எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் ?
அதை
எதை படைத்திருந்தாய்
அதை நீ வீணாக்குவற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கையே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது
மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது
இந்த மாற்றம் உலக நியதியாகும்
———————————————-
கிருபானந்த வாரியார்- அமைதி உங்கள் மனைவி
*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.
*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.
*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.
*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.
*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.
*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
————————————————————————-.
பிரணவ மந்திரம் என்றால் என்ன..?
‘ஓம்’ என்பது பிரணவ மந்திரம் என்பது இந்துகள் நம்பிக்கையாகும். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.
ஓம் என்ற சொல்லில் அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இவை மூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிக்கும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும், (அதாவது விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.
ஓ+ம் = ஓம். ‘ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டதாகவும் இருக்க வேண்டும். ஓம், ஓம், ஓம் என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம். ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு. மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும். இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத, காணவும் இயலாத ஒரு சூட்சமமான அலை வரிசையில் தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூட்சுமமான பிணைப்பினை உருவாக்குகிறது.
கோயிலுக்குச் சென்றால் சுவாமி சந்நிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
கிருஷ்ணன்
மேற்குத்திசையில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டான். புழுதிபெருகிக்கிளம்ப ஆயர்கூட்டம் மாடுகளை விரட்டிக்கொண்டு ஓடோடி வந்துகொண்டிருக்கிறது. மாடுமேய்த்துக் கன்றுகாலிகளை ஓட்டிக்கொண்டு திரும்பிவரும் கண்ணனின் அழகு – மயிற்பீலிகளைத் தொங்கவிட்டுக்கொண்டு வரும் தனியொரு அழகு – இளம்பெண்களின் கண்களுக்குப் பெரும்விருந்தாகிறது.
பக்கத்திலொரு இடைச்சிறுவன், மத்தளத்தை முழக்கியபடி பாடுகிறான். கிருஷ்ணனும் அதற்கேற்ப நடனம் ஆடியபடியே தனது புல்லாங்குழலை ஊதிக்கொண்டு வருகிறான். இந்தச் சப்தம் தெருவெங்கும், அச்சிறு ஊரெங்கும் எதிரொலிக்கிறது. மழைதான் வருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
கனகா உணவு உண்பதை விட்டுவிட்டுக் கையைக்கூடக் கழுவாமல்
இக்கோலாகலத்தைக்காணத் தன் வீட்டுப் பலகணியிடம் ஓடோடுகிறாள். ஏற்கெனவே அங்கு வசந்தி, மதுரா ஆகியோர் நிற்கின்றனர். முழங்கையால் அவர்களைத் தள்ளியவண்ணம் இவளும் தலையை நுழைத்து கண்ணன்வரும் அழகைப்பார்த்து ரசிக்கிறாள். மூன்று பெண்களிடமிருந்தும் நீண்ட ஏக்கப்பெருமூச்சு எழுகின்றது!! கன்றின்பின் ஓடும் அவன்பின்பு இவர்கள் உள்ளங்கள் ஓடுகின்றன!
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகிஎங்கும்
கோவிந்தன் வருகின்ற கூட்டம்கண்டு
மழைகொலோ வருகின்றது என்றுசொல்லி
மங்கைமார் சாலகவாசல் பற்றி
நுழைவலர் நிற்பனர் ஆகிஎங்கும்
உள்ளம்விட்டு ஊண்மறந்து ஒழிந்தனரே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.4)
“அடி! பாரடி, மேகலா, அந்த வாள் அவன் இடையிலிருந்து தொங்குவது ஒரு பல்லி சுவரைப் பற்றிக்கொண்டு கிடப்பதைப்போல உள்ளது,” என ரசிக்கிறாள் ஒரு கோபிகை.
“காட்டிலிருந்து திரும்பும் வழியிலேயே மலரும் முல்லை, வேங்கை மலர்களைப்பறித்து மாலைகட்டி அணிந்துகொண்டு வருகிறானடி! எந்தப்பெண் இவனுக்கு அவற்றினைத் தொடுத்துக் கொடுத்தாளோ?” எனப் பொறாமைகொண்டு புலம்புகிறாள் வாருணி. தனது தோட்டத்திலிருந்து தட்டுநிறைய முல்லை, செண்பக மலர்களைப் பறித்துவைத்துக்கொண்டு மாலைகட்டிக்கொண்டிருந்தவள் அதனை அப்படியே போட்டுவிட்டு கண்ணன்வரும் அழகைக்காண வந்திருக்கிறாள். ரகசியமாக அவனுக்கு அதனைக்கொண்டு கொடுக்க எண்ணியிருந்தாள் அவள்.
கனகாவிற்கு இயலாமையால் சினம் எழுகின்றது. “வாடி, போய் நம் வேலைகளைப்பார்ப்போம். அவனையே பார்த்துக்கொண்டு நின்றால், வேலையும் நடக்காது; வீணே உடம்புதான் மெலியும்; கைவளைதான் கழன்றோடும். அவனைப் பார்க்காமலிருப்பதே நமக்கு நல்லது,” என்றபடி போக எத்தனிக்கிறாள்.
பக்கத்துவீட்டு ரச்மி, “என்பெண் என்னவோ எல்லா ஊர்ப்பெண்களையும்போல, கிருஷ்ணனும் மற்ற ஆயச்சிறுவர்களும் வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டாள். உடனே இவ்வூரார் ‘அவனிடம் அவளுக்கு எவ்வளவு ஆசைபார்!’ எனப்பழிக்கின்றனரே! என்ன ஊரோ, ஜனங்களோ,” என அலுத்துக்கொள்கிறாள்.
கிருஷ்ணனுக்கு இது பாலபருவம் முடிந்து வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் வேளை. அழகன்; குறும்பன்; சமர்த்தன் – வேறென்ன வேண்டும், எல்லார் உள்ளங்களையும் கொள்ளைகொள்வதற்கு? அதுவும் இளம்பெண்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். தங்கள் வெட்கம், நாணம் அத்தனையையும் விட்டு அவன்பால் காதல் வயப்பட்டுவிட்டார்கள். அவனிடம் செல்லவும்
, பார்க்கவும், பேசவும் அவனை அடையவும் துடிக்கிறார்கள்.
அவன் தன்னைச்சுற்றி நிற்கும் ஆயர்சிறுவர்களுக்கு வெயில்படாமல் பீலிக்குடை பிடிக்கிறான். அவனுடைய அந்தக்காருண்யம் ஒருத்தியின் மனதைக்கவர்கிறதாம். மயில்பீலியைத் தன் தலைக்கொண்டையில் அலட்சியமாகச் சொருகிக்கொண்டுள்ள அழகு இன்னொருத்தியின் கண்களுக்கு விருந்தாகுகிறது. அவள் மனதில் எண்ணிக்கொள்கிறாள்: ‘வாழ்ந்தால் இந்த ஒருஅழகனுடன்தான் வாழவேண்டும்; இந்தத் திருமாலிருஞ்சோலை மாயனுக்கல்லாது வேறு எவருக்காவது நீங்கள் என்னை மணம்பேசினால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இவனுக்கே உரியவள்,’ எனக்கூறுகிறாளாம்.
சுற்றி நின்று ஆயர்தழைகள் இடச்
சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கூடத்தலையே
பாடும் ஆடக்கண்டேன்; அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசவொட்டேன்
மாலிருஞ்சோலை எம்மாயற்கு அல்லால்
கொற்றவ னுக்குஇவள் ஆம்என்று எண்ணிக்
கொடுமின்கள்; கொடீராகில் கோழம்பமே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.4)
இவர்கள் கிருஷ்ணனுக்கிணையான குறும்புப்பெண்கள்தான்! கேளுங்கள் இவர்கள் உரையாடலை!
“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான் புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,” எனத் தவிக்கிறாள் வசந்தி.
“வசந்தீ, நாம் என்ன பண்ணவேண்டும் தெரியுமா? பார் அந்தக்கும்பலில் நடுவில் வருகிறான் அல்லவா நம்கண்ணன். ‘இவன் எங்களுடைய விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்,’ எனப் பொய்க்குற்றம்சாட்டி அவனைத் தடுத்துநிறுத்துவோம்; அவன் நமக்கு ஒரு மறுமொழிசொல்லாமல் மேலே போகமுடியாது இல்லையா? அதனால்- நம் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை அறிந்துகொண்டு- ஒரு புன்னகைசெய்வான் பாரடி! அதுபோதுமே! அதனைக்கண்டு மகிழலாமே,” என்கிறாள் அந்தச் சாமர்த்தியக்காரியான தோழி.
சிந்துரம் இலங்கத் தன்திரு நெற்றிமேல்
திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண்தழைக் காவின்கீழ்
வரும்ஆய ரோடுஉடன் வளைகோல்வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப்பிள்ளை
அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ!
(பெரியாழ்வார் திருமொழி- 3.4)
தாய்மார்களும் என்ன செய்தார்களாம்? தாமும் அவனுடைய எழிலில் மயங்கி, ‘இப்படி ஒரு பிள்ளைபெற்றாளே இவள்,’ என யசோதையிடம் பொறாமைகொண்டவர் சிலர். ‘தன் பெண்ணை அவனுக்கு மணம் முடித்துவிடலாமோ? இதற்கு யசோதை ஒப்புவாளோ,’ என வருந்தும் சிலர். ‘இச்சிறுவயதிலேயே இவ்வாறு பெண்களின் மனதை அலைக்கழிக்கிறானே, காமுகனோ,’ என குதர்க்கமாக எண்ணுபவரும் ஒருசிலர். ஒருத்திக்குத் தன்மகள் உள்ளம் அழிந்ததுகண்டு மிகுந்த துயரம் உண்டாகிறது: ‘கிருஷ்ணனோ பெரிய வீட்டுப்பிள்ளை; இவள் என்னடாவென்றால் அவனைக்கண்டு மயங்கித் துவண்டேவிட்டாள்; நான் என்னசெய்வேன்,’ எனப்பதறுகிறாள்.
………..பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண்மிளிரக்
குழல்ஊதி இசைபாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப்பிள்ளை
அழகுகண்டு என்மகள் அயர்கின்றதே!
இன்னொருதாயோ, “வலக்காதிலே செங்காந்தள்பூ சூடிக்கொண்டிருக்கிறான்; மல்லிகை, வனமாலை ஆன துளசிமாலை ஆகியவை மார்பில் புரள, புல்லாங்குழலில் மயக்கும் இனிய இசையை எழுப்பியபடி வருபவன் எவ்வளவு அழகாகஇருக்கிறான்,” எனத்தானும் அவனை வர்ணித்தபடிக்கு நின்று மயங்குகிறாள். பக்கத்து வீட்டுக்காரியிடம், “என்மகளை இதனால்தான் அவனெதிரில் போகாதேயடி என்று சொன்னேன்; கேட்டாளோ? இல்லை! அவன் வரும்வழியில் ஓடிப்போய் நின்றாள். அவள் கையிலிருந்து சங்குவளைகள் கழன்றுவிட்டன; உடலும் மெலிந்துவிட்டதம்மா,” எனப்புலம்புகிறாள்.
இவர்கள் இப்படியெல்லாம் வருந்துமாறும், கண்டுகளிக்குமாறும், ஏங்குமாறும் செய்த கிருஷ்ணன் எனும் கண்ணன் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளைகொண்டவன்.
