இன்று நாம் இருக்கும் நிலை தான் ஜனநாயகத்திற்கு கொடுக்க்கப்படும் விலை என்றால் – இந்த ஜனநாயகத்தால் நமக்கு என்ன பயன் ? இத்தகைய ஜனநாயகம் தான் நமக்கு எதற்கு ?
இந்த 65 ஆண்டுக்கால அனுபவம் நமக்குப் போதாதா ? இன்னும் எத்தனைக் காலம் இந்த ஏமாற்றும் அரசியல்வாதிகளையும், ஊழல் சக்திகளையும், மக்களை சுரண்டிக் காசு பண்ணும் பெரும் பண முதலைகளையும் அனுமதித்துக் கொண்டிருக்கப் போகிறோம் ?
அனைவருக்கும் வயிறாற உணவு, இருக்க ஓரளவு வசதியான இருப்பிடம், உடுக்க உருப்படியான உடை, அனைவருக்கும் முழு மருத்துவக் காப்பீடு, அனைவருக்கும் தரமான கல்வி, தேவைப்படும் துறைகளில் தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி, பாதுகாப்பான குடிதண்ணீர், சுகாதார வசதிகள், தரமான சாலைகள், நல்ல போக்குவரத்து வசதி,
அனைவருக்கும் வேலை வாய்ப்பு, ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகம்,
உழைப்புக்கும், திறமைக்கும் தகுந்த பலன்.
இவற்றை ஒரு அரசால் தன் மக்களுக்கு கொடுக்க முடியாதா ? அப்படிக் கொடுக்கக்கூடிய அரசு தானே நமக்குத் தேவை ? அது ஜனநாயகமாக இருந்தால் என்ன – வேறு எதுவாக இருந்தால் தான் என்ன ?
இது வெறும் கனவு தான் – உலகில் எந்த நாட்டில் நடக்கும் என்கிறீர்களா ?
ஆகஸ்ட் 9, 1965 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஒரு நாடு.
மொத்த ஜனத்தொகை – 54 லட்சம் தான். ஆனால் உலகின் 4வது மிகப்பெரிய நிதிச்சந்தையாக உருவெடுத்துள்ள நாடு அது. விவசாயம் பண்ண காணி நிலம் கூட கிடையாது. குடிதண்ணீர் கூட பக்கத்து நாட்டிலிருந்து தான் இறக்குமதியாகிறது.
ஆனால் – தனி நபர் வருமானத்தைப் பொருத்த வரையில் உலகின் மூன்றாவது முன்னணி நாடு.
உலகின் மிகவும் பிஸியாக உள்ள 5 துறைமுகங்களில் இதுவும் ஒன்று.
ஊழலற்ற நிர்வாகத்தில் உலகில் முதல் இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்ததாக 2வது இடத்தைப் பெற்றுள்ள நாடு இது.
மிகவும் உறுதியான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு. கண்டிப்பான,வெளிப்படையான காவல்துறை செயல்பாடு. 1987ல் முதல் முறையாக இந்த நாட்டிற்குச் சென்ற நான் – நள்ளிரவு 2 மணிக்கு நான் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 12வது மாடியிலிருந்து வெளியில் ஜெகஜ்ஜோதியாகத் தெரிந்த ஊரை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெளியே நீண்ட நெடுஞ்சாலையில், போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில், காந்திஜி சொன்னது போல் – நிஜமாகவே எந்தவித அச்ச உணர்வும் இன்றி ஒரு இளம்பெண் தன்னந்தனியே நடந்து போய்க் கொண்டிருந்தாள். இது எப்படி முடிந்தது ?
குற்றவாளிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு முடக்கப்படுவது, விரைவான விசாரணை, நேர்மையான நீதித்துறை – ஆசியாவிலேயே நீதித்துறையில் முதல் இடத்தைப் பெற்றுள்ள நாடு. கசையடி முதற்கொண்டு, தூக்கு தண்டனை வரை கடும் தண்டனைகளை இன்றும் தயவு தாட்சண்யம் இன்றி நிறைவேற்றும் ஒரு நாடு. இந்த நாட்டில் குற்றம் புரிய எத்தனை பேருக்கு துணிவு இருக்கும் …?
அனைத்து மதத்தினருக்கும், அனைத்து மொழியினருக்கும், ஒரே விதத்தில் சமமான இடம் அளித்திருக்கும் ஒரு நாடு.
உலகில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு வந்து குடியிருக்க ஆசைப்படுவார்கள்.
இதற்குள்ளாகவே புரிந்துக் கொண்டிருப்பீர்கள் – ஆமாம் சிங்கப்பூரைத் தான் சொல்கிறேன்.
இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று ?
தன்னலம் கருதாத ஒரு தலைமை – நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் நலனையும் மட்டுமே தன் உயிர்மூச்சாக, லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட ஒரு மிக உறுதியான, கண்டிப்பான தலைமை லீ குவான் யூ என்கிற பிரதமரின் உருவத்தில் கிடைத்ததால் தான்.
