தெரிந்தது அது யாழ்ப்பாணத்து மின்சாரம் இல்லை… ஒளிப்பிளம்பு என்று.
திடீரென டேய்… என்ற ஒரு சத்தம்… திரும்பிப் பார்த்தேன் ஒரு பெண் கூரிய ஆயுதத்துடன் கோபம் சிரசுக்கு ஏறிய நிலையில் மூச்சு வாங்கியபடி நிற்க… மீண்டும் ஒருமுறை டேய் என்ற ஒரு கனத்த குரல்…
போர்வை என்னைப் போர்த்துக் கொண்டதுபோல் அச்சமும் என்னைச் சூழ்ந்து கொள்ள… தளதளத்த குரலில் யாராம்மா நீங்கள் என்று கேட்டேன். நான்தான்டா மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் என்று ஒரு அதட்டலான குரல்.
மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் என்றவுடன் அச்சம் நீங்கி, ஆன்மீகம் பொங்க ஆச்சரியத்துடன் இவ்வளவு தூரம், அதுவும் இந்த நேரத்தில்… என்று கேட்டேன்.
ஏன்டா அப்படிக் கேட்கிறாய்? என்று ஒரு அதலட்டலான கேள்வி? அது ஒன்றும் இல்லையம்மா! பெண் என்றால் சாமி என்றாலும் எங்கட ஆமிக்காரர் விட மாட்டாங்கள்… அதுதான் கேட்டேன் என்றேன்.
இவ்வளவு அக்கறையாகக் கேட்கின்ற நீ, இதுவரைக்கும் ஏன்டா என் நிலைமையைப் பற்றி வெளிநாட்டில் இருக்கிறவர்களுக்கு உன் இணையத்தளம் ஊடாகச் சொல்லவில்லை என்று கோபத்தின் உச்சியில் நின்று கண்ணகை அம்மன் கேட்க… ஒன்றும் பேசாமல் நின்றேன்.
என்னை வணங்கியவர்களும் என்னைச் சூழ்ந்து இருந்தவர்களும் இப்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல் என்று கூறினார்.
நிச்சயமாக நான் அதைச் செய்கின்றேன். இவ்வளவு காலமும் இதனைச் செய்யாதத்துக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியபடி கண்ணகை அம்மன் காலில் விழுந்தேன். விழுந்த வேகத்தில் திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்தேன்… நான் விழுந்தது கண்ணகை அம்மன் காலில் இல்லை… கட்டிலில் இருந்து கீழே…
எனவே இக் கண்ணகை அம்மன் ஆலயம் ஒல்லாந்தர் காலத்தில் தப்பி தற்போது கடந்த கால யுத்தத்தின் பிடியில் சிக்கி பாரியளவு சேதமடைந்துள்ளது.
இம் மாதாங்கோவிலை வேண்டி, வணங்கி நின்றவர்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருப்பதால், இவ் ஆலயத்தைப் புனரமைக்க உங்களால் ஆன உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது மண்டைதீவுப் பகுதியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் ஓரளவு திருப்பணிகள் நிறைவு பெற்று மண்டலாபிசேகம், கும்பாபிசேகம், மஹோற்சவம் எனப் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது.
இந் நிலையில் இவ் ஆலயத்தையும் புனரமைத்து ஒரு பொங்கல் விழாவை நடாத்த உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.
அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவ் ஆலயத்துக்கும் ஒரு பரிபாலன சபை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இப் பரிபாலன சபை ஊடாக இவ் ஆலயத்துக்கு உங்களால் ஆன நிதியுதவிகளைச் செய்து பொங்கல் விழா நடாத்த முன்வாருங்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்