சமீபத்தில், இக்கட்டுரையை எழுதும்போது ஒரு அழகானபாடலை – காலஞ்சென்ற திரு. ஜி. என். பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியதை- கேட்க வாய்ப்புக்கிட்டியது.
‘கண்ணனே என் கணவன்- வேறு கருத்துமில்லை மனப் பொருத்தமுமில்லை,’ என்ற அழகான சொற்கள். அவருடைய சொந்தசாஹித்யம் போலுள்ளது. எப்போது ஒருவருக்குக் கிருஷ்ணனைப்பற்றிய எண்ணம் எழும்போது, அவன் தனக்கே உரியவன் எனும் சொந்தம், அன்பு, காதல், பக்தி எல்லாம் எழுகின்றதோ, அது எண்ணிப்பார்த்து நிகழ்வதல்ல; எதேச்சையாக உண்டாகும் எண்ணமே!
ஒருகாலத்தில் பெண்கள் திருமணத்தின்பின் கணவனேஎல்லாம், அவனே தன்உலகம் என இயங்கியவண்ணம் இருந்தனர். (சில கணவர்மார்களும்கூட மனைவியே தன்னுலகம் என இருந்ததும் உண்டு!) அந்தநிலையில் நின்று, அந்த எண்ணத்தைமட்டுமே கொண்டவொரு தன்னைமறந்த நிலையில் எழுந்த பாடல் இது.
சரணத்தின் அடிகள் இதனை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
அன்றிற்பறவைபோலே ஆட்டமெல்லாம் அடங்கி
அந்தக்கரணமவன் சிந்தையிலே ஒடுங்கி
பந்தவினைகளெல்லாம் சிந்தத்தவம் புரியும்
பரிசுத்ததினன் அந்த கிரிதர கோபாலன்.
(கண்ணனே என் கணவன்)
உறவுகளுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளாய் அவனிடம் பக்தி செலுத்துவதனைவிட, ஒரு உறவுக்குள் பிணைத்துக்கொண்டு அன்புசெலுத்துவது நமக்கு எளிதாக இருக்கிறது. எத்தனை சுளுவான வழி! பலபொழுதுகளில் தோன்றும் – குழந்தையாய், காதலனாய், கணவனாய், அன்னையாய், தந்தையாய் அன்புசெலுத்தும்போது, கடவுள் என்பவர் நமக்கு எட்டாதபொருள் அல்ல. நம்மைச் சுற்றி இந்தப் பலவிதமான உறவுகளில் இருப்பவர்களிடம் நாம் கொள்ளும் அன்புதான் இவ்வாறெல்லாம் பரிணமிக்கின்றது என்றும் அதற்குத்தான் கடவுள் எனப்பெயரிட்டுள்ளோம் எனவும்!
பாரதியாரும் இதற்கு விதிவிலக்கல்ல என முன் அத்தியாயங்களில் கண்டோம். இன்னும் அவருடைய ஓரிரு அழகான பாடல்களைப் பார்க்கலாமா? ஜி. என். பி. அவர்கள் இவற்றை மிக இனிமையாகப் பாடியுள்ளார்.
‘திக்கு தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேன்,’ எனும் பாடலில், ‘நான் கண்ணனுக்கே உரியவள், என்னைப் பிறர் விரும்பலாமோ?’ என ஒருபெண் கேட்பதாகப் பாடியுள்ளார். இதற்கும் முன்பே கூறியபடி, அவரவர் மன ஓட்டங்களுக்கேற்பப் பொருள் கொள்ளலாம்.
இன்னும், பாரதியாருடைய
‘ஆசை முகம் மறந்து போச்சே- இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?’ எனும் பாடலில்
‘தேனை மறந்திருக்கும் வண்டும்- ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்- இந்த
வைய முழுதுமில்லை தோழி!
கண்ணன் முகமறந்து போனால்- இந்தக்
கண்களிருந்தும் பயனுண்டோ?
வண்ணப்படமுமில்லை கண்டாய்- இனி
வாழும் வழியென்னடி தோழி?’
என ஒருபெண் காதலில் நெகிழ்வதாக அமைத்துள்ளார். இங்கு உளவியலைக் கொஞ்சம் மாற்றிப்போட்டு யோசிப்போமா? இப்பாடலில் கிருஷ்ணனைக் காந்தனாக, காதலனாகக் கருதுவதை, நிஜவாழ்வில் ஒருபெண் காதலனை எண்ணி மயங்குவதாகக் கருதலாமே! அப்போது காதலன் என்ன, கணவனென்ன, குழந்தையென்ன, எல்லாரும் பரம்பொருளின் வடிவம்தான் எனவும் தெளியலாம். இது என் சிற்றறிவின் எண்ணஓட்டம்!!
*******
பில்வமங்களர் இளமைபொருந்திய கிருஷ்ண வடிவத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். இடைப்பிள்ளைகளின் கூட்டத்திற்கு கிருஷ்ணன் ஒரு அணிகலனாக விளங்குகிறானாம். எப்படி? குளிர்ச்சியை – கருணையைப்பொழிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் கண்கள் கொண்டவன்; முழுநிலவு போன்றமுகத்தில் தவழும் மயக்கும் புன்முறுவல்; இந்த முகத்தின் காந்தி பார்ப்பவர்களைக் கவர்ந்திழுத்துத் தன்வயமாக்கிக் கொண்டுவிடுகின்றதாம்; அவர்களுடைய மனதில் ஆழப்புகுந்து விளங்குகிறானாம் கண்ணன்.
பசுபால-பால-பரிஷத்விபூஷணம்
சிசுரேஷ சீதல-விலோல-லோசன
ம்ருதுல-ஸ்மிதர்த்ர-வதனேந்து-சம்பதா
மதயன்மதீய-ஹ்ருதயம் விகாஹதே
(ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்-1.71)
இப்போது நமக்கு ஒருவாறு புரிகிறது – ஏன் கோபிகையர் இவன்பால் தம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டனர் என்று! இதே லீலாசுகர் (பில்வமங்களர்) இன்னொரு ஸ்லோகத்தில் (3.99) ராஸக்ரீடை புரியும் கிருஷ்ணனை விவரிக்கும்போது, மூவுலகங்களையும் தன் அழகான உருவத்தால் ஈர்ப்பவன்- ஆகர்ஷிப்பவன்- எனப்பாடுகிறார். மாலைநேரத்தில், வனத்திடையில், நிலவொளியில், மூவுலகையும் தன்னிடம் ஈர்க்கும் அதிசயமான உருவம் படைத்தவன்; ஆயிரக்கணக்கான கோபகன்னிகைகளால் சூழப்பெற்ற ஆநிரை மேய்க்கும் கண்ணன்- கோபாலகிருஷ்ணன்.
ஸாயங்காலே வனாந்தே குஸுமிதஸமயே
ஸைகதே சந்த்ரிகாயாம்
த்ரைலோக்யாகர்ஷணாங்கம் ஸுரநர-கணிகா-
மோஹனாபாங்க-மூர்த்திம்
ஸேவ்யம் ஸ்ருங்காரபாவைர்- நவரஸ பரிதைர்-
கோபகன்யா சஹஸ்ரைர்-
வந்தேஹம் ராஸகேலீர- மதிஸுபகம்
வச்ய கோபால-கிருஷ்ணம்.
(ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்-3.99)
நாரயணீயத்தை இயற்றிய நாராயண பட்டதிரி, உபநிடதங்களே கோபகன்னிகைகளின் வடிவில் கிருஷ்ணனைச் சூழ்ந்து நிற்கின்றன எனக்கூறுகிறார். ‘அக்ரே பச்யாமி,’ எனத்துவங்கும் நாரயணீயத்தின் கடைசி தசகம்.
குழந்தைகள் பாலப்பருவத்திலிருந்து யௌவனப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது அலாதிஅழகு படைத்தவர்களாகக் காணப்படுவர். குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கில்லை! இந்தப்புதிய எழில் தோற்றத்தை ‘ஆர்த்ர யௌவனவனம்’- புதியதான இளமை எழில் எனப்போற்றுகிறார். ‘அது மன்மதனை வெல்லக்கூடிய அழகுடையது; மேகக்கூட்டங்களின் தொகுப்பு போன்றது; பிருந்தாவனப் பெண்களிடத்தில் அன்புபூண்டு விளங்குவது; ஆபரணங்களை அணிந்து புன்முறுவல்கொண்ட தாமரைபோன்ற முகத்தையுடையது; கோவைப்பழம்போன்ற உதட்டை உடையது; அதனை நான் வணங்குகிறேன்,’ என்கிறார்.
கந்தர்ப்ப-ப்ரதிமல்ல-காந்தி-விபவம்
காதம்பினீ-பாந்தவம்
ப்ருந்தாரன்ய-விலாசினீ-வ்யஸனினம்
வேஷேண பூஷாமயம்
மந்தஸ்மேர-முகாம்புஜம் மதுரிம
வ்யாம்ருஷ்ட-பிம்பாதரம்
வந்தே கந்தலிதார்த்ர-யௌவன-வனம்
கைசோரகம் சார்ங்கிண
(ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்-3.5)
ஆயுதம் ஏந்தாமல் சண்டை செய்தவன்
ஆயுதம் ஏந்தாமல் சண்டை செய்தவன் அல்லவா ஸ்ரீகிருஷ்ணன்! அத்தனை வியூகங்களையும் தன் சாதுர்யத்தாலும் சாமர்த்தியத்தாலும் அல்லவா தவிடுபொடியாக்கினான்.
ஆனாலும் என்ன… எத்தனை சாமர்த்தியங்கள் இருந்தாலும், கண்ணனிடம் பொறுமை என்பது துளியும் இல்லை. எந்நேரமும் பரபரப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் ஸ்ரீகண்ணபிரான். ஒரு பக்கம் அர்ஜுனனையும் அவனுடைய சகோதரர்களையும் வழிநடத்திக்கொண்டு, திரௌபதிக்குச் சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு, தேரைச் செலுத்தியபடியே பீஷ்மாச்சார்யர் முதல் சகலரையும் ஒருகண் பார்த்துக்கொண்டு… என மின்னல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் பகவான். அதனால் ‘வியக்ரஹ:’ என்கிற திருநாமம் அவனுக்கு அமைந்தது. வியக்ரஹ: என்றால் பொறுமை இல்லாதவன் என்று அர்த்தம்.
சரி… மகாபாரத யுத்தத்தில் ஆயுதங்கள் ஏதும் வைத்திருந்தானா பகவான்? இல்லைதானே! அதனால்தான் அவனுக்கு ‘ஏக சிருங்கஹ:’ என்கிற திருநாமம் அமைந்தது. அதாவது ‘ஒரு ஆயுதமும் இல்லாதவன்’ என்று பொருள்.
ஆனால், இந்த யுத்தத்துக்காகவும் பஞ்சபாண்டவர்களுக்காகவும் என்னவெல்லாம் செய்திருக்கிறான் அவன்? பாண்டவ தூதனாகச் செயல்பட்டான். அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்து தேரோட்டினான். சதுர்த்தசி நாளில், அமாவாசை என்று பொய் சொல்லித் தர்ப்பணம் செய்தான். ‘அட… இன்னிக்குதான் அமாவாசைபோல! கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் பண்றாரே…. வாங்க, நாமளும் தர்ப்பணம் பண்ணிடுவோம்!’ என்று எல்லோரையும் அமாவாசை என நம்ப வைத்தான்.
அதாவது, பாண்டவ சகோதரர்களுக்காக, தருமம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக… சாம, தான, பேத, தண்டம் என சகலத்தையும் பயன்படுத்தினான் கண்ணன். வியூகம் அமைத்து வெற்றி தேடித் தந்தான். ‘எப்பாடு பட்டாவது தனது அடியவர்களை, தன்னை நம்பியவர்களை ரட்சிக்க வேண்டும்’ என்பது மட்டுமே அவனுடைய நோக்கம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, என்ன செய்வதற்கும் அவன் தயாராக இருந்தான். அவ்விதமாகவே செயல்பட்டான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அப்படித்தான்! தன்னுடைய அடியவர்களை அவன் ஒருபோதும் கலங்கவிடமாட்டான். கலங்கித் தவிக்கிற அடியவர்களை எந்நாளும் கைவிடமாட்டான். அர்ஜுன சகோதரர்களுக்காக அத்தனை செய்த பகவான், தனது அடியார்களுக்காக, அந்த அடியவர்களில் ஒருவராக இருக்கிற நமக்காக, எனக்காக, உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.
‘நைக சிருங்கஹ’ என்கிற திருநாமம் அதனால்தான் அவனுக்கு வந்தது. அதாவது ‘எப்பாடு பட்டாலும் ரட்சிப்பவன் ஸ்ரீகிருஷ்ணன்!’
ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவும் ஓடி வருவான்; ஏமாற்றுபவர்களின் கொட்டத்தை ஒடுக்கவும் ஓடி வருவான்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒன்றே ஒன்றுதான்… பகவான் ஸ்ரீகண்ணனை மனதார நினைக்கவேண்டும்!
விதி என்றால் என்ன?
விதி என்றால் என்ன?
விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே! இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிக்கிறார்கள்?
ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படித்தான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியைப் புரிந்து கொள்ள நிறைய கேட்டுக் கொண்டே போகலாம்.
முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவோம். பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
விதி என்பது பெரும்பாலும் நமது மன சமாதானத்திற்க்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது போய் விட்டான். தோற்க்க வேண்டும் என்று விதி அதனால் தான் தோற்றேன். எனக்கு விதிக்கப்படவில்லை அதனால் தான் கிடைக்கவில்லை. அவன் விதி நல்லாயிருக்கு அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்க்காக நாம் விதியைப் பயன்படுத்துகிறோம்.
உண்மையில் இப்படி நமது செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழிபோடா விட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைந்திருப்போம் என்பதே உண்மை. இத்தகைய சமாதானத்திற்கு விதி பயன்படுகிறது
இப்போது விதி என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது.
ஒன்று. சுய நிர்ணய விதி.
இரண்டு. சமூக விதி.
மூன்று. பிரபஞ்ச விதி.
இவற்றை ஒன்வ்வொன்றாகப் பார்ப்போம்.
1. சுய நிர்ணய விதி.
விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கற்பனைக்கு விளங்காத ஒரு வலைப்பின்னலாக இருக்கிறது. இதில் சுய நிர்ணய விதி என்பது என்ன?
எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்க்கைக்கான விதியை என்னால் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்…முடியும் . உங்கள் விதி உங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல். புரிந்திருக்காது. புரியவைக்க முயற்சிக்கிறேன்.
சுய நிர்ணய விதியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அடிப்படையில் மறுபிறப்பு என்பதை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது.
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
அர்ஜுனனைப்பார்த்துச் சொல்கிறார் “அர்ஜுனா! நீயும் நானும் இந்த மன்னில் பலமுறை பல வடிவங்களில் பிறந்திருக்கிறோம்! அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது” என்று சொல்லி அர்ஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்துரைக்கிறார்.
மேலும் மனிதனின் உடல் தான் இறக்கிறது. ஆத்மா என்ற நமது உணர்வு ஸ்வரூபம் இறப்பதில்லை. அத்தகைய ஆத்மா உடலை விட்டுப் பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்த மானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிறவியில் தான் விட்டுப்போன உணர்வுகளுக்கு பதில் கிடைக்குமாறு வாழ முயற்ச்சிக்கும். முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்க்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியாது.
உதாரணமாக நல்ல தெய்வபக்தியுடன் கூடிய அமைதியாக தர்மத்தைக் கடைபிடித்து வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அடிதடியும் முரட்டு குணமுமாக போலீஸ் கேஸ் என்று அலையும் நிலையில் இருப்பார். உங்க குடும்பத்துக்கே இல்லாத புத்தி உனக்கு எங்கே இருந்துடா வந்தது என்ற புரியாமல் கேட்பார்களே அது இப்படித்தான்.
ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அந்த குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படைக் குணத்தை நிர்ணயிக்கும்.
இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்பத்தின் வளர்ப்பு ஒருவனது குழந்தைப்பருவத்தைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமைபருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது. அந்த விதிப்படி அவன் இளமைப்பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்க்கை முழுவதுக்குமான விதியாக அமைகிறது. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை விதி நிர்ணயிக்கப்படுகிறது.
2. சமூகத்தாலான விதி
நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பிப் போவோம். குடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம். எனவே ஒரு சமூகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும். இந்த சங்கிலித்தொடர் இருக்கிறதே இது சமூகத்தால் உண்டாகும் விதி.
உதாரனமாக நமக்கு முந்தைய தலைமுறையில் ஆண் குழந்தை தான் பெரிசு என்று பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தார்களானால் இந்த தலைமுறைக்குத் திருமணத்திற்க்குப் பெண்ணே கிடைக்காமல் போகிறது. ஆனால் தனி ஒரு மனிதனுக்கு, தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் போகும். ஆனால் இது சமூகத்தின் நடவகிக்கையால் உண்டான விதி. அது நமக்கு சம்மந்தமில்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமூகத்தால் உண்டான விதி ஆகும்.
அதேபோல இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைப்போர்கள் அதனால் ஏற்படும் மரணமும் இதற்கு உதாரணமகச் சொல்லலாம்.
இவைகள் கடந்தகாலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகிறது.
3. பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி:
சுனாமி. இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. ஆம். இயற்க்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால் இயற்க்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலங்காலமாக நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதியாகும்.
இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிக்குட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளைக் கொண்டு வாழ்க்கையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்குப்பன்னிப் பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்ந்திருக்க முடியாது.
இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாடில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்கப்படுவதாலேயே நாம் விதியை நம்புவது நமது விதியாகிறது.
ஆக கடந்தகால இயற்க்கையின் நிகழ்வு, சமூக நிகழ்வு, மனித வாழ்க்கை இவற்றின் விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிக்கின்றன. நிகழ் காலத்தில் நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிக்கிறது. எனவே இதை நன்றாக உணர்ந்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களிலிருந்து மீறாமல் வாழ்வது எதிர்காலத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதிக்கொள்வது போல் ஆகும். எழுதுவோமா?
அதெல்லாம் சரி, விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியும். உதாரணம். மகாத்மா காந்தி. அடிமைகளாக இருப்பது இந்தியர்களின் விதியாக இருந்தது. தனது நிகழ்கால நடவடிக்கைகளின் மூலம் எதிர்கால இந்தியர்களின் விதியை அவர் மாற்றினார்.
சுய நிர்ணய விதி சமூக விதியை மாற்றியது. அதனாலேயே அவர் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார்.

காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
(காசிப முனிவர் இயற்றியது, கச்சியப்பர் மொழிபெயர்த்தது)
**************************************************
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
நம்பினார் கெடுவதில்லை! (ஆன்மிகம்)
களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.
மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?
அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.
அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.
அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.
அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.
——————————————————————————————————————————–
பித்தன் என்பவன் யார்? (ஆன்மிகம்)
பரமேஸ்வரனுக்கு, “பித்தன்’ என்ற ஒரு பெயருமுண்டு. இவருக்கு பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில் பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி, அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி செய்கிறது.
அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை, “பணப்பித்து’ என்கின்றனர். சிவனையே நினைத்து பக்தி செய்பவர்களையும் பித்தன் என்பர்.
பகவானைப் புகழ்ந்து பாடி வழிபட்டால், அவனை சந்தோஷப்படுத்தினால், அவன் பல சம்பத்துக்களையும் அளித்து, சம்சார பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறான்; பக்தர்களை ரட்சிக்க வேண்டியதை தன் பொறுப்பாகவே ஏற்றுக் கொள்கிறான். கஷ்டம், மரணம் என்பதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தான். அதை கண்டு அவர்கள் பயப்படுவர்; ஆனால், அவைகளைக் கண்டு பக்தர்கள் பயப்படுவதில்லை. பக்தர்களுக்கு வளமையோ, செழுமையோ எதுவும் தெரியாது; தெய்வத்தின் அருளே அவர்களது செல்வம்.
சிவனார் ஆலகால விஷம் உண்டார். எதற்காக? அந்த விஷம் வெளியில் இருந்தால் உலகத்துக்கு ஆபத்து என்பதற்காக. இது அவரது கருணையல்லவா! தெய்வத்தை வழிபட்டு, நெறியான வாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்களை எந்தவித துன்பமும் பாதிப்பதில்லை.
பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தினான். ஆனால், அவர் கலங்கவில்லை. பகவானை நம்பினார். பிரகலாதனும் பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருத்தப்படவே இல்லை. தெய்வீக இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே தெரியாது!
தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை அவர்கள் அறிய மாட்டார் கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை.
ஒரு தபஸ்வியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பை போட்டான் பரீட்சித்து மன்னன். ஆனால், அந்த தபஸ்விக்கு அது தெரியவே இல்லை. அவர் மனம் தவத்தில் ஈடுபட்டிருந்தது.
தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒருவர் வாசற்படியின் அருகில் திண்ணையில் உட்கார்ந்து ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் ஒரு மாடு போகிறது. ஆனால், அதோ, மாடு போகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை.
ஒருவன் வந்து, “ஐயா! இந்த பக்கம் ஒரு மாடு போயிற்றா?’ என்று கேட்டான். அவர், “தெரியலையே! நான் கவனிக்கவில்லையே…’ என்றார். இவரது கண் முன் ஒரு மாடு போயிருக்கிறது; ஆனால், விழித்திருந்தும் அவர் அந்த மாட்டை கவனிக்கவில்லை; காரணம், அவரது மனம் முழுவதுமாக பக்தியில் ஈடுபட்டிருந்தது.
மனம் எதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதோ, அப்போது மற்ற விஷயங்கள் மனதில் படுவதில்லை. இப்படி மெய்மறந்து பக்தி செய்ய வேண்டும்!
——————————————————————————–
சிவம
நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்துவது – சிவசொரூபம். சிவனுடைய ஜாடமுடியிலிருக்கும் பிறை சந்திரன், நம்முடைய இன்பமும், துன்பமும் மாறி மாறி வளர்பிறை, தேய்பிறையாக வருவதை குறிக்கும்.
