மண்டைதீவு முன்னாள் கிராம சேவையாளரும் , தற்போது அல்லைப்பிட்டியில் கடமை ஆற்றிக்கொண்டு இருப்பவருமாகிய இரத்தினேஸ்வரன் அவர்களின் அன்புமகள் வித்தியா அவர்கள் 20.01. 2014 அன்று திங்கட்கிழமை ஆகால மரணமானார் .அன்னார் இரத்தினேஸ்வரன் சாந்தி (மண்டைதீவு ) அவர்களின் அன்புமகள் ஆவார் .
அல்லைப்பிட்டியில் திங்கட்கிழமை அன்று அகாலமரணமான-பல்கலைக்கழக மாணவி இரட்ணேஸ்வரன் வித்தியாவின் இறுதி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை பகல் அல்லைப்பிட்டியில் நடைபெற்றபோது -பெருமளவான மாணவர்கள் பொதுமக்கள் என அதிகமானோர் சோகத்துடன் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
நிலவொன்று நிரந்தரமாய் தேய்ந்ததுவோ!
அம்முக்குட்டி……… கூப்பிடும்போதே அவள் உள்ளம் குளிரும், அது எனக்கு நன்றாகவே தெரியும்! தனக்குத்தானே அவள் விரும்பி வைத்த பெயர் அது. குழந்தை உள்ளத்தோடே என்றும் இருக்கவேண்டுமென்று விரும்பினாளோ!? ஓவியத்திலும் கவிதையிலும் மட்டுமல்லாது புகைப்படத்துறையிலும் இசைத்துறையிலும்கூட தன் ஆதீத திறமையால் தடம்பதித்தவள். அவள் திறமைகளையும் ஆற்றல்களையும் காற்புள்ளி இட்டுக்கொண்டே சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் அவளோ இன்று எல்லாவற்றிற்குமே முற்றுப்புள்ளிவைத்துவிட்டு எம்மை உணர்ச்சிக் குறியிடவைத்துச் சென்றுவிட்டாளே! சக ஓவியராகவும் கவிஞராகவும் அவள் இருந்தாலும் படைப்புத்துறையில் இருவருக்குமே இருவர் படைப்புமீதும் இனம்புரியாத பொறாமை. தங்கச்சி என்று அன்பாக கூப்பிட்டாலும் அவள் அண்ணா என்று ஆசைக்குக்கூட கூப்பிட்டது கிடையாது. அம்மு என்றே அழைக்கச்சொல்வாள், அதில் ஆத்ம திருப்தி அவளுக்கு. எத்தனையோ நாட்கள் சொல்லியிருக்கிறாள் « உன்ர பேரில ‘Like page’ ஒன்று create பண்ணுடா அப்போதுதான் உன் படைப்புகள் பலருக்கு பகிரப்படும் » என்றவள் இன்று தன் சாவுச்செய்தியை பகிர வைத்துவிட்டாளே! கடைசியாக அவளைப் பார்த்தது பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழர் திருநாளன்று. அன்று விழுந்து விழுந்து படங்கள் எடுத்தவள் இன்று எழுந்திருக்கக்கூட இயக்கமற்றுப்போனாளே! அப்போது கடைசியாக அவள் குரலில் கேட்டது இதுதான், « பொங்கல் பானையையும் பாத்திரங்களையும் கழுவுறியா அம்மு? » என்று கேட்டதற்கு « பொம்பிளைகள் என்றால் பாத்திரங்கள் கழுவ மட்டுமா? ஆம்பளைகளும் கழுவலாம், நீ போய்க் கழுவுடா » என்றவள் கடைசிவரை கழுவவேயில்லை. எப்பொழுதுமே தன் கருத்துக்களில் விமர்சனப்பாங்கு கொண்டவள் இயல்பான தன் முற்போக்குச் சிந்தனையிலிருந்து என்றுமே பின்வாங்கியதில்லை. நினைக்க நினைக்க உணர்வுகள் நெஞ்சை அழுத்துகின்றன. நன்கு பழகியவர்களின் துயரச்செய்தி கேட்கையில் உள்ளங்காலில் விறைப்பு முழங்கால்வரை ஏறி அப்படியே மேலே செல்கையில் அடிவயிறு கலக்கும், அதுவே நெஞ்சை அழுத்தி உச்சந்தலை சிலிர்க்குமளவிற்கு மூளையை இறுகப்பற்றும். அந்தநேரம் தலை முழுக்க கனத்த இடிமுழக்கம்போல் மனம் படாதபாடுபடும். அப்படியே தானாகவே அந்த உணர்ச்சி ஓட்டம் வந்தவழியே கீழிறங்கிவிடும். அதன்பின் கொஞ்சநேர அமைதி குடிகொள்ளும்… ஆனால் மீண்டும் உள்ளங்கால் விறைப்பெடுக்க அதே நிலமை மாறி மாறித் தொடரும். வெளியில் சொல்லமுடியாத மனித உணர்வு மண்டலத்தில் நிகழும் இந்தச் செயன்முறைகள்கூட மனிதனிடம் இன்பமும் துன்பமும் நிலையில்லாதவை என்பதையே குறிப்பாலுணர்த்துவன. நேற்றுவரை மட்டுமல்ல இன்றுவரை இருந்தவள் இந்தக் கணங்களிலே எமைவிட்டுப் பிரிந்தே சென்றுவிட்டாள். « என் சாவிற்கு யாரெல்லாம் நோட்டீஸ் அடிப்பீர்கள்? நாலு கிழமைகளின்முன்-நீ லூசுத்தனமாக கேட்ட கேள்வியடி இது! லேசாகக்கூட நாமிதை நம்பவில்லை நீசாகப் போட்டாயென்று…. கண்ணீரஞ்சலி நிறையவேண்டுமென்றா கனகன படங்கள் காலையில் பதிவேற்றினாய்? ஒரேயொரு முற்றுப்புள்ளியிட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை-நாம் அச்சடிக்க வைத்தாயே! நீ சாகவில்லையடி-என்றும் சரித்திரமாய் சிரித்திருப்பாய்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்