ஒரு கட்சி ஆட்சி முறை தான் சிங்கப்பூரில் இருப்பது. அதை கட்டுப்படுத்தப்பட்ட(controlled) அல்லது மட்டுப்படுத்தப்பட்ட(limited) ஜனநாயகம் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் அதை விவரிப்பது வழிகாட்டப்பட்ட ஜனநாயகம் (guided democracy )என்று.
நான் முதல் முறை சென்றபோது – 25 ஆண்டுகளுக்கு முன்னர் – (அப்போது லீ குவான் யூ பிரதமராக இருந்தார்- அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது )
விவரம் தெரிந்த சிலரிடம் – மிகவும் ஆர்வமாக அவர்களது system பற்றி விசாரித்து தெரிந்து கொண்டேன்.
பொதுச் சேவையில் விருப்பம் இருப்பவர்கள், கட்சியில் சேருகிறார்கள். ஓரளவு மேல் நிலைக்கு வந்த பிறகு நிர்வாகத்தில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தங்களை நிரூபித்தால் – தொடர்ந்து பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன.
லீ தன் டீமைத் தேர்ந்தெடுத்த விதமே தனி ரகம். தலைமையை புகழ்ந்து பேசுவது, ஜால்ரா அடிப்பது, கட்சியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வது போன்ற வழக்கமான முறைகள் எல்லாம் இவரிடம் பலிப்பதில்லை.
ஓரளவிற்கு நம்பிக்கை கொடுப்பவர்களை நேரில் அழைத்து விவாதிக்கிறார். நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் வாழ்க்கை முறையை – மேம்படுத்த அவர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று கேட்கிறார்.
அவர்களால் நிறைவேற்ற முடியும் என்று தோன்றுகிற ஒரு project பற்றி ஒரு report -ஐ தயார் பண்ணிக் கொடுக்கச் சொல்கிறார். project அவருக்கு திருப்தியாக இருந்தால் – அந்த நபரை அமைச்சராக நியமித்து – அந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை அந்த நபரிடமே கொடுக்கிறார். குறிப்பிட்ட காலத்தில், திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் – அந்த நபரிடம் அடுத்த project report கேட்கப்படுகிறது/பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால் – அடுத்த கணமே அந்த நபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அடுத்தவருக்கு வாய்ப்பு தரப்படுகிறது. லஞ்சம், ஊழல், காண்ட்ராக்ட், கமிஷன் – எதுவும் மூச்சே விட முடியாது.
அவரது கேபினட் மீட்டிங் எல்லாம் கம்பெனிகளின் board of directors meeting போலவே இருக்கும் என்பார்கள். அவ்வப்போது சம்பந்தப்பட்ட அமைச்சருடன் அவரது ப்ரொஜெக்ட் -ல் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொள்வார்.
மிகச்சிறந்த, வெளிப்படையான, கண்டிப்பான நிர்வாகம். கிட்டத்தட்ட 25 ஆண்டுக்காலத்தில் (1965-1990) உலகில் மிகச்சிறந்த நாடாக சிங்கப்பூர் உருவானது. அவரால் வழிகாட்டப்பட்டு, தயார் செய்யப்பட்ட கோ சோக் டோங் அடுத்த 14 ஆண்டுகளுக்கு(1990-2004) பிரதமர். இந்த கால கட்டத்தில் லீ – பிரதமர் என்கிற பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டாலும், சீனியர் மினிஸ்டர் என்கிற பொறுப்பில் பார்வையாளராக கூடவே இருந்து வழி நடத்தினார்.
உலகில் மிகச்சிறிய நாடாக, வெறும் அரைக் கோடி மக்கள் மட்டும் இருந்தும் மிகச்செழிப்பாக வளர்ந்துள்ள சிங்கப்பூரையும் பார்த்தோம். மிகப்பெரிய நாடாக, மிக அதிக மக்கள் தொகை -140 கோடி -கொண்ட நாடாக இருந்தும், பிரம்மாண்டமாக முன்னேறியுள்ள சீனாவையும் பார்த்தோம்.
பூகோளத்தில் இடவசதியோ, மக்கள் தொகையோ – ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கலாம்.ஆனால் இந்த நாடுகள் வளர்ந்துள்ளதற்கு காரணம் -அவை மட்டுமே அல்ல. அதுவும் ஒரு காரணம் -அவ்வளவே ! அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உன்னதமான தலைமை தான் இவற்றின் அடிப்படை.
தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி – யோசிக்காமல், ஓட்டு வங்கியைப் பற்றி – கவலைப்படாமல், நாட்டின் நலம், நாட்டு மக்களின் நல் வாழ்க்கை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு- ஓயாமல், அசராமல், தன்னம்பிக்கையுடன், உறுதியுடன் செயல்படக்கூடிய ஒரு தலைமை தான் நமது தேவை.