சிவனுடைய சிரசிலிருக்கும் கங்கை:
மனதை, கங்கை போல, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கங்கையில் எத்தனை அழுக்குகள் வந்து சேர்ந்தாலும் அதன் தூய்மை கெடுவதில்லை. அதுபோல, ஆசாபாசங்கள் நம்மை வழித்தவறி போகச் செய்தாலும், நாம் தூய்மையை விட்டு அகலக்கூடாது.
ஒவ்வொரு நிமிடமும் பாவக்குழியிலே தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை நமக்கு காத்திருக்கிறது. இதையே சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு எச்சரிக்கிறது.
மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கா வண்ணம் உயர்ந்த உள்ளத்தோடு நாம் வாழவேண்டும் என்பதை சிவனுடைய புலித்தோல் ஆடை உணர்த்துகிறது. உடல் முழுவதும், சாம்பலை பூசியிருப்பது மனிதனுடைய முடிவு, பிடிசாம்பல்தான் ஆகவே அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஈசன் தன் உடம்பின் ஒரு பாகத்தில் தேவியை வைத்திருப்பது. வாழ்வில் நாம் காமத்தை வென்று, மோட்சத்தை அடையவேண்டும் என்பதற்காகத்தான்.
———————————————————————————————————–
குழந்தைகளுக்கு பக்தி புகட்டுவோம்! (ஆன்மிகம்)
ஆண்டவன் தொண்டு என்றாலும், ஆன்மிக நூல்களை வாசிப்பதென்றாலும் அது வயதானவர் களுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பக்தி, ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது செலுத்திய பக்தி, அவர் இறைவனின் குழந்தையாகவே மாறுவதற்குரிய சந்தர்ப்பத் தைத் தந்தது. இதனால் இவரை, “இளைய பிள்ளையார்’ என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறோம்.
சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல் வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் (குளம்) நீராடும் போது, குழந்தையை கரையில் அமர்த்தி விடுவார். குழந்தை சம்பந்தன் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பார். ஒரு தோணியில், சிவபார் வதி பவனி வருவது போன்ற சிற்பம் அங்கு இருக் கும். அதை ரசித்தபடியே இருப்பார்.
ஒருநாள் நல்ல பசி. குளிக்கச் சென்ற இருதயர் திரும்பவில்லை. கரையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. அப்போது, அம்பாள் அவர் முன் வந்தார். கையில் கொண்டு வந்த பொற் கிண் ணத்தில் பால் நிரம்பியிருந்தது. குழந்தைக்கு அதைப் புகட்டினாள். அப்படியே மறைந்து விட்டாள்.
குளித்துவிட்டு வந்த இருதயர் குழந்தையின் வாயில் வழிந்திருந்த பாலைப் பார்த்துவிட்டு,
“பிறர் கொடுக்கும் பாலைக் குடிக்கலாமா? யார் கொடுத்தது இது?’ என்று அதட்டினார்.
“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம்
கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே…’
—என்று துவங்கி ஒரு பதிகத்தைப் பாடியபடியே தோணியப்பரையும், அம்பிகையையும் சுட்டிக்காட்டியது குழந்தை. பதிகம் என்பது 11 பாடல்களைக் கொண்டது. இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்கு முன்வினை பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று பாடி முடித்தார்.
ஒரு குழந்தைக்கு இவ்வளவு ஞானமா? இருதயரும், கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.
சம்பந்தரின் பாடல்களில் ஒரு விசேஷம் உண்டு. இவர் பாடும் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலிலும் தன் பெயரை அவர் குறிப்பிட்டிருப்பார்; அதாவது, இந்தப்பாடல் ஞானசம்பந்தனாகிய தன்னால் தரப்பட்டது என்று சொல்லியிருப்பார்.
இவரது முதல் பாடலைப் போல கடைசிப்
பாடலும் மிகவும் உயர்ந்தது. இவருக்கு நிச்சயிக்கப்பட்ட முதல் திருமணம் சில காரணங்களால் நின்று போனது. பின்னர், திருப்பெருமணநல்லூர் எனப்படும் ஆச்சாள்புரத்தில் வசித்த பெண்மணியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமக்கள் யாக குண்டத்தை வலம் வந்த போது, தன் இனிய குரலில், “காதலாகிக் கசிந்து’ எனத்
துவங்கும் பதிகத்தைப் பாடினார் சம்பந்தர். அவர் பாடி முடித்ததும், மாப்பிள்ளை – மணப் பெண்ணுடன், திருமணத்தில் பங்கேற்றவர்களும் அந்த ஜோதியில் கலந்து விட்டனர்.
சிவஜோதியில் சம்பந்தர் கலந்த நாளை குருபூஜை யாக எல்லா சிவாலயங்களிலும் வைகாசி மூலம் நட்சத்திரத்தன்று நடத்துவர். சீர்காழி தோணியப் பர் கோவிலில் இந்த நிகழ்ச்சி மிகவும் விசேஷம்.
சம்பந்தரின் வரலாறு, குழந்தைப் பருவத் திலேயே பக்தியைப் புகட்ட வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கிறது.
——————————————————————————————————–
இந்த ஜென்மாவை வீணாக்கலாமா? (ஆன்மிகம்)
புராணங்களில், ஸ்ரீமத் பாகவதம் விசேஷமானது; அதிலும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பெருமை மிக்கது. கண்ணனாக வந்து, ஆயர்பாடியில் பகவான் விளையாடியது; வெண்ணை, பால், தயிர் திருடியது; மாடு மேய்த்தது முதல், பூதனாவதம், சகடாசுரவதம், காளிங்க நர்த்தனம், கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து ஆயர்பாடி மக்களை காப்பாற்றியது; கோபிகைகளுடன் ராசக்ரீடை புரிந்தது போன்ற விஷயங்களை பக்தர்கள் படித்தும், கேட்டும் மகிழ்வர்.
பக்தியைவிட, அதிகமாக பிரேமையை கண்ணனிடம் வைத்திருந்தனர் கோபிகைகள். கண்ணனைக் காணாத ஒரு வினாடியை ஒரு யுகமாக நினைத்தனர். இப்படிப்பட்ட கோபிகைகளை விட்டு விட்டு, மதுரா நகரம் போய் விட்டான் கண்ணன்; அதனால், மிகுந்த துக்கப்பட்டுக் கொண்டிருந்தனர் கோபிகைகள். கோபிகைகளை சமாதானம் செய்து வரும்படி உத்தவர் என்பவரை அனுப்பினார் பகவான். கோகுலத்துக்கு வந்த உத்தவர், கண்ணனிடம், அவர்கள் வைத்திருந்த பக்தி, பிரேமையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவரது எண்ணங்கள் இப்படி ஓடின…
சகல ஜகத்ரூபியான கோவிந்தரிடத்தில், இந்த கோபிகைகள் இடைவிடாமல் பக்தி செய்வதால், இவர்களே மேலானவர்கள். மகரிஷிகளும், நாமும் சம்சார பந்தத்திலிருந்து பயந்து, ஒதுங்கி வந்து கிருஷ்ணனிடம் பக்தி செய்கிறோம். இவர்கள் அப்படியல்ல, சதா காலமும் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பகவானிடம் பக்தி செய்து, அவருடைய கதைகளைக் கேட்டு ஆனந்தப்படுபவர்களே பாக்கியசாலிகள். இப்படிப்பட்டவர்கள் எந்த குடியில் பிறந்தவர்களானாலும் மேலானவர்களே… பகவானிடம் பக்தி செய்யாதவர்கள், எந்த உயர்குலத்தில் பிறந்திருந்தாலும், அதில் பெருமை என்ன இருக்கிறது!
இந்த கோபிகைகள், பந்துக்களையும், தர்மத்தையும் விட்டு, வேதங்களாலும் தேடக் கூடிய பகவானுடைய பாதத்தை அடைந்திருக்கின்றனரே… அவர்களுடைய பாதத் துளிகளை அடைந்துள்ள இந்த பிருந்தாவனம், மரம், செடி, கொடிகளும் மேலானவைகளே! எந்த கோபிகைகள், கிருஷ்ண சரிதத்தை கானம் செய்வதால் மூவுலகையும் பரிசுத்தப்படுத்துகின்றனரோ, அந்த கோபிகைகளின் பாதத் துளியை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்…
—இந்த மனித ஜென்மாவை விட்டால், வேறு எந்த ஜென்மாவில், என்ன பிறவியில் பக்தி செய்ய முடியும்? ஒரு கோவிலுக்குப் போக முடியுமா; ஒரு தெய்வ தரிசனம் செய்ய முடியுமா; ஒரு தான, தர்மம் செய்ய முடியுமா; சத் விஷயத்தை கேட்க முடியுமா? ஆக, இந்த மனித ஜென்மா வீணாகக்கூடாது; மேலும், மேலும் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். அதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
—————————————————————————————————————
ஆன்மிகம், பக்தி என்று, இரண்டு உள்ளன. இதில், எது முதலில் ஆரம்பம் என்பது யோசிக்க வேண்டும். ஆன்மிக வாழ்க்கை என்பது ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பது. இது, பழகப் பழக, மேலும், மேலும் விருத்தியாகும்.
ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிக்கும் போது, பகவானை வழிபடத் தோன்றும். ஆரம்பத்தில் சில புஷ்பங்களை கொண்டு வந்து, சுவாமி படத்துக்குப் போடுவான். நாளடைவில் புஷ்பங்களைப் போடுவதோடு, “ஏன் பூஜை செய்யக் கூடாது…’ என்று நினைப்பான்.
மறுநாளிலிருந்து, காலையில் ஆசார, அனுஷ்டானங்களை முடித்து, பூஜை செய்ய உட்காருவான். முதலில், “அஷ்டோத்ரம்’ சொல்லி அர்ச்சனை செய்வான்; போகப் போக, சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான்.
பகவானிடமே மனம் ஈடுபடும். முதலில் இரண்டு வாழைப்பழம் வைத்து நிவேதனம் செய்வான். நாளடைவில், அன்னம், பருப்பு, பாயசம், பழம், தேங்காய் என்று விருத்தியாகி, நிவேதனம் செய்வான்.
சுவாமி பூஜை, நைவேத்யம் ஆன பிறகு தான் சாப்பிட உட்காருவான். அதற்கு முன், ஒரு பிடி சாதம் காக்கைக்குப் போடுவதுண்டு. இப்படி பூஜை செய்யச் செய்ய, மனதில் பகவத் பக்தி ஏற்படும். கோவிலுக்குப் போய், சுவாமி தரிசனம் செய்து விட்டு வரத் தோன்றும்; போய் வருவான்.
சில இடங்களில் நடைபெறும் உபன்யாசங்களைக் கேட்டு, பகவானிடம் பக்தி ஏற்படும். இப்படியாக, பக்தி என்பது விருத்தியாகி விட்டால், அதன் பிறகு, அனுஷ்டானம் என்பது கூட தேவையில்லாததாகி விடும்.
மகான்கள், ரிஷிகள் சதா காலமும் பக்தி செய்து கொண்டே இருப்பர்; அனுஷ்டானம் என்பது அடுத்ததுதான். அதனால், பிள்ளைகளையும் இதே வழியில் பழக்கம் செய்வது நல்லது. தகப்பனார் பூஜை செய்யும் போது, பையனும் கூடவே இருந்தால், அவனுக்கும் இதில் செல்லும் புத்தி.
தகப்பனார் சீட்டாடிக் கொண்டிருந்தால், பையன் ரம்மி ஆடப் போவான். அதனால், பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே, பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்துவது நல்லது.
பையனுடைய சகவாசம், நடவடிக்கை இவைகளையும் கவனித்து வந்தால், பையன் போகக் கூடாத இடங்களுக்கு போக மாட்டான். தகப்பனாரைப் போலவே பக்தி மார்க்கத்தில் ஈடுபட விரும்புவான்.
இதெல்லாம் நல்ல குடும்பம் என்று பெயரெடுக்க உதவும். வாழ்க்கை என்பது சில காலம் தான்; அது, நல்ல முறையில் செலவிடப்பட வேண்டும்; எமன் வருவதும், கரன்ட் போவதும் எப்போது என்று தெரியாது; ஜாக்கிரதை என்றனர்.
—————————————————————————————————————————
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா?
மனிதர்களுக்கு ஆசார, அனுஷ்டானம் போன்ற கட்டு திட்டங்களை ¬முன்னோரும், மகரிஷிகளும் ஏற்படுத்தியுள்ளனர்; அதன்படி நடப்பது நல்லது என்றனர். இதில், சந்தியா வந்தனம் செய்வதும் ஒன்று. சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய நேரங்களும் சொல்லப்பட்டுள்ளது.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு!’ என்பது வாக்கியம். அதாவது, சூரியன் கண்ணுக்குத் தெரியாத போது, சூரிய உதயத்துக்கு ¬முன் அர்க்யம் கொடு; இது, காணாமல் கொடு என்பதை குறிக்கும். கோணாமல் என்பது, சூரியன் தலைக்கு நேராக உள்ள உச்சி காலத்தில், அர்க்யம் கொடு என்பது.
அடுத்து, கண்டு கொடு என்பது, சூரியன் மறைவதற்கு ¬முன், மாலை வேளையில் அர்க்யம் கொடுக்க வேண்டும். இதை சிரத்தையுடன் செய்து வந்தால், ஆரோக்கியம், புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு…’ என்பதற்கு, வேறு ஒரு விளக்கமும் உள்ளது. தர்மம் செய்யும் போது, அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் கொடு; இது, காணாமல் கொடு என்பது.
கோணாமல் கொடு என்பது, தர்மம் செய்யும் போது, மனம் கோணாமல், ¬முழு மனதோடு கொடு என்பது. கண்டு கொடு என்பது, யாருக்கு என்ன தேவை என்று பார்த்து, ஸத் பாத்திரத்துக்கு கொடு என்பது. படிப்பில் ஆர்வமில்லாதவனுக்கு புத்தகமும், கல்யாண ஆசை இல்லாதவனுக்கு பெண்ணும், பசி இல்லாதவனுக்கு அறுசுவை உணவும் கொடுப்பது பயனற்றது.
அதனால், யாருக்கு, என்ன தேவை என்பதை அறிந்து, கொடுக்கச் சொன்னார்கள். தர்மம் செய்வதிலும் இத்தனை சூட்சமங்கள் உள்ளன. ஏதோ நானும் தர்மம் செய்து விட்டேன் என்று, பெருமைபட்டுக் கொள்வதில் பிரயோசனமில்லை.
இப்படியாக காணாமல், கோணாமல், கண்டு கொடு என்பதற்கு, சந்தியா வந்தனம் செய்வதிலும், தர்மம் செய்வதிலும் சில நியதிகள் உண்டு. இவைகளைத் தெரிந்து செய்வது நல்லது!
—————————————————————————————————————————
தலையிலேயே விடிந்த சாபம்! (ஆன்மிகம்)
பகவானிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவனருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பதில்லை பகவான். “பகவானே… எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு…’ என்று கூறினாலே போதும்; கிடைக்கும். கீதோபதேசம் முடிந்ததும், “கிருஷ்ணா… நீ சொன்னதையெல் லாம் கேட்டேன். இப்போது நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; செய்கிறேன்…’ என்று, முடிவை பகவானிடமே விட்டு விட்டான் அர்ஜுனன்.
மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது, ஜயத்ரதன் என்பவனை, சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள், அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை; அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது. “என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று கேட்டான்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான்; இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்…’ என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடன், அர்ஜுனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது…
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
இந்த ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். அவர் கோரமான தவம் செய்ததன் பலனாக, இந்த பிள்ளையைப் பெற்றார். அந்த பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்…’ என்றது.
இதைக் கேட்ட விருத்தட்சரன், “தன் தவ வலிமையால், யுத்த களத்தில் எவன் என் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்…’ என்று சாபம் விட்டார்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி, “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோ பாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள் ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவரே சொல்லியிருந்தபடி இவரது தலையே சுக்கல்களாகியது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால், பகவானுடைய சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது.
நாம் என்ன தான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான் தான்.
அதனால், எல்லாப் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்து விட்டு, “பகவானே… எல்லாம் உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய்!’ என்று சொல்லி, அவனையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவன் கடமை, அவன் செய்வான்!
——————————————————————————————————————————————
காரியம் ஆக வேண்டுமென்றால், எந்த எல்லைக்கும் போவோம். அதன்பின், பிரச்னை வந்தால், சாக்கு போக்கு சொல்லி, சமாளிக்கப் பார்ப்போம்; அப்படியும் சமாளிக்க முடியவில்லை என்றால், மாற்று வழி தேடுவோம். இது உலக வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து சத்தியசீலன் என்று சிறப்பிக்கப்படும் அரிச்சந்திரன் கூட தப்பவில்லை என்பதை, அவன் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.
மனிதர்களாய் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சிறு பொய்யாவது பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும்.
ஆனால், அரிச்சந்திரன் மட்டும் சத்தியம் தவறாதவராக, பொய் சொல்லாதவராக திகழ்ந்ததற்கான காரணத்தை, ஸ்ரீதேவி பாகவதம் சொல்கிறது.
அரிச்சந்திரனுக்கு குழந்தை இல்லை. அதனால், குல குருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி, வருணனை நோக்கி, தவம் செய்தார். அவன் தவத்தில் மகிழ்ந்த வருண பகவான், ‘உனக்கு குழந்தை பேற்றை தருகிறேன். ஆனால், அந்த குழந்தையை, யாகத்திற்கு பலியாக தருவாயா…’ எனக் கேட்டார்.
‘பகவானே… மலடன் என்கிற பெயர் நீங்கினால் போதும். நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்…’ என்றார் அரிச்சந்திரன்.
வருண பகவான் அருளால், அரிச்சந்திரனுக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. உடனே, வருண பகவான் வந்து விட்டார். ‘அரிச்சந்திரா… நீ சொன்னபடி, உன் பிள்ளையை யாகம் செய்து, பலி கொடு…’ என்றார்.
அரிச்சந்திரன் திகைத்துப் போனார். பிள்ளையை இழக்க, யாருக்கு தான் மனம் வரும்! அதனால், ‘சுவாமி… தீட்டு கழிய ஒரு மாதம் ஆகும். தீட்டோடு யாகம் நடத்தக் கூடாது. ஆகையால், ஒரு மாதம் கழித்து வாருங்கள்…’ என்றார்.
அதன்பின், குழந்தைக்கு பல் முளைக்கட்டும்; கர்ப்ப கேசம் களைய (முடி இறக்க) வேண்டும்; உபநயனம் (பூணூல்) ஆக வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, மகனுக்கு பதினோறு வயது ஆகும் வரை, அரிச்சந்திரன் யாகமே செய்யவில்லை.
ஓரளவிற்கு வளர்ந்து விட்ட அந்தப் பிள்ளை விவரமறிந்து, தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள, காட்டிற்குள் ஓடி விட்டான்.
வருண பகவான் வந்து நின்றார். உண்மையை சொல்லி, மன்னிப்பு கேட்டார் அரிச்சந்திரன்.
கொடுத்த வாக்கை அரிச்சந்திரன் காப்பாற்றததால், வருண பகவான் சாபம் கொடுத்து விட்டார். பின்பு வசிஷ்டரின் ஆலோசனைபடி, அரிச்சந்திரன் சாபத்திலிருந்து விடுதலையானான்.
சாபத்தில் இருந்து விடுபட்ட அரிச்சந்திரன், ‘இனிமேல், உயிரே போனாலும், சத்தியம் தவற மாட்டேன்…’ என்று, சத்தியம் செய்தான். அதன்பின் நடந்த கதை தான், உங்களுக்கு தெரியுமே!
தீய பழக்க, வழக்கங்களை விட்டு விலகி நிற்பது கடினம்; நல்லவைகளை கடைபிடிப்பதில் உறுதியாகவும், தீவிரமாகவும் இருப்பது மிக மிகக் கடினம். அவ்வாறு கடைபிடித்தால், நிலைத்த புகழை அடையலாம் என்பது, அரிச்சந்திரன் வரலாறு விளக்கும் உண்மை.
—————————————————————————————-
நாத்திகவாதி…
“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”
“நிச்சயமாக ஐயா..”
“கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா.”
“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”
“ஆம்.”
“என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் என்று?”
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
“உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா..”
“சாத்தான் நல்லவரா?”
“இல்லை.”
“எல்லாமே கடவுள் படைப்புத்தான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்?”
“கடவுளிடமிருந்துதான்.”
“சரி. இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா?”
“ஆம்.”
“அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்?”
(மாணவர் பதில் சொல்லவில்லை)
“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”
……
“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
…….
“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
“ஆம் ஐயா..”
“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் இல்லை’ என்று. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”
“ஒன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”
“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதான் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
“ஐயா.. வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?”
“நிச்சயமாக உள்ளது.”
“அதேபோல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?”
“நிச்சயமாக.”
“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை.”
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)
“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது. (Absence of heat is the cold). “வெப்பம் இல்லை” என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”
(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
“சரி.. இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?”
“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”
“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது. இல்லையா?”
“சரி தம்பி.. நீ என்னதான் கூற வருகிறாய்?”
“ஐயா.. நான் கூறுகிறேன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”
“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.
அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா�
�். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை.
இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற தன்மையே இறப்பு என்பதை அறிகிறீர்கள் இல்லை.
“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.
“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
(பேராசிரியர் தன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
“அப்படியென்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையான’ அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”
(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
“யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் என்ன சொல்கின்றன?”
“அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை என்று.”
“மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போனது!)
“நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”
“அது தான் ஐயா.. இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”
இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.
இது ஒரு உண்மைச் சம்பவம்.
பகவான்: அர்ச்சுனா!! மனிதர்களின் இயல்பு வழியாக ஏற்படும் சிரத்தை ஈடுபாடு மூன்று வகைப்படும்.அவை சாத்வீகம் ராச்சதம், தாமசம்.
அர்ச்சுனன்: மனித இயல்பின் மூலம் ஏற்படும் அந்த ஈடுபாடு ஏன் 3 வகைப்பட வேண்டும்?
பகவான்: பரத வம்சத்து புதல்வனே! எல்லா மனிதர்களிடமும் இடம்பெற்றுள்ள சிரத்தை அவர்களுடைய அந்தக் கரணம் எனும் உள்மன உணர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. ஈடுபாடு கொண்டு முனைபவன் சிரத்தை மயமானவன்.ஆகையால் எந்த மனிதனுக்கு எத்தகைய சிரத்தையுள்ளதோ அதன் சொரூபமாக அவன் இயல்பும் அமையும்.அவனது செயலும் நிலையும் அந்த இயல்புப்படியே அமையும்.
அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே அந்த சிரத்தையை எப்படி இனம் கண்டு கொள்வது?
பகவான்: சாத்வீகமான இயல்பு கொன்ட மனிதன் தேவதைகளை பூசித்து ஆராதிக்கின்றான்.இராட்சத இயல்பு கொண்டவன் யட்சர்களையும்,இராட்சதர்களையும் பூசிக்கிறார்கள்.தாமச குணம் கொண்டவர்கள் பூதங்கள் பிரேதங்களை பூசிக்கிறார்கள்.
அர்ச்சுனன்: சிரத்தை ஈடுபாடு இல்லாத மனிதர்களுக்கு என்ன அடையாளம்?
பகவான்: அர்ச்சுனா! சிரத்தையில்லாத மனிதர்கள் வீண் பெருமை கர்வம், பேராசை தீவிர ஈடுபாடு பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள்.சாத்திர விதிகளுக்கு புறம்பாக கொடும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.ஐம்பூதப் பொருட்களால் ஆன சரீரத்தையும் அந்தக் கரணத்தில் உள்ள என்னையும் துன்புறுத்துகிறர்கள்.இத்தகைய அஞ்ஞானிகளை நீ அசுர சுபாவம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொள்.
அர்ச்சுனன்: பகவானே! இதுவரையில் நீங்கள் பூசை, ஆராதனை, தவம் மூலமாக சிரத்தை கொண்டவர்கள், சிரத்தை இல்லாதவர்கள் என்னும் மனிதர்களை இனம் காண்பதைப் பற்றி உபதேசித்தீர்கள்.ஆனால் எவர் பூசை தவம் செய்யாதிருக்கிறார்களோஅவர்களை எப்படி அறிந்து கொள்வது?
பகவான்:அர்ச்சுனா! உணவின் சுவையைக் கொண்டு அதனை விரும்புபவர்களை அடையாளம் காணலாம்.( உணவு பழக்கம் மூலம் உண்பவர்களின் தராதரம் தெரியவரும்). காரணம் எல்லா மனிதர்களுக்கும் மூன்றுவகை உணவுகள் பிரியமானவை.இதைப் போல் வேள்வி,தவம், தானம் மூன்றும் மூன்று வகைப்பட்டவர்களுக்கும் பிரியமானவை. இந்த வித்தியாசத்தை இப்போது சொல்கிறேன் கேள்.
அர்ச்சுனன்: சாத்வீகமான மனிதனின் சுவை ஈடுபாடு எத்தகைய உணவில் ஏற்படுகின்றது?
பகவான்:அர்ச்சுனா! ஆயுள்,சாத்வீக குணங்கள்,உடல் வலிமை,ஆரோக்கியம்,சுகம்,மகிழ்ச்சி இவைகளை வளர்ப்பவையும் ,நிலையாக இருப்பவையும் இதயத்திற்கு வலிமை அளிப்பவையும் சுவையானவையும், ஈரப்பசை கொண்டவையுமான உணவுப்பண்டங்கள் சாத்வீகமான மனிதனிற்கு பிரியமானவைகள்.
அர்ச்சுனன்: இராட்சத மனிதனிற்கு பிடித்தமான உணவுகள் எவை?
பகவான்:மிகக் கசப்பும், புளிப்பும், உப்பும் உள்ளவை.மிகச் சூடானவை,காரமானவை,எரிச்சல் ஏற்படுத்துபவை.இத்தகைய பதார்த்தங்கள் இராட்சத குணம்படைத்தவர்களுக்கு பிடித்தவை.இவை துன்பத்தையும் சோகத்தையும், வருத்தத்தையும் நோயையும் ஏற்படுத்துகின்றன.
அர்ச்சுனன்: தாமச இயல்பு கொண்டவர்களுக்கு விருப்பமானவை எவை?
பகவான்: அர்ச்சுனா! அரைகுறையாக வெந்து சுவையில்லாதது,கொடுநாற்றம் கொண்டது.( மதுவகை,வெங்காயம்,உள்ளிப்பூண்டு போன்றவை)பழையது, ஊதிப்போனது, தீண்டத்தகாதது( இறைச்சி, மீன்,முட்டை முதலியவை).இப்பொருட்களில் தாமச குணமுள்ள மனிதர்களுக்கு ருசி சுவை மிக விருப்பம் அதிகம்.
அர்ச்சுனன்: பகவானே! ஆகாரவகைகள் மூன்றுவகைப்படுவதை அறிந்தேன்.இதேபோல் வேள்வி,தவம், தானம் இவையும் மூன்று வகைப்படும் என்றீர்கள்.இவைகளுக்குள்ள வேள்வியின் பிரிவுகளைப் பற்றி கூற வேண்டும்?
(முதலில் யசனம், பூசனம், போசனம், வேள்வி வழிபாடு உணவு மூன்றின் மூலமாக ஈடுபாடு சிரத்தையை அறியச்செய்தார்.அதன்மூலம் சாஸ்திர விதிகளை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கப் படுபவர்களை இனம் காணமுடியும்.ஆனால் சாஸ்திர விதிமுறைப்படி வேள்வி வழிபாடு உண்ணுதல் புரிபவர்களின் வித்தியாசங்ளை அறியச் செய்வதே இங்கு வேள்வி,தவம்,தான்ம் மூன்றுக்குரிய மூவகைப் பேதங்களையும் போதிக்கலானார்)
பகவான்: அர்ச்சுனா! வேள்வி செய்வது,நம் கடமையெனும் உணர்வோடு, மனப் பக்குவத்தோடு பயனை பற்றிச் சிந்திக்காமல் , சாஸ்திர விதிமுறைப்படி செய்யப்படும் வேள்வி சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத வேள்வி எத்தகையது?
பகவான்: பரதகுல செல்வனே! பயனை எதிபார்த்து சுயநலத்திற்காக செய்யப்படுவதும் பிறர் பராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் பகட்டாக செய்யப்படுவதும் இராட்சத வேள்வி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமச வேள்வி எத்தகையது?
பகவான்: சாஸ்திர விதிகளிற்கு புறம்பானதும் அன்னதானம் இல்லாததும் மந்திர உச்சரிப்பு அற்றதும் தட்சணை அளிப்பு இல்லாததும் சிரத்தையற்றதுமான வெறும் பகட்டு வேள்வி தாமச வேள்வி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தவம் எத்தனை வகைப்பட்டது என்பதை உபதேசிக்க வேன்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா!தவஸ்( தவம்) மூன்று வகைப்பட்டது.உடலால் வாக்கால், மனத்தால் புரிவது.தேவதைகள், பிராமணர்கள், குருமார்கள்,ஜீவன் முத்தர்களான் மகாபுருஷர்கள் இவர்களை போற்றி பூசிப்பது.நீர், மண் முதலியவற்றால் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்வது.உடல்சார்ந்த பணிகளை எளிதாகவும், நேரியதாகவும் வைத்திருத்தல்( பதட்டம் பிடிவாதம் கொள்ளாது இருத்தல்) பிரம்ம சரியத்தை கடைப்பிடித்தல். உடலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் .இதுதான் உடல் சார்ந்த தவம்.
அர்ச்சுனன்: வாக்கினால் புரியும் தவம் எத்தகையது கண்ணா?
பகவான்: எரிச்சல் ஊட்டுவதும் ஆத்திரம் ஊட்டுவதுமாக இல்லாத, உண்மையாக,பிரியமான நலம் தரும் வார்த்தைகளைப் பேசுவது.கல்வி வேள்விகளில் ஈடுபட்டிருப்பது.ஜெபம், அர்ச்சனை முதலியவற்றை பயில்வது.இவைதான் வாக்கினால் புரியும் தவம்.
அர்ச்சுனன்: மனத்தால் புரியும் தவம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! மனத்தை மகிழ்சியாக வைத்து கொள்வது.எப்போழுதும் இனிதாகப் பழகுவது.சிந்திக்கும் திறன்,மனவடக்கம்,தூயகருத்து இவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மானசீக தவம்.
இம்மூன்று வகை தவங்களையும் மிக்க ஈடுபாட்டுடன் பயனீட்டும் ஆசையில்லாமல் நன்றாக செய்து வந்தால் அதுதான் சாத்வீகமான தவம் எனப்படும்.
அர்ச்சுனன்: இராட்சத தவம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! எந்தத் தவம் சொந்த நலனுக்காகவும் , கெளரவுத்துக்காகவும் , போற்றுதலுக்காகவும் செய்யப்படுகிறதோ மேலும் பிறரை வியக்க வைக்க வேண்டிய பாசாங்காக செய்யப்படுகிறதோ,அதுதான் ரஜோகுணம் மேலோங்கிய பகட்டுத்தவம் .இதனால் நல்ல பலன் ஏற்படாது.கிடைக்கும் சிறிதளவு பலனும் அழிந்தே போகும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமசகுணம் மேலோங்கும் தவம் எது?
பகவான்: எந்த தவம் அறியாமையும் பிடிவாதமும் கொண்டு தம்மை வருத்திக்கொண்டு பிறரையும் துன்புறுத்திக் கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமச தவம் எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! இப்போது தானம் மூன்றுவகைப்படுவது எப்படி என்பது உபதேசிக்க வேண்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா! தானம் கொடுப்பது நம் கடமை எனும் கருத்துடன் பிரதிபலன் எதையும் எதிர்பராமல் செய்ய வேண்டும்.மேலும் இடம் , காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.இத்தகைய தானம் சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத தான்ம் எத்தகையது பகவானே?
பகவான்: அர்ச்சுனா! எந்தத் தானம் பிரதி உபகாரம் பெறுவதற்காகவோ அல்லது பிரதி பலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறதோ,மேலும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று வேண்டா வெறுப்பாக கட்டாயமாக அளிக்கபடுகிறதோ அதுவே இராட்சத தானம்.
அர்ச்சுனன்: தாமச தானம் எத்தகையது?
பகவான்: எந்தத் தானம் மரியாதையில்லாமல் அலட்சியமாக அவமதிப்புடன் தகுதியற்றவர்களுக்கு தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.
அர்ச்சுனன்: பகவானே! சிரத்தையுள்ள மனிதன் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி,தவம்,தானம் முதலிய அறப்பணிகளை எவ்வாறு தொடங்க வேண்டும்?
பகவான்: அர்ச்சுனா! ஓம்,தத்,சத்( பிரணவ சொருபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது) எனும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மா தான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும் பிராமண சாஸ்திர கிரந்தங்களையும் வேள்விகளையும் படைத்தது.ஆகையால் பரமாத்மாவின் பெயரைப் போற்றி வேள்வி முதலான பணிகளை தொடங்க வேண்டும்.
அர்ச்சுனன்: பகவானே! ஓம் என்ற பிரணவம் எங்கு பயன் படுத்தப்படுகிறது?
பகவான்: அர்ச்சுனா! வைத்தீக சித்தாத்தங்களை ( கோட்பாடுகளை) ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு சாஸ்திர விதிப்படி ஏற்படுத்தப்பட்ட வேள்வி, தானம்,தவம் எனும் பணிகளை ஓம் என்று உச்சரித்துத் தான் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதுதான் தொன்று தொட்ட வழக்கம்.
அர்ச்சுனன்: பகவானே! தத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
பகவான்:அர்ச்சுனா! தத் எனும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே உள்ளது.எல்லாம் அதற்கே உரிமையானவை என்கிற எண்ணம் நம்பிக்கையாக அமைய வேண்டும் .இந்த திட நம்பிக்கையுடன் உலக பந்தங்களிலிருந்து முத்தி பெற விரும்பும் மனிதர்கள் பயனைக் கருதாமல் வேள்வி முதலிய கடமைகளை செய்துவர வேண்டும்.
அர்ச்சுனன்: பகவானே! சத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
பகவான்:பார்த்தா!பரமாத்மாவின் சத் எனும் திருநாமம் எல்லா இருப்பிற்கும் ( நிலைப்பாடு)சிரேஷ்டமான தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.போற்றத் தகுந்தது.சிரேஷ்டமான செயலுடன் “சத்” எனும் சொல் சேர்க்கப்படுகிறது.வேள்வி, தவம், தானம் இவைகளில் மனிதனுக்கு நிலைகூட “சத்” எனப்படுகிறது.எவ்வளவுதான் சொல்கிறது? அந்த பராத்மாவிற்காக செய்யப்படும் செயல்கள் யாவுமே “சத்” என்ப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! சத் என்பதற்கு மாறான அசத் காரியங்கள் எவை?
பகவான்:பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வி கொடுக்கப்படும் தானம், அநுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்களை சத் எனப்படும்.அசத் காரியங்களுக்கான பலன் இப்பிறவியிலும் இறந்த பிறகும் கூட ஏற்படுவதில்லை .அதாவது அசத்துக்கு எங்குமே நல்ல பலன் ஏற்படுவதில்லை.
அர்ச்சுனன்: மிகவும் ரகசியமான் அந்தத் தத்துவங்களைஅறிந்துகொள்ள தகுதி கொண்டவர் யார்?
கண்ணன்: இறையருளும் செல்வமுள்ள பக்தன் அந்தத் தகுதியை கொண்டவனாகிறான்.
இறைவன்( தேவன்) பரமாத்மா இறைவனின் அருட்செல்வம் நற்குணம் இதைத்தான் இறையருட்செல்வம் (சம்பத்) என்பர்.இதன் மூலமாக பரமாத்மாவை அடைய முடியும்.
அர்ச்சுனன்: கண்ணா இறையருட் செல்வங்கள் பெற்றவனின் ( இலட்சணங்கள்)என்ன?
பகவான்: அர்ச்சுனா!
1. என்னிடமே திட நம்பிக்கையுடன் ஈடுபட்டு அச்சமின்றி வாழுதல்.
2. அந்தக் கரணத்தில்( உள்மனதில்) என்னை அடைய வேண்டும் எனும் திடமான் தீவிர நிச்சயம் கொள்வது.
3. என்னை தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
4.சாத்வீக தானம் செய்வது.
5 ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
6 தன் கடமைகளை முறையாக செய்து வருதல்.
7.சாஸ்திரங்களின் தீர்ப்புகளை( சித்தாத்தங்களை) விழுமிய கருத்துகளாக கொன்டு சொந்த வாழ்வில் செயல்படுத்தல்.
8. தன் கடமைகளைச் செய்து வரும்போது ஏற்படும் இன்னல் இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்வது.
9. உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எளிமையாக வாழ்வது.
10. உடல்,உள்ளம் வாக்குகளால் எந்தப் பிராணிக்கும் சிறிதளவாகிலும்துன்பம் தராது இருத்தல்
11. கண்டதையும் , கேட்டதையும் , அறிந்ததையும் உள்ளபடியே இனிய சொற்களால் சொல்வது.
12. எவரிடமும் எதனிடமும் குரோதம் ( வெறுப்பேறிய வென்சினம்) கொள்ளாது இருத்தல் .எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்.
13. உலகியல் ஆசை அபிலாசைகளை துறப்பது.
14. அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால் எழும் கொந்தளிப்புகளை அடக்குவது
15.கோள் பேசாதிருத்தல்.
16. எல்லா உயிரினங்களிடத்திலும் இரக்கம் பரிவு கொண்டு பழகுதல்.
17. உலகியல் பொருட்களில் பேராசை கொள்ளாது இருத்தல்.
18. எந்நேரமும் மென்மையான இதயம் கொண்டிருத்தல்.
19. செய்யத்தகாததை செய்வதில் வெட்கப்படுதல்.
20 சபலசித்தம், அவசரப்படுதல் இரண்டும் இல்லாதிருத்தல்.
21. உடல், வாக்கு இரண்டிலும் செல்வாக்கும் பொலிவும் கொண்டிருத்தல்.
22. தண்டனை அளிக்கும் அதிகாரம் , திறமை இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
23. எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும் பொறுமையும் கொண்டிருத்தல்.
24. உடலை தூயதாக வைத்திருத்தல்.
25 பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
26. உயர்வு மனபன்மையும் செருக்கும் கொல்ளாது இருத்தல்.
பரதவம்சத்து வீரனே! இவையாவும் தெய்வீக சம்பத்து ( இறையருள் செல்வம்) பெற்ற மனிதனின் இலட்சணங்கள், இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்த தகுதி பெற்றவன்.
இந்த இடத்தில் ஓர் சந்தேகம் எழும்.மேற்கூறிய இலட்சணங்கள் கொண்ட மனிதன் தான் ஆன்டவனிடம் பக்தி செலுத்த தக்கவர்கள்.மற்றவர்கள் அல்லர்.தீய இயல்புகள் கொண்டவர்கள் பக்தி புரியக் கூடாதா?பக்தி புரியலாம்.தீயமனிதன் மன்ம்திருந்தி ஆண்டவனை வழிபட்டு மேன்மையை பெற முயன்றால் அவனுக்கு நற்பலன் கிட்டும்.அவன் விரைவிலேயே அறநெறி சீலராக மாறுகிறான்.திருந்திய மேம்பட்ட அந்த மனிதரிடமும் இறையருள் செல்வம் இடம் பெறுகிறது. பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 30.3
அர்ச்சுனன்: பகவானே! தெய்வீக சம்பத்துக்கு அருகதையற்றவன் எவன்?
கண்ணன்: அசுரத்தன்மையுள்ள செல்வத்தைக் கொண்டவன்.( அசு என்றால் உயிர் . உயிர் நிலைகளிலேயே பற்றுக்கொண்டு வாழ்பவர்கள்.அவைகளை விரும்புவர்கள்”அசுரர்” எனப்படுவர்.உடலைப்பேணி உடல் இன்பத்திற்கககவே வாழ்ந்தும்
வாழ விரும்பியும் இந்த உடலே நான் தான் என்று கருதுபவர் அசுரர்.நான் இறக்க மாட்டேன்.எப்போதும் வாழ்ந்து மகிழவேண்டும்.சுகபோகங்களை அநுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும்தான் அசுர சம்பத்து ( தீயசெல்வம்) எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவனின் அடையாளங்கள் எவை?
பகவான்: அர்ச்சுனா!
1. வெளிப்பகட்டுடன் செயற்கைப் பெருமையை காட்டிக் கொள்ளுதல்.
2.கர்வம் கொள்ளுதல் , பற்றுதல் கொண்டுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு செருக்குடன் பெருமைப்படுதல்.
3.செருக்கடைய வைக்கும் பொருட்களிலும் கருத்துக்களிலும் ஈடுபட்டு பெருமிதம் கொள்ளுதல்.
4. குரோதம் கொள்ளுதல்.
5.மனம், வாக்கு செயல்களில் கடுமையும் கொடுமையும் கொள்ளாதிருத்தல்.
6.நல்லது பொல்லாதது.உண்மை -பொய், கடமை -கடமையில்லாதது,செய்யத்தக்கது செய்யத்தகாததுமுதலியவற்றை பகுத்தறிந்து கொள்ளும் விவேகத்திற்கு மதிப்பு அளிக்காது இருத்தல்.
அர்ச்சுனா! இவைதான் அசுரசம்பத்தைப் பெற்ற மனிதருக்குள்ள அடையாளங்கள். இவர்கள் என்னிடம் பக்தி செலுத்த தகுதியற்றவர்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த இறையருட் செல்வத்திற்கும் அசுர இயல்பிற்கும் ஏற்படும் இயல்புகள் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! தெய்வீகச் செல்வம் பிறவிப் பெருந்தளைகளைப் போக்கி முத்தியெனும் வீடுவேறு அளிக்க வல்லது.அசுரசம்பத்து பந்தங்களை ஏற்படுத்தி ஜனன மரணச் சூழல்களில் சிக்க வைக்கிறது.எனவே இவற்றையிட்டு நீ கவலைபடாதே.நீ தெய்வீகச் செல்வத்தை பெற்றிருப்பவன்.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்து எப்படி பந்தங்களில் சிக்க வைக்கிறது?
கண்ணன்: அர்ச்சுனா! இந்த உலகில் இருவகைப் பிராணிகளின் படைப்பு நிகழ்கிறது.தெய்வீக சிருஷ்டி , அசுரத்தனமான சிருஷ்டிதெய்வீக சம்பத்து பற்றி விளக்கமாக சொன்னேன்.இப்போது அசுரசம்பத்து அசுர இயல்பான செல்வம் பற்றி விரிவாக கேட்டுக் கொள்.அசுரசம்பத்துள்ளவர் எதில் ஈடுபடவேண்டும்.எதிலிருந்து விலகியிருக்க வேன்டும் எனும் முறையை அறிந்து கொள்வதில்லை.அவர்களிடம்தூய நடத்தைகளும் இருப்பதில்லை.அவர்கள் சத்தியத்தை கடைப்பிடிப்பதில்லை.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொன்ட மனிதரிடம் ஆசார அநுஷ்டானங்கள் முதலியவை ஏன் இருப்பதில்லை? அவைகளை அவர்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?
கண்ணன்: அர்ச்சுனா! அவர்களுடைய நோக்கமே விபரீதமானது.அவர்களுடைய கருத்து இந்த உலகம் பொய்.இதிலுள்ள சாஸ்திரம்,அற்நெறி,தர்மம் எதுவும் உண்மையில்லை.இந்த உலகில் தர்மம்,அதர்மம்,புண்ணியம்,பாவம் முதலியவற்றிற்கு சிறிதும் மதிப்புக் கிடையாது.இந்த உலகை படைத்தவன் கடவுள் இல்லை.ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.அந்த இருபாலரின் சேர்க்கையால் இந்த மானிட சமூகமும் பிறந்தது.உலகம் உருவாகிற்று.ஆகையால் இந்த உலக உற்பத்திக்கு காரணம் காம இம்சைதான் .இதைதவிர வேறு எதுவும் எவருக்கும் காரணமில்லை.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! மேல்சொன்ன நாத்திக நோக்கை புகலடைந்த அவர்கள் தனது நித்திய அளிவற்ற சொருபமான ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை.அவர்களுடைய அறிவு கீழ்த்தரமாக உள்ளது.அவர்களுடைய செயல்கள் யாவும் அச்சமூட்டுபவை.உக்கிரமானவை..அவர்கள் இந்த உலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை , வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.
அர்ச்சுனன்: நாத்திக நோக்கைப் புகலடைந்த அசுரத்தன் மையர் என்ன செய்கிறார்கள்?
கண்ணன்: அவர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகிறார்கள். பகட்டு, செருக்கு, மமதைவெறி நிறைந்து செயல்படுகிறார்கள்.மிக மோசமான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.அவர்கள் மதிமயக்கம் காரணமாக பல தீய கருத்துகளைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர்குலைந்து வருகிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்களின் கருத்துக்கள் எத்தகையவை பகவானே?
கண்ணன்:அர்ச்சுனா அவர்கள் மரண காலம் வரையும் தொடரும் பெரும் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும் அடிமையாகிறார்கள்.பெளதீக பொருட்கள் சேகரிப்பதிலும் ,அவற்றைச் சேமிப்பதிலும் அவற்றால் அநுபவிப்பதிலுமே ஈடுபட்டிருப்பவர்கள்.உலகில் வாழ்வது , உண்டு உறங்கி சுகித்திருப்பதற்கே என்று தீர்மானிப்பத்ற்கு எல்லாமே இந்த சுயநல வாழ்க்கைதான் என்ற நிர்ணயத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்கள் எந்த நோக்கத்தை முன்னிட்டு செயல்படுகிறார்கள் பகவானே!
கண்ணன்: அர்ச்சுனா! ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் கொடூரமான அசுரத்தன்மை கொண்டவர்கள்.காமம் குரோதம்,மதம் மாச்சரியம் முதலிய தீய இயல்புகளை சரணடைகிறார்கள்.சுகபோகம் தான் வாழ்க்கை என்று நம்பி அநியாய வழிகளில் பொருளீட்டுகிறார்கள் இதற்காக பலமுறைகேடுகளையே மேற்கொள்கிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! அவர்களுடைய இலட்சிய ஆசைகள் எத்தகையவை?
கண்ணன்: அர்ச்சுனா! இன்று இவ்வள்வு பண்ம் சம்பாதித்துவிட்டோம்.இனி இதைக்கொண்டு எம் மனோரதங்களை நிறைவேற்றிக்கொள்வோம்.இவ்வள்வு செல்வம் இப்போது இருப்பது இந்தளவு செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்களுக்கு மேலும் என்னவெல்லாம் ஆசைகள் ஏற்படுகின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! அவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.அதாவது நாம் அந்த சத்துருவை அழித்துவிட்டோம்.இதேபோல் மற்ற எதிரிகளையும் அழிப்போம். நாம் சர்வ வல்லமை கொண்டவர்கள் .பல வெற்றிகளைக் கண்டவர்கள்.வலிமை மிகுந்தவர்கள்.சுகபோகிகள், செல்வந்தர்கள்,ஏராளமான மனிதர்கள் நம்மிடம் நம் தரப்பில் துணையிருக்கிறார்கள்.இங்கு நமக்கு நிகர் எவருமில்லை .எவரால் நம்மை எதிர்க்க முடியும்? நம் விருப்பப்படியே யக்ஞங்களைச் செய்வோம்.தான தர்மங்களைச் செய்வோம்.பிறகு ஆனந்தமாக கேளிக்கைகளில் மூழ்கி மகிழ்வோம்.இவ்வாறு எல்லாம் அறியாமையில் மதிமயங்கி மனேரதங்களை ( தனது தீவிர விருப்பங்களை)வளர்த்துக் கொள்கிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இப்படியானவர்கள் இறந்த பிறகு எந்தக் கதியை அடைகிறார்கள்?
கண்ணன்: அர்ச்சுனா! பலதரப்பட்ட பிரமைகளிலும் பேதமைகளிலும் சிக்கிய நாத்தியர்கள் மோக வலைக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இதனாலேயே பொருள்களைச் சேகரிப்பதிலும் அநுபவிப்பதிலும் தீவிர விருப்புடன் ஈடுபட்டிருப்பதால் கொடிய பயங்கரமான நரகத்தில் விழுகிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! சுகபோகங்களில் விருப்புற்று வாழும் அந்த அசுர சொத்துக்காரர்களை அழிவுப் பாதையில் தள்ளும் இயல்புகள் தன்மைகள் எவை?
கண்ணன்: இவர்கள் தம்மையே மதிப்பு மிக்கவர்களாகவும் தாங்களே மேம்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள்.இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள்.செல்வமும் செல்வாக்கும் இருப்பதில் செருக்குள்ளவர்கள்.
அர்ச்சுனன்: இத்தகையவர்கள் சுபகாரியங்களையும் செய்யலாம் அல்லவா?
கண்ணன்: ஆம் அர்ச்சுனா. செய்யலாம் செய்கிறார்கள்.ஆனால் பகட்டாக போலித்தனமாக செய்கிறார்கள்.தம் பெருமையை பறை சாற்றிக் கொள்வதற்காக செய்கிறார்கள்.முறைப்படி ஒழுங்காக செய்வதில்லை.செய்வதாக பெயர்பெறவே விரும்புகிறார்கள்.
அர்ச்சுனன்: ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் பகவானே?
கண்ணன்: காரணம் இதுதான்.அர்ச்சுனா அகந்தை , வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வென்சினம் இவைகளை சரணடைந்து இவைகளால் ஈற்கப்படுகிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்களுடைய தன்மைகள் மேலும் எத்தகையது?
கண்ணன்: அசுரத்தன்மையுள்ல அந்தமனிதர்கள் தம்மிடமும் பிறரிடமும் அந்தர்யாமியாக உள்ள என்னை வெறுக்கிறார்கள்.என்னிடமும் என் பக்தர்களிடமுள்ள பண்புகளை குற்றமாக தீமையாகக் கருதுகிறார்கள்.
அர்ச்சுனன்: இத்தகைய அசுரத்தன்மையின் விளைவுகள் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! அந்த வெறுப்புற்ற , குரூரமான, கொடிய இயல்புகளைக் கொண்ட மனிதர்களை மிகவும் நீசர்கள் புனிதமற்றவர்கள் என்பதால் அவர்களை நாய்,கழுதை, புலி, காக்கை,ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மறுபடியும் இறக்கும்படி செய்து வருகிறேன்.
அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகிறது பகவானே?
கண்ணன்: குந்தியின் மைந்தனே! அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் அசுரப் பிறவிகளாக பிறக்கிறார்கள். பிறகு அதனிலும் மோசமான நரகங்களில் வீழ்கிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் அதமப் பிறவியிலும் அதமகதியான நரகத்திலும் உழல்கிறதிற்கு காரணம் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! தீவிர இச்சை , குரோதம், பேராசை இவை மூன்றுவகையான நரகங்களுக்கு வாசல்கள்.இவையே மனிதனை கீழ்நிலையில் தள்ளுபவை.ஆகையால் இம்மூன்று தீய இயல்புகளையும் விட்டு விட வேண்டும்.
அர்ச்சுனன்: காமம், குரோதம், உலோபம் இம் மூன்று இழி இயல்புகளையும் துறப்பதால் என்ன ஆகும்?
கண்ணன்: குந்தியின் மைந்தனே! எந்த மனிதன் நரகத்திற்கு இட்டுச் செல்லும் அம்மூன்று இயல்புகளையும் அண்டவிடாமல் , தன் ஆத்ம சேஷமத்திற்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகிறான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களைத் துறந்து விட்டு , தன் மேம்பாட்டுக்காக , பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருவதால் அவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகிறான்.
அர்ச்சுனன்: மேலான நற்கதி ( பரமகதி)எவருக்குக் கிட்டுவதில்லை பகவானே?
கண்ணன்: எந்த மனிதர்கள் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து விட்டு தம் மனம் போனபடி நடந்து கொள்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பச் செயலாற்றுகிறார்களோ , நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற் கொண்டும் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு நற்கதி கிட்டுவதில்லை.மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ( உள்ளத்தூய்மை) ஏற்படுவதில்லை. உண்மையான சுகம் கிட்டுவதில்லை.நற்கதி கிட்ட வாய்பே இல்லை.
அர்ச்சுனன்: நல்ல செயல், தீய செயல் இவைகளை எப்படி இனம் கண்டு கொள்வது?
கண்ணன்: செய்யத்தக்கது.தகாதது பற்றி சாஸ்திரம் தான் பிரமாணம். இதை அறிந்து கொண்டு சாஸ்திரம் விதித்துள்ள கடமைகளைச் செய்து வரவேண்டும்.சாஸ்திரத்தில் மறுக்கப்பட்டதை ஏற்கப்படாததை செய்யலாகாது.செய்யத்தக்கது.தகாதது எனும் காரியங்களுக்கும் சாஸ்திரப்பிரமாணம் தான் எடுத்துக்காட்டு.
எளிதாகத் தீர்வு காணப்படும் இந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்
மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குதல்களுக்கு கதவு திறக்கும். இதுவே நீ எடுக்க வேண்டிய நிலை : “என்னால் முடிந்ததை நான் செய்வேன், உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது, இறைவன் உள்ளான்.”
கலங்காமல், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதே சரியான மனப்பான்மை.
தோல்விகளும் தடுமாற்றங்களும் இருந்தால் அவற்றை அமைதியுடன் நோக்கி, அமைதியோடு விடாப்பிடியாக அவற்றை நீக்குமாறு இறைவனது உதவியை நாடவேண்டும், மனங்கலங்கவோ, வேதனைப்படவோ அதைரியப்படவோ கூடாது.
நீயாகவே செய்ய முடியாததை அன்னையின் சக்தியை உதவிக்கு அழைப்பதன் மூலம் செய்து முடிக்கலாம். அந்த உதவியைப் பெற்று அதை உன்னுள் வேலை செய்ய விடுவதே சாதனையில் வெற்றி பெறுவதற்கு உண்மையான வழிமுறையாகும்.
இன்னும் மிகுதியாக இருக்கக்கூடிய கஷ்டங்களும் வெல்லப்படும் என்று உறுதியாக நம்பு. புறஜீவன் அஞ்சி நடுங்கத் தேவையில்லை – அன்னையின் சக்தியும் உன்னுள் உள்ள பக்தியும் வழியில் குறுக்கிடும் தடைகளையெல்லாம் வெல்லப் போதுமானவை ஆகும்.
நீ துக்கத்திற்கோ, மனமுடைந்து போவதற்கோ இடங்கொடுக்கக்கூடாது – அதற்கு நியாயமே இல்லை. அன்னையின் அருள் ஒரு கணங்கூட உன்னிடமிருந்து நீக்கப்படவில்லை.
(எங்கள்) பாதுகாப்பு உணக்கு உண்டு, இனி நீ அஞ்சவோ துக்கப்படவோ தேவையில்லை, இறைவன் மீது நம்பிக்கை வை, இவற்றையெல்லாம் கடந்துபோன ஒரு தீக்கனவைப்போல் உதறிவிடு. எங்களுடைய அன்பும் அருளும் உனக்கு உண்டு என்பதை நம்பு.
மிகச் சிறந்த கட்டுரை