சீனாவிற்கு நிகராக மட்டுமல்ல, சீனாவை மிஞ்சும் அளவிற்கு நாம் வளர முடியும்- சரியான முறையில் திட்டங்களைப் போட்டு, சரியான டீமை உருவாக்கிக் கொண்டு வேகமாகச் செயல்பட்டால் …!
நம் நாட்டில் இன்னும் பயன்படுத்தப்படாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன –
பூமிக்கு வெளியேயும், தரைக்கு கீழேயும் குவிந்து கிடக்கும் கனிம வளங்கள், தாதுப் பொருட்கள், இரும்பு, நிலக்கரி, இயற்கை வாயு, கச்சா எண்ணை அத்தனையையும் – அந்நியருக்கு காசு வாங்கிக்கொண்டு தாரை வார்க்கும் முறையை ஒழித்துக் கட்டி விட்டு,
அதிக அளவில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தி, தகுந்த தொழில் நுட்பங்களைத் தருவித்து, உருவாக்கி, நமது தொழில் வல்லுநர்களையும் ஈடுபடுத்தி – மிகப்பெரிய சுரங்கங்களை நாமே அமைக்கலாம்.
நம் நாட்டு மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி அனைத்தையும் உள்நாட்டிலேயே தோண்டி எடுத்து, இறக்குமதி ஊழலையும் ஒழித்து, அந்நியச் செலாவணியையும் மிச்சப்படுத்தலாம்.
இயற்கை வாயு, எண்ணை வளங்களை ஏன் அம்பானி குடும்பம் அனுபவிக்க விட வேண்டும் ? இந்த நாட்டு மக்களின் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை நிறுவி, உலக வங்கியின் மூலம் நிதி உதவி பெற்று – நாமே துரப்பணங்களை மேற்கொள்ளலாம். இந்தியா இயற்கை வாயுவிலும், பெட்ரோலிலும் மிதந்து கொண்டிருக்கிறது. தோண்டி எடுக்கத்தான் நமக்கு வழியில்லை என்று பெட்ரோலியம் மினிஸ்டர் வீரப்ப மொய்லி சொன்னதை ஏன் அவ்வளவு சுலபமாக நாம் விட வேண்டும் ?
கங்கை-காவிரி இணைப்பை விடுங்கள்.
ஒரிஸ்ஸாவின் மகாநதியிலிருந்து தாமிரபரணி வரையில் கால்வாய்களின் மூலம் இணைத்து உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கு அருமையான திட்டங்களைப் போட்டு வைத்திருக்கின்றனர் தமிழ் நாட்டின் பொறியியல் நிபுணர்கள்.(நதிநீர் திட்ட நிபுணர் ஏ.சி.காமராஜ் இதற்கான அருமையான திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய அரசிடம் அளித்திருக்கிறார் –ஆனால், படித்துப் பார்க்கக்கூட ஆளில்லை அரசிடம் …)
இதன் மூலம் பெட்ரோல், டீசல் தேவை குறைவதுடன், வறண்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவும், நீர்மின் உற்பத்தியைப் பெருக்கவும் ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் – விவசாயம், போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பைப் பெறவும் முடியும். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சிக்கனமானதும், பெட்ரோல், டீசல் தேவைகளை குறைக்கக்கூடியதுமான ரெயில் போக்குவரத்தை வளர்ச்சியுறச் செய்தாலே – நாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை உருவாக்கலாம்.
தேவை இருக்கிறது – போதுமான இடம் இருக்கிறது – வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் – அடிப்படைத் தொழில் நுட்பம் இருக்கிறது – பின் – புதிய ரெயில்பெட்டி, ரெயில்எஞ்ஜின் தொழிற்சாலைகளை அமைத்து அதிக அளவில் ரெயில் பெட்டிகளையும், எஞ்ஜின்களையும் உருவாக்குவதிலிருந்து அரசாங்கத்தை தடுப்பது எது ?
நாடு முழுவது புதிதாக ரெயில் பாதைகளை போட விடாமல் இவர்களைத் தடுப்பது எது ?
இத்தனை கேள்விகளுக்கும் விடை ஒன்று தான்.
லஞ்சம், ஊழல், சுயநலம்,பதவிப் போட்டி, ஓட்டு வங்கி அரசியல் – மக்களின் மீதோ நாட்டின் மீதோ உண்மையான அக்கரையின்மை இத்யாதி -இத்யாதி ….. மேலே சொன்னது போல் – சர்வாதிகாரமோ, ஒரு கட்சி ஆட்சி முறையோ – கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமோ- எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் …
தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி – யோசிக்காமல், ஓட்டு வங்கியைப் பற்றி – கவலைப்படாமல், நாட்டின் நலம், நாட்டு மக்களின் நல் வாழ்க்கை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு- ஓயாமல், அசராமல், தன்னம்பிக்கையுடன், உறுதியுடன் செயல்படக்கூடிய ஒரு தலைமை –
உண்மையான தலைமை ஒன்று வந்தால் –
இந்த நாடு நிச்சயம் முன்னேறும். அந்த நாள் என்று வரும் … ?
இதில் நம் பங்கு என்ன ?